வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

பகிஷ்கரித்தல் - விலக்குறுத்தல்.

விலக்கிவைத்தல், ஒதுக்கிவைத்தல், ஒதுக்கிவைத்துத் தரம்தாழ்த்துதல் என்றெல்லாம் பேச்சுவழக்கில் பொருள்தருவது --  பகிஷ்கரித்தல் என்னும் என்னும் வினைச்சொல். சங்கதம் என்று இதைக் கருதலாம்,  இச்சொல்லில் "  ஷ்  " வந்திருத்தலே அதற்குக்  காரணமாகும். 

ஆனால் " ஷ் " வந்துவிட்டாலே அது சங்கதம் ஆகிவிடாது.   நம் புலவர்கள் சங்கதம் என்று சொல்வது "  சமத்கிருத"  மொழியை.

மனத்தை ஒன்றிலோ அல்லது ஆடவனொருவன்பாலோ  இடுகின்றோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  அதற்கு ஒரு புதுச்சொல் வேண்டுமானால்,  இடு+ அம் > இட்டம் > இஷ்டம் என்ற சொல்லைப் படைத்துக்கொள்ளலாம். ஊர்மக்கள் இதை இசுட்டம், இஸ்டம், இஷ்டம் , [ (  அயலொலி நீக்கி ) :  இட்டம் ( இது புலவர் அமைப்புச் சொல்)]  எனப்பலவாறு ஒலித்து வழங்குவர்.  இந்திய விடுதலைக்குப் பிறகு மக்கள் படிப்பு மேன்மை அடைந்துள்ளபடியால்,  சில வடிவங்கள் மறைந்திருக்கவேண்டும்.

இன்னொரு சொல்லும் இருந்தது.   இடு>  இடுச்சி(த்தல்) > இச்சி> இச்சித்தல் என்பது.  அதுவும் ஒருபுறம் இருக்கிறது.  இங்கு டு என்ற கடின ஒலி விலக்குண்டது.  இச்சொல்லிலும் மனம் இடுதலே அடிப்படைக் கருத்து.  ஒரு டு-வை எடுத்துவிட்டால்  ஏதோ சிங்கியாங் நிலப்பகுதியிலிருந்து வந்த புதுச்சொல் போல இது  புலவனையும்  மருட்டவல்ல சொல்.---- அமைப்புபற்றி ஆய்கின்றபொழுது.

இத்தன்மைபோல்,   "பகிஷ்"  என்பதில்வரும் ஷ் ஒரு வெற்றுவேட்டுதான்.

பகு + இஷ் + கு + ஆரம் என்று பிரிக்கவும்.  அதாவது வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று நம் காரியங்களில் ஈடுபாடு கொண்டவர்களைப் பிரித்துவிட்டால்,  --  இங்கு காட்டப்பட்ட சொல்லையே பயன்படுத்திச் சொல்வதானால் :  " பகுத்துவிட்டால் ",    அத்தகைய வேண்டாதவர்களை ஒரு புறத்தே  இட்டு வைத்துவிடுவோம்.  கு என்பது சேர்தல் அல்லது அடைதல் குறிக்கும் இடைநிலை.  இது ஒரு வேற்றுமை உருபாகவும் வேறிடங்களில் இருக்கும்.  இங்கு அதற்கு அந்த வேலை இல்லை.  ஒரு சேர்ப்பு அல்லது இணைப்பு குறிக்கும். மேற்கண்டவாறு பகுக்கப்பட்டோர், ஒன்றாகுவர் அல்லது ஒன்றாக்கி இடப்படுவர்.  இப்போது, பகு, இடு, கு எல்லாம் விளக்கிவிட்டோம். ஆரம் என்பது நிறைவு என்று பொருள்படும் ஒரு விகுதி அல்லது பின்னொட்டு. இப்போது பாருங்கள்:

பகு+ இடு + கு + ஆரம் >  பகிடுகாரம்,  இதை மெலிவு செய்ய, ஒரு ஷ்.  பகி(ஷ்)காரம் >  பகிஷ்காரம் ஆகிவிட்டது.  பகுத்து ஒதுக்கப்பட்டோர் இந்தச் சொல்லுக்கு ஏற்றவர்கள் ஆகிவிடுகின்றனர்.

எழுதவேண்டும் என்று யாம் நினைத்த சில, சுருக்கம் கருதி, எழுதவில்லை. இவ்வளவில் நிறுத்தம் செய்வோம்.

நாம் எதையும் இயன்றவாறு பகுக்கலாம்.  கோயிலில் கிட்டிய ஒரு வடையை இரண்டாகக் கிள்ளி,  அருகில் நிற்கும் பையனுக்கு ஒரு பங்கு கொடுத்துவிட்டு, மிச்சத்தை வாயில் போட்டுக்கொள்வதும் "பகுத்தல்"தான்.  ஆனால்  இந்தப் பகுத்தல் வினை,  நிலத்தில் பதுங்குவதற்குப் பள்ளம் தோண்டி அதில் பதுங்கியவர்கள் இன்னும் நிலவேலை செய்தவர்கள் அமைத்த சொல்லென்று நாம் அறிந்துகொள்ளலாம்.  பள்ளம் என்ற சொல்லில் அடிச்சொல் பள்.  ஒரு பள்ளம் வெட்டி, நிலத்தை இரு பாகமாக்க, அல்லது தேவைக்கு ஒரு குழி உண்டாக்க ,  "பள்குதல்"  செய்வர்.  பள்ளம் உண்டாக்கி, இருகூறு செய்வர். அல்லது பள்ளத்தில் பதுங்கிக்கொள்வர்.  ( படையணியினர்,  திருடர்,  வயல்வேலைகளில் ஈடுபடுவோர் முதலியோர் இது செய்வர். )  இச்சொல்,  பழ்குதல் என்றும் உலவியதுண்டு.

பள் > பள்ளம்.

பள் >  பள்கு >  பள்குதல்.

பள்குதல் >  ( ள் இடைக்குறைந்து ) பகுதல் > பகுத்தல் ( பிறவினை).

பழ்கு > பகு எனினுமாம். இடைக்குறை.

நேரம் கிட்டினால் இதை இன்னோர் இடுகையில் ஆழ்ந்து ஆய்வு செய்யலாம்.

பகு இடு கு ஆரம் என்பதை ஓரளவு விளக்கமாக்கியுள்ளோம். பகிடுகாரம்.

பகிடி, பகடி, பகிடிக்கதை ---  இவற்றையும் விளக்க நேரமிருக்குமா என்று பார்க்கலாம்.

அறிக மகிழ்க.   

மெய்ப்பு பின்

[அம்மாவுடன் மருத்துவமனைக்குச் சென்று வந்தபின், நேற்றிலிருந்து சளி, காய்ச்சல், தும்மல் உள்ளன. எழுத்துபிழைகள் இருந்தால் திருத்திக்கொண்டு வாசிக்கவும்  நமக்கு உதவும் திருமதி ஷீபா  அவர்களுக்கும் உடல்நலம் சற்று குன்றியுள்ளமையால் ஓய்வில் உள்ளார். நன்றி .]


புதன், 9 பிப்ரவரி, 2022

திங்கள் முதல் ஞாயிறு வரை!

[  அன்பர் ஒருவர் ஒவ்வொரு நாளும் வாழ்த்துச்செய்தி அனுப்புவார். நானும் அவருக்கு பதிலனுப்புவேன்.  என் பதில்களில் இருந்த சொற்களைக் கோவை செய்து,  இங்கு ஒரு கவிதைபோல் வடித்துள்ளேன். வாசித்து மகிழ்க. அழித்துவிடலாம் என்று எண்ணியபோது அதிலொரு கவி இன்பம் ஒளிந்துகொண்டிருப்பது தெரிந்தது.  அழிக்காமல் இவ்வாறு எழுதினேன்.  நன்றி ]



திருவெலாம் வரவாய் ஆக்கும்

திங்கள்தித் திக்கும் நாளே!

செல்வமே சேர்க்கும் செவ்வாய்

செவ்வனே நிகழும் யாவும். 

புதுமைக்குப் புதுமை செய்யும்

புதன்பி(ன்)னே வியாழன் வந்து,

வியப்புற இனிமை சேர்க்கும்

வெள்ளியால் விரிந்த நன்மை!


மகிழ்ச்சியோ மலையாய் ஆகும்.

சனியினால் தனித்த வெற்றி.

சோதனை மாறக் கண்டு

சாதனை யாகக் கொள்வீர்

ஞாயிறு தன்னில் நீங்கள்

நாயக  மாய்ச்சொ  லிப்பீர்/

வழிவழி முழுமை பெற்று

வாழ்வெலாம் வெற்றி  வாழ்வே.




தாங்கலாக வைத்த குத்துக்கல் - அதற்குப் பெயர்.

கட்டடத்தைக் கட்டிக்கொண்டு இருக்கின்ற போது,  அங்குப் பணிபுரியும் கட்டுமான வல்லுநர்,  கரைத்து ஊற்றி இறுக்கிய ஒரு தட்டுக்குத் தாங்கலாக,  அல்லது கட்டுமானத்தை உறுதிப்படுத்து மாறு,  ஒரு செங்குத்தான கல்லை நட்டு நிறுத்துகிறார்.  கட்டுமானத்தில் கையாளப்பெறும் பலவேறு திறவேலைப்பாடுகளில் இதுவும் ஒன்று.  மற்ற திறங்களுக்கெல்லாம் நமக்குப் பெயர் தெரியவில்லை.  அதற்குக் காரணம், நாம் அந்தத் தொழிலில் இல்லை. இந்தக் கல்நாட்டுக்கு மட்டும் எப்படியோ நமக்குப் பெயர் தெரிந்து,  அதை இப்போது ஆராயப் புகும் "பாக்கியத்தை" ( நற்பாகத்தை) நாம் இன்று பெற்றிருக்கிறோம்.

உலகில் எல்லாம் தெரிந்தவன் எவனுமில்லை. நமக்குத் தெரியாத ஒன்றுக்கு அருகில் உள்ளோன் விடைகூற இயல்பவனானால், அந்த நேரத்தில் நமக்குப் பேராசிரியன் அவனே  ஆவான்.  அவனுக்கு நாம் நன்றி நவிலக் கடன் கொண்டுள்ளோம்  அதனால்தான் "கல்லாதது உலகளவு" என்றாள் நம் ஒளவைப் பாட்டி.

ஒரு செங்கல்லைச் செங்குத்தாக நிறுத்தி, மேலிருப்பதைத் தாங்குமாறு அப்பணியாளன் நிறுத்துகிறான்

நாம் அதற்குப் பெயர் வைக்கவேண்டுமென்றால்:

குத்து + தாங்கல் > குத்துத்தாங்கல் என்று சொல்வோம். அதில் மனநிறைவும் கொள்வோம்.

இப்படி வைத்த பெயர், நாளடைவில் திரிந்தது.

குத்து + தாங்கல் > குத்துத்தாங்கல் >  குத்தாங்கல்   ஆயிற்று.

இச்சொல் திரிந்தமைந்ததற்குக் காரணம்,   நாவிற்கு ஒலித்தடை ஏற்படுத்துதல்போல் இச்சொல் வருவதால்,  அதை அகற்றுமுகத்தான்,  "துத்" என்ற அசை விலக்குறுகின்றது.

இத்தகைய -  மக்களால் நிறுவப்பட்ட -  ஒலித்திறச் சொற்களை நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது  எந்தச் சொல்லும் திரிபே அடையாமல், எல்லோரும் எழுதியவையே சரி என்று பேசிக்கொண்டிருந்திருந்தால், தமிழில் திரிபுகள் ஏற்பாடாமலே உலகம் சென்றிருக்கும்.  கன்னடம், களிதெலுங்கு, கவின்மலையாளமென்ற பல்வேறு மொழிகள் ஏற்படாமலே இருந்திருக்கும்.  சீனாவில்கூடக் கிளைமொழிகள் என்பவை ஏற்படாமலே காலம் ஓடியிருக்கும்;  சாவகத்தீவில் பல மொழிக்கிளைகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை.  ஐரோப்பா முழுமைக்கும் ஒரே மொழிதான் கோலோச்சி யிருக்கும். உலகின் உண்மை நடப்பு அப்ப்டி இல்லை.  எனவே சொல் திரிபு என்பது நிகழ்ந்தமை ஒரு வியப்பன்று.  நிகழாமை இருப்பின் அதுவே வியப்பு என்பதை நாம் உணர்ந்துகொள்கின்றோம்.

தொல்காப்பியர் கலத்திலே பல திரிசொற்கள் இருந்தன.   ஆகவே அவ்வறிஞன்  இயற் சொல்லை அடுத்து திரிசொல்லை ஓதினான்.  திரிசொற்கள் பல திரட்டித் தன்னகத்து அடைந்துவைத்துக்கொண்ட மொழி பின்னாளில் சமத்கிருதமாகிற்று.  சில திரிபுகள் தமிழிலே தங்கிவிட்டன. மொழியை வளம்செய்தன.

மக + கள் >  மக்கள் என்று எப்படி வரலாம்?    மகக்கள் என்றன்றோ வரவேண்டும்?  இடையிலிருந்த ஒரு ககரம் எப்படி வீழ்ந்தது.  பெரிய வழு, விண்போல் மிகுந்த பெருந்தவறு என்று குதிக்கலாம். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. நாமெல்ல்லாம் இந்த உலகின் முகத்திலிருந்து காணாமல் கரைந்துபோன பின்பும், இச்சொற்கள் இருக்கும், நாம் இருப்போமா?  குத்தாங்கல் என்பதும் அதுபோலும் ஓர் அமைப்பே ஆகும்.  அதுவே விதியாகிவிட்டது என்றும் ஓதலாம்,. பல கிட்டுமானால்.  இதுபோல் வேறு குறுக்கல்கள் இல்லை என்று நாமே மகிழ்ந்திருந்துவிடக் கூடாது.  பொறுமையாகத் தேடிப்பார்த்து இருந்தால் அதுவே விதியாகவோ தலைவிதியாகலோ ஆகிவிட்டதென்று கொழுந்துநீர் ( டீ) கிடைத்தால் ஆனந்தம் அடையவேண்டியதுதான். 

பக்கு என்பது பகுதி என்னும் பொருள்தரும் சொல்.  குடுக்கை என்பது ஒன்றாகத் தைக்கப்பட்ட , தோளில் மாட்டும் பைகள்  தொகுதி.

பக்கு + குடுக்கை >   பக்குடுக்கை என்று மாறிற்று. ஒரு குகரம் தொலைந்து, பக்குடுக்கை ஆயிற்று.

குடு >  குடவு;

குடு > குடா  ( குடாக்கடல் )

குடு > குடை

குடு > குடல்

குடு > குடுக்கை1

1என்ன தெரிந்துகொள்கின்றோம்?  குடுக்கை என்பது என்ன பொருள்தரும் சொல்?

குத்து + ஆம் + கல் > குத்தாங்கல் என்று சொல்லி இரு பிறப்பியாகக் கொள்ளலாம், தப்பிக்கலாம்.

இன்னொரு நாள் தொடர்வோம்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்