கட்டடத்தைக் கட்டிக்கொண்டு இருக்கின்ற போது, அங்குப் பணிபுரியும் கட்டுமான வல்லுநர், கரைத்து ஊற்றி இறுக்கிய ஒரு தட்டுக்குத் தாங்கலாக, அல்லது கட்டுமானத்தை உறுதிப்படுத்து மாறு, ஒரு செங்குத்தான கல்லை நட்டு நிறுத்துகிறார். கட்டுமானத்தில் கையாளப்பெறும் பலவேறு திறவேலைப்பாடுகளில் இதுவும் ஒன்று. மற்ற திறங்களுக்கெல்லாம் நமக்குப் பெயர் தெரியவில்லை. அதற்குக் காரணம், நாம் அந்தத் தொழிலில் இல்லை. இந்தக் கல்நாட்டுக்கு மட்டும் எப்படியோ நமக்குப் பெயர் தெரிந்து, அதை இப்போது ஆராயப் புகும் "பாக்கியத்தை" ( நற்பாகத்தை) நாம் இன்று பெற்றிருக்கிறோம்.
உலகில் எல்லாம் தெரிந்தவன் எவனுமில்லை. நமக்குத் தெரியாத ஒன்றுக்கு அருகில் உள்ளோன் விடைகூற இயல்பவனானால், அந்த நேரத்தில் நமக்குப் பேராசிரியன் அவனே ஆவான். அவனுக்கு நாம் நன்றி நவிலக் கடன் கொண்டுள்ளோம் அதனால்தான் "கல்லாதது உலகளவு" என்றாள் நம் ஒளவைப் பாட்டி.
ஒரு செங்கல்லைச் செங்குத்தாக நிறுத்தி, மேலிருப்பதைத் தாங்குமாறு அப்பணியாளன் நிறுத்துகிறான்
நாம் அதற்குப் பெயர் வைக்கவேண்டுமென்றால்:
குத்து + தாங்கல் > குத்துத்தாங்கல் என்று சொல்வோம். அதில் மனநிறைவும் கொள்வோம்.
இப்படி வைத்த பெயர், நாளடைவில் திரிந்தது.
குத்து + தாங்கல் > குத்துத்தாங்கல் > குத்தாங்கல் ஆயிற்று.
இச்சொல் திரிந்தமைந்ததற்குக் காரணம், நாவிற்கு ஒலித்தடை ஏற்படுத்துதல்போல் இச்சொல் வருவதால், அதை அகற்றுமுகத்தான், "துத்" என்ற அசை விலக்குறுகின்றது.
இத்தகைய - மக்களால் நிறுவப்பட்ட - ஒலித்திறச் சொற்களை நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது எந்தச் சொல்லும் திரிபே அடையாமல், எல்லோரும் எழுதியவையே சரி என்று பேசிக்கொண்டிருந்திருந்தால், தமிழில் திரிபுகள் ஏற்பாடாமலே உலகம் சென்றிருக்கும். கன்னடம், களிதெலுங்கு, கவின்மலையாளமென்ற பல்வேறு மொழிகள் ஏற்படாமலே இருந்திருக்கும். சீனாவில்கூடக் கிளைமொழிகள் என்பவை ஏற்படாமலே காலம் ஓடியிருக்கும்; சாவகத்தீவில் பல மொழிக்கிளைகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. ஐரோப்பா முழுமைக்கும் ஒரே மொழிதான் கோலோச்சி யிருக்கும். உலகின் உண்மை நடப்பு அப்ப்டி இல்லை. எனவே சொல் திரிபு என்பது நிகழ்ந்தமை ஒரு வியப்பன்று. நிகழாமை இருப்பின் அதுவே வியப்பு என்பதை நாம் உணர்ந்துகொள்கின்றோம்.
தொல்காப்பியர் கலத்திலே பல திரிசொற்கள் இருந்தன. ஆகவே அவ்வறிஞன் இயற் சொல்லை அடுத்து திரிசொல்லை ஓதினான். திரிசொற்கள் பல திரட்டித் தன்னகத்து அடைந்துவைத்துக்கொண்ட மொழி பின்னாளில் சமத்கிருதமாகிற்று. சில திரிபுகள் தமிழிலே தங்கிவிட்டன. மொழியை வளம்செய்தன.
மக + கள் > மக்கள் என்று எப்படி வரலாம்? மகக்கள் என்றன்றோ வரவேண்டும்? இடையிலிருந்த ஒரு ககரம் எப்படி வீழ்ந்தது. பெரிய வழு, விண்போல் மிகுந்த பெருந்தவறு என்று குதிக்கலாம். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. நாமெல்ல்லாம் இந்த உலகின் முகத்திலிருந்து காணாமல் கரைந்துபோன பின்பும், இச்சொற்கள் இருக்கும், நாம் இருப்போமா? குத்தாங்கல் என்பதும் அதுபோலும் ஓர் அமைப்பே ஆகும். அதுவே விதியாகிவிட்டது என்றும் ஓதலாம்,. பல கிட்டுமானால். இதுபோல் வேறு குறுக்கல்கள் இல்லை என்று நாமே மகிழ்ந்திருந்துவிடக் கூடாது. பொறுமையாகத் தேடிப்பார்த்து இருந்தால் அதுவே விதியாகவோ தலைவிதியாகலோ ஆகிவிட்டதென்று கொழுந்துநீர் ( டீ) கிடைத்தால் ஆனந்தம் அடையவேண்டியதுதான்.
பக்கு என்பது பகுதி என்னும் பொருள்தரும் சொல். குடுக்கை என்பது ஒன்றாகத் தைக்கப்பட்ட , தோளில் மாட்டும் பைகள் தொகுதி.
பக்கு + குடுக்கை > பக்குடுக்கை என்று மாறிற்று. ஒரு குகரம் தொலைந்து, பக்குடுக்கை ஆயிற்று.
குடு > குடவு;
குடு > குடா ( குடாக்கடல் )
குடு > குடை
குடு > குடல்
குடு > குடுக்கை1
1என்ன தெரிந்துகொள்கின்றோம்? குடுக்கை என்பது என்ன பொருள்தரும் சொல்?
குத்து + ஆம் + கல் > குத்தாங்கல் என்று சொல்லி இரு பிறப்பியாகக் கொள்ளலாம், தப்பிக்கலாம்.
இன்னொரு நாள் தொடர்வோம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்