திங்கள், 31 ஜனவரி, 2022

பிரேதம் சொல்

 மனிதன் பலவகையான வாழ்முறைகளிலும் பல துன்பங்களும் பட்டு வாடித்தான் இன்றைய உன்னத நிலையை அடைந்தான். தொடக்கத்தில் அவன் மரங்களில் கிளைகளில் வீடமைத்துத் தங்கிக்  காட்டில் கொடிய விலங்குகளிடமிருந்து தப்பித்து, இற்றை நிலையை அடைந்தான். இன்று பிற கோள்களுக்குக் குடிமாறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.  ஆனால் அவன் கடந்துவந்த காட்டாறுகள் எத்தனை எத்தனை.

இறந்த மனிதனின் உடல், மண்ணில் புதையுண்டுவிட்டால் அது அழுகி வெளியிடும் கூரிய வீச்சம் குறைந்து, சுற்றுப்புறம் தூய்மைப்படும் என்பதை மனிதன் கண்டபின் புதைகுழிகள் அமைக்கத் தெரிந்துகொண்டான்.  புதைகுழிகட்கு  அதிக நிலம் ஒதுக்கினால் விளைச்சல் வேளாண்மைக்கு  வேண்டிய நிலம் குறைவடையும் என்பதால் அவன் பிணங்களை எரித்துப் பலவாறு நிலப்பயன்பாட்டினைத்  திறமையாக்கிக் கொண்டான். பல்வேறு இனத்தாரும் இதில் முன்னேற்றம் கண்டனர்.

சில குழுக்களிடை மதக்கருத்துகள் நிலைகொண்ட படியினால், எரித்தவர் எரித்துக்கொண்டே இருக்கவும் புதைத்தவர் புதைத்துக்கொண்டே இருக்கவுமான  மாறுதல் இல்லா ஏற்பாடுகள் ஆங்காங்கு உறுதிகொண்டன.

இவற்றை நாம் மாந்த வளர்ச்சி நூல்களிலிருந்து அறிந்துகொள்கிறோம்.

இவை எல்லாம் எவ்வாறாயினும், பிற்காலத்தில் இறந்த உடலைப் புதைக்கும் தொழில்திறமை உடையவர்கள் தோன்றினர்.  எரிக்கும் திறமை உடையாரும் தோன்றினர்.  ஒரு இறந்தவனின் உடலை இத்தகையோரிடம் ஒப்புவித்துவிடும் வழமை உண்டாயிற்று.

அப்போதுதான் இறந்தவனின் உடலை, தம்வீட்டார் முறைப்படி செய்யும் சடங்குகள் முடிந்தவுடன் பிற திறனுடையாரிடத்து ஒப்புவிக்கும் வழக்கம் உண்டாயிற்று.  இத்தகு திறனுடையவர்கள், தமிழர் எண்ணிய குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற நால்வகை   நிலங்களில் மட்டுமின்றி பரந்துபட்ட  பாலை உள்ளிட்ட பல இடங்களிலும் வாழ்ந்தனராதலின்,  அவ்விறந்த உடல் ஆங்கு ஒப்படைக்கப்பட்டது.  பண்டமாற்று முறை மாறி  நிதியமைப்புகள் வழக்குக்கு வந்தபின்னர், அவர்கள் பணம் பெற்றுக்கொண்டு அத்தொழிலை மேற்கொண்டனர்.

நால்வகை நிலத்தில் ஒன்றில்   வாழ்ந்து இறுதியை அடைந்தவன் உடல், பரந்துபட்ட இடங்களில் ஒன்றில் வாழ்ந்தவனிடம் சென்றதனால்:

பர + ஏய் + து + அம்  >  பரேய்தம் என்று அவ்வுடல் அறியப்பட்டது.

பரேய்தம் > பரேதம் > பிரேதம் ஆனது.

பர -  பரந்துபட்ட நிலங்கள்.

ஏய்தல் -  (ஆங்கு)  அமைதல்

து - ஒன்றன்பால்  விகுதி, இங்கு இடைநிலை ஆனது.

அம் - விகுதி.

அகரத் தொடக்கம் இகரமாகும். இதைப் பலவிடத்து   விளக்கியுள்ளோம்.

எடுத்துக்காட்டு:  அதழ் - இதழ்.

அடித்தல்  இடித்தல்  இரண்டும் வேறுபாட்டு நுண்மை உடைய சொற்கள்.  ஆனாலும் இரண்டிலும்  இருபொருள் தொடுதல் என்னும் அடிப்படைக் கருத்து உண்மை காண்க.

இறந்தபின் சென்றோனின் உடல், தம் உறவினரிடமிருந்து நீங்கி, அயலானிடத்துச் சென்று அழிக்கப்படுவதாகிறது.  அதனால் அது பரேதம் > பிரேதம் ஆனது. பிற ஏய்தம்> பிரேதம் எனினும் ஓரளவு அமைவதேயாகும்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.





ஞாயிறு, 30 ஜனவரி, 2022

இழந்துவிட்ட புரிதலை மீட்டுக்கொள்வது எப்படி?

 மீட்டுருவாக்கத்தின் தந்திரங்கள்.


கொஞ்ச நாட்களுக்கு முன்,  வீட்டு வேலைக்கு ஆள் இல்லாமற் போனதால், ஒரு மியன்மார்ப் பெண்ணை முகவர் அனுப்பிவைத்தார்.  அந்தப் பெண்ணுடன் பேசியபோது அவளுக்குத் தமிழ் நன்றாகத் தெரியுமென்றாள். சரி, பேசிக்காட்டு என்றபோது,  அவள் " இராகத்துடன்" ஒரு பாடலைப் பாடினாள்.

அந்தப் பாடல் வருமாறு:

ஏனா  பூனா தாம் பாரூ

ஏனா பூனா தாம் பாரூ

ஏவா  லாவூ சோக்கூ  வாரூ

ஏவா லாவூ சோக்கூ வாரூ

------  என்று பாடினாள். சற்று உறக்கத்தில் வீழ இருந்த எனக்கு,  வந்த தூக்கம் போய்விட்டது. கண்மூட முடியாமல் விழித்துக்கொண்டேன்.

அவள் பாட்டில் பூனை வருவதுபோல் எனக்குத் தோன்றியது.  "பூனைப் பாட்டா?" என்றேன்.  (   Cat song? )

இல்லை. It means,  how beautiful,  how beautiful.  என்று பொருள் சொன்னாள். எனக்குத்தான் விளங்கவில்லை என்ற எண்ணம் மேலிட்டது.  ஐ.நா. பொதுச்செயலாளராக  இருந்த ஊதாண்ட்  போன்ற அறிவாளிகள் இருந்த நாடாயிற்றே  அவள் நாடு ---- என்பதால், அவளை மிகவும் மதித்திருந்தேன்.

மீண்டும் பாடச்சொல்லிக் கேட்டபோது, இந்த வரிகள் தோன்றின.

" என்ன உன்னதம் பார்.

என்ன உன்னதம் பார்,

எவ்வளவு ஷோக்குப் பார்.

எவ்வளவு ஷோக்குப் பார்."

இதுதான் அவள் பாடிய பாட்டு.

அவளுக்குத் தமிழ் தெரியும் என்பது இப்போதுதான் எனக்குப் புரிந்தது.


சனி, 29 ஜனவரி, 2022

விசித்திரம் என்பது

 இன்று விசித்திரம் என்ற சொல்லை ஆய்வோமாக.

இதனைக் காணுமுன் சில தொடக்கநிலைகள் உள்ளன. அவற்றுள், விசி என்ற சொல்லுள்ளது.  விசித்தல் என்பது ஒரு வினைச்சொல்லுமாகும்.

அடிச்சொற்களும்  அடிப்படைக் கருத்துகளும்.

விர்>  விரி.  ( விரிவு).

விர் > விய்  ( விரிவு)  [ எ-டு: வியன்,  வியப்பு,  வியத்தல்,  வியாபாரம், வியாழன் ]

விர் > விய் > (வியி) >  விசி.  ( ய ச போலி).   விரிவு.  விசித்தல்.

விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி  ( புறநானூறு  61)  [பயன்பாட்டுக்கு எ-டு.]

விசித்து + இரு + அம் =  விசித்திரம்.   ( மிக்க விரிவாக இருத்தலால், வியந்து நோக்குமாறு பிறரை ஈர்ப்பது).

ஒன்று மிக்க விரிவாக இருக்கவேண்டும்,  அல்லது மிக்கச் சிறிதாக இருக்கவேண்டும்,  அல்லது முன்னர்க் கண்டிராத உருவிலோ, நிறத்திலோ இருக்கவேண்டும், அப்போது அது விசித்திரம், இவற்றுள் இச்சொல் அமைந்தது விரிவில். பின்னர் பிற பொருள்களைத் தழுவிற்று.  அவையெல்லாம் பெறுபொருள்களாம்.

கண்ணுக்குத் தெரிவதொன்று,  சட்டென்று காணாமற் போய்விட்டாலும் அதுவும் ஒரு விசித்திரமாய் ஆகிவிடக்கூடும்.  இவ்வாறு  கையாளப் பெறுகையில், இச்சொல் திரிசொல் ஆய்விடும். 

இதை இதற்குமுன் தமிழ் வாத்தியார்கள் வி+ சித்திரம் என்று பிரித்து,  விசேசமான வேலைப்பாடு என்பர்.

இத்தகைய விளக்கம் கூறுவதானால், 

வி  என்ற முன்னொட்டு, விழு என்ற தமிழ்ச்சொல்லின் கடைக்குறை.

சித்திரம் என்பது செத்திரம் என்பதன் திரிபு என்றார் தேவநேயனார்.

செத்தல் - ஒத்திருத்தல். எப்பொருளைக் காட்டவிழைந்தனரோ அப்பொருளை ஒத்து இருத்தலே சித்திரம் என்பது இவ்விளக்கத்தில் கருத்தாகும்.

இனி இன்னொரு வகையில்:

ஒன்றன் பெரிதாய் இல்லாமல், சிறிதாகவே முன் காலங்களில் வரைவுகள் இருந்தன. ஆகவே சிறிதாய்க் காட்டியதே சித்திரம்  என்பதாகவும் விளக்கலாம்.

சிறுமை + திறம் >  சிறுத்திறம் >  சித்திரம் 

இவ்வாறு விளக்கினால் இது இடைக்குறைச் சொல் ஆகும்.

திரிபு:  ற என்பது ரகரம் ஆனது.  இவ்வாறு பல சொற்களில் வந்துள்ளது. பழைய இடுகைகள் காண்க. 

இது சிறுத்து + இரு + அம் > சிறுத்திரம் > சித்திரம் என்பது இன்னொரு விளக்கம்.

பெரிதாய் வரைய, வரைசீலை பெரிதாக வேண்டியிருத்தல், பெரிதாய் வரையத் தடையாய் இருந்திருக்கலாம். இது இடநெருக்கடியின்பாற் படும்.

இவ்வாறு விரித்துரைக்கொண்டு செல்லல் தவிர்த்து, இத்துடன் முடிப்போம்.

விசேஷம் என்பது விழுமியதாய் எடுத்துக்கொள்ளப்படுவது. விழு+ எடு+ அம்> விழேடம் > விஷேஷம்.   எடு> ஏடு: முதனிலைத் திரிபுத் தொழிற்பெயர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.