துடை என்ற சொல்லைக் கவனிப்போம். மேசை முழுவதையும் துடைத்தால்தான் அது "துடைத்த மாதிரி இருக்கும்" என்ற நிலை உண்மையானால், சிறிது ஒரு புறம் துடைத்துவிட்டு எல்லாம் முடிந்தது என்று சொன்னால், அது சொல்பவனுக்கே மனநிறைவளிக்காது. மேசையின் மேல்புறத்தையாவது முற்றும் துடைக்கவேண்டும். ஆனால் துடுப்பு என்பது முயற்சியைக் குறிக்கிறது. அது நட்டாற்றில் விட்டு நீங்காத ஒரு முயற்சி.. துடுப்பு எடுத்தால் கரைசேரும் வரை அதைப் பயன்படுத்தி நீரைக் கடத்திக் கரை சேரவேண்டும். பாதியில் விட்டால் முழுமை ஆகாத களங்களிலே துடை, துடுப்பு முதலிய சொற்கள் உலாவருதலைக் காணலாம்.
துடிப்புடன் செயலாற்றுவது என்பதும் ஒரு எழுச்சியுடன் விரைந்து செயலாற்றுதல் குறிக்கும்.
துட்டு என்ற பணம் குறிக்கும் சொல்லும் துடு என்ற முற்செலவுக் கருத்தையும் உடனுக்குடன் செல்லுதல் என்பதையும் ஒருசேரக் குறிக்கும்.
ஆகவே, துடு என்ற அடிச்சொல் பொருத்தமாக இவ்வாய்வுக்கு வருகிறது. ஒரு அழுந்திறுக்கி ( rubber band ) போல அப்படியே பிடித்துக்கொள்கிறது. செறிந்து பற்றுகிறது.
துடி என்னும் சொல்லின் முதலாகிய "து" என்பதும், சிறிய இடையில் உடம்பின் மேல் இறுகப் பற்றிப் பொலிவதை நன்றாகவே குறிக்கிறது. ஒட்டுதல், மென்மையுடன் தொடுதல் என்றும் பொருள்தரும்.
பகைவரை அழித்தாடும் கூத்து "துடிக்கூத்து" என்பதும் பொருந்துவதே. இதற்கு ஒரு பொருத்தமான சாத்திரமும் இருந்தது.
பகைவர்பால் எழுந்து செல்ல, உதவிய படைஞர் நிலை துடிநிலை.
வற்றிய நீரில் துடிக்கும் சிறுமீனும் நம் கண்முன் வந்துநிற்கிறது.
பழந்தமிழ் நாட்டில், போருக்குமுன் துடித்தாடி, பவைவீரர்களின் மறப்பண்பை வெளிக்கொணர்ந்தவன் துடியன் என்பதை இவ்வாய்வு நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
பண்டைத் தமிழரின் நான்கு நிலங்களிலும் ஊடுருவிப் படைகளுக்குத் துடியன் துடிப்பினை ஊட்டினான். அதற்கு அவன் கண்டுபிடித்துப் பயன்படுத்தியதும் "துடி" என்றே போற்றலுற்றது. துடு என்ற அடிச்சொல், இப்பொருளைத் தருகிறதென்பதை அறிந்து, அது நாலு நிலங்களிலும் முன்னெடுத்துச் செல்லப்பட்டதென்பதை தெளிவாகக் காண்க. அந்நிலங்களாவன: குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் என்பன ஆகும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.