அன்பின் பிணைப்போதான் ஆர்வளம் சேர்செடிகள்
ஒன்றின் உடல்தன்னை ஒன்றுபற்றி ---- மென்குழைவில்
தோய்ந்திவ் வுலகின்பம் துய்த்தெழுந்து தோன்றின
ஆய்ந்துணரா அன்புத் திறம்.
இதன்பொருள்: ஆர்வளம் சேர்செடிகள் - நல்ல வளமுடன் மேலெழும் இந்தச் செடிகள், அன்பின் பிணைப்போ --- அன்பின் பிணைப்பையோ காட்டுகின்றன? ---- மென் குழைவில் - மென்மையாக மனம் குழைவினால், ஒன்றின் உடல்தன்னை ஒன்றுபற்றி --- கட்டிப்பிடித்துக் கொண்டது போல, தோய்ந்து -- ஆழ்ந்து, இவ்வுலகின்பம் துய்த்து எழுந்து --- பற்றின் காரணமாய் வரும் இவ்வுலகின் உடலின்பம் பெறுவதுபோல், தோன்றின - அப்படிக் காட்சி அளிக்கின்றன, ( இது) ஆய்ந்துணரா - ஆராய்ச்சி செய்து உணரவியலாத, அன்புத் திறம் - அன்பின் வந்த வன்மை.
குவைத்தொட்டி மூடி குறுகும் இடத்தில்
நவைதீர்ந்த நல்லழகாய் நட்டார் ---- இவைசீர்த்த
தூயநக ருக்குத் துளிகவின் சேர்த்தன
மேய நலச்சித்தம் மேல்.
இதன் பொருள்: குவைத்தொட்டி மூடி(க்குக்) குறுகும் இடத்தில் - அடுக்குமாடி வீட்டில் குப்பை கொட்டும் வீழ்பாதையின் மூடி இருக்கும் இடத்தில், நவைதீர்ந்த நல்லழகாய் நட்டார் -- குற்றமொன்றும் இல்லாத இனிய அழகினைச் சேர்க்கும் பொருட்டு, இச்செடிகளை நட்டுவைத்தனர்; இவை - இவ்வாறு அழகுறுத்துதலானது, தூய நகருக்கு - உலகின் மிக்கத் தூய்மையான நகரென்று பெயரெடுத்த சிங்கப்பூருக்கு, துளி கவின் - ஒரு சிறு திவலை போலும் அழகையாவது சேர்த்துள்ளன, மேய - மேற்கொண்ட, நலச்சித்தம் - நல்ல சிந்தனை, மேல் - மிகவும உயர்ந்தது ஆகும்.
மூடிக்கு : இது மூடி என்று வந்தது, குறுகுதல் - சென்று இணைதல் என்னும் கருத்து.
மூடி குறுகும் - மூடி குறுகும் என்பது வலி மிகவில்லை, காரணம் " மூடிக் குறுகும்" என்றால் பொருள் வேறுபடும். மூடியின்பால் குறுகும் எனினும் ஆகும். எனின், இன் , பால் என்பன தொக்கி நின்றன.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
இப்பாடல்களை அலகிட்டு நோக்குக. செப்பலோசையைச் சரிபார்ப்பது இன்னும் நடைபெறவில்லை. வழுவின் தெரிவிக்கவும்.