சிங்கார மாய்விளங்கு நாய்க்குட்டியே ----எனைச்
சீண்டியே காயம்செய்யும் வெள்ளைக் குட்டியே
பங்காக நொறுப்பளமே தந்துவிட்டாலும் --- காலால்
பறண்டிஎனைத் தொல்லைசெயும் சின்னக்குட்டியே.
அருஞ்சொற்பொருள்:
காயம்செய்தல் -- காலநகத்தால் கிழித்துவிடுதல்.
பறண்டு - காலால் ( நகத்தால் )கீறு(தல்). கால்சிதைதல், நகம்பதிதல் என்றும்
கூறுப.
நொறுப்பளம் - பிஸ்கட்.
நகம்: உடலின் பகுதிகளில், வெண்மையாக இருந்து ஒளி தருபவை பற்களும் நகங்களும். இவற்றுள், நகம் என்பதுமட்டுமே ஒளிசெய்தல் என்னும் பொருளதாம், நகுதல் என்னும் தமிழ் வினையினின்று போந்துள்ளது. ஆகவே காரண இடுகுறியாகின்றது. உகிர் என்பது இன்னொரு பெயர். உ+ கு+ இர் என்று அமைவதால், முன்னுள்ளது என்ற பொருடரும். உ = முன், கு - சேர்ந்து, இர் - இருப்பது என்ற குறிப்பைத் தருவதுடன், இர் விகுதியாகவும் இருபண்புடைமை கொள்கின்றது. எல்லா விகுதிகளும் இவ்வாறு பொருள்தருபவை அல்ல.
பழைய மொழியான தமிழ், இத்தகு உயர்வளர்நிலை தன் சொற்களிற்காட்டுவதால், மிக்கப் பழமை நாளிலே சிறந்து வளர்ந்துவிட்டதென்பது தெரியும்
கீழுள்ள கவிதை
தெருட்டுதல் - மனத்தெளிவு தருதல்
பரந்த - பரவிய
உடை - அதன் தோலின் முடியைக் குறிக்கிறது
மாண் திணிந்த -- மிகச் சிறந்த,
கனிவு = முதிர்ந்து இனிக்கும் அன்பு
விளையாட ஆளில்லையென்றால் இது அமைதியாய் இருக்கும்!
இதுவும் காயம் ஏற்பட்டபின் எடுத்ததுதான். அது களிப்பில் ஆடிக்கொண்டிருந்தபோது எதுவும் எடுக்கமுடியவில்லை,
இது அதன் ஆட்டம் தொடங்குமுன் எடுத்தது.
நாய்க்குட்டியின் அன்பு ( கவிதை)
தனிமையை ஓட்டுகின்ற இனிமை ஆட்டம்
தாவித்தாவி ஆடுவதில் தனக்கீ டில்லை!
பனிபரந்த வெண்ணிறத்தில் உடையு டுத்து
பாணிகளில் மாண்திணிந்த நடையி னோடு
கனிவுடனே முத்தமிட்டு அணைக்க வந்து
காட்டுகின்ற காட்சிதனை என்ன சொல்வேன்,
மனிதரிலே யாருமிதைப் போல அன்பை
மறுபடியும் மறுபடியும் தெருட்டு வாரோ?