செவ்வாய், 14 டிசம்பர், 2021

வேதம் சொல்பவனுக்கு எது துணை?

 கடவுளைத் தொழுபவனுக்குத் துணையாவது,  உண்மையில் அவனது நாவே ஆகும்.  நாவைக் கொண்டுதான் அவன் வணங்கும் இறைவனை அவன் அழைக்கிறான் அல்லது அக்கடவுளை அவன் பாடுகிறான். இறைத்தொழுகை வரலாற்றில் இறைவனைக் குறிக்க அவன் முதலில் நாவையே பயன்படுத்தியதால், கடவுளை அவன்:

நா+ தன் =  நாதன்

என்று அறிந்தான்.   நா+ த் + அன் = நாதன் எனினுமாம். இங்கு த் என்பது இடைநிலையாகக் கொள்ளப்படும்.  இறைவனைக் குறித்த பெயர்களும் அவன் நாவினின்று வெளிவந்தவைதாம். நாவில் அமைந்தவை ஆகையினால்:

நாமம்   ( நா + (அ)ம் + அம் )  ஆயிற்று.  

அதாவது,  நாவில் அமைந்தது.  இங்கு அம் என்ற இடைநிலையில் அகரம் கெட்டது.

அவனது நினைப்பில் உருவான  எதுவும், நாவினால்தான் வெளிப்பட்டது. அதனால் அது நாவகம் ஆயிற்று.  இதுவே பின்னர்   ஞாபகம் ஆயிற்று.   ஞாபகம் இல்லை என்றால் அது நாவில் வரவில்லை என்பதே பொருளானாலும்,   அந்த ஆற்றல் வேறு எங்கோ இருக்கிறது என்று எண்ணி, தலைக்குள் இருப்பதாக உணர்வு கொண்டான்.   ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்பதைத் தற்காலத்தில் அறிவியலாளரே  கூறுவாராயினர்.

வேதம் சொல்பவனுக்குச் சொல்லே துணையாதலால்,  திருமுறை  "சொல்துணை  வேதியன்" என்றது.  அதாவது நாவுதான் துணை.  நாவினை நன்றாகப் பயன்படுத்திப் புகழ் எய்தியவர் " நாவுக்கு அரசர்"  ஆனார்.  ( திருநாவுக்கரசர்).

கலைமகள் நாவில் இருந்தால், கலைகளை நன்கு அறிந்து புலமை பெற இயலும் .  அதனால் கலைமகளுக்கு நாமகள் என்ற பெயரும் உண்டாயிற்று.   காளிதாசனுக்கும் காளி நாவில் எழுதியதாகச் சொல்வதுண்டு.  சிறந்த புலவரையும் செந்நாப்புலவர் என்றனர்.   நாவே முன்மை உடையதாதலினால், நாவலர் என்ற பெயரும் அமைந்தது.

செந்தமிழும் நாப்பழக்கம் என்பர்.

மனிதனாய்ப் பிறந்தால்,  அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை, உறவினர் மற்றும் நண்பர் என்று சொல்லிக்கொள்ள யாராவது வேண்டும்.  நாவினால் சொல்லித் தெரியப்படுத்தும் இதுபோலும் உறவுகளை,  "நாதி"  என்றனர்.  இச்சொல்லில் நா என்பது பகுதி;  தி என்பது விகுதி.

உண்மையில் தம்மிடம் இல்லாத ஒன்றை நாவினால் மட்டும் சொல்லித் திரிவதுண்டு.  அது நாச்சொத்தி   ஆயிற்று.   ( நா+ சொல் +தி  அல்லது நாச் சொத்து இ ).  அதுவே திரிந்து  நா(ஸ்) தி ஆயிற்று என்பதும் காண்க.  இது உயர்த்தி > ஒஸ்தி ,  மற்றும் குத்தி > குஸ்தி போலும் திரிபு.

இங்குத் துணை என்று குறித்தது கருவித் துணையை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



திங்கள், 13 டிசம்பர், 2021

சாசனம் அமைந்த விதம்

 இங்கு சாசனம் அமைந்த விதம் என்றால்,  நாம் சொல்வது சாசனம் என்ற சொல்லைத்தான்.   ஒவ்வொரு சாசனமும் எவ்வாறு வரைவு பெற்றதென்பதைப் பற்றி நாம் இங்கு கவலைப்படுவதில்லை.  அதனைப்  பிற அறிஞர் தம் எழுத்துக்கள் மூலம் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

மனிதன் எழுத்துக்களைக் கண்டுபிடித்து மொழியின் பயனை விரிவு படுத்தியதே  மரணத்தினால் ஏற்படும் தொடர்பற்ற நிலையைச் சரிப்படுத்துவதற்காகத்  தான்.  வாயால் மட்டும் பேசுகிற அனைத்தும் பேசுகிறவன் போய்விட்டபின் இல்லாமல் போய்விடும்.  அல்லது பலவாறு திரிபு அடைந்து, நம்பத் தகுந்ததும் தாகததும் கற்பனை கலந்ததும் கலவாததுமாக நீரோடையில் பலவும் மிதந்துவருவனபோல்   ஆகிவிடும்.  மனிதன் என்னதான் தன்னைப் பெரியவன் அறிவாளி என்று பீத்திக்கொண்டு வாழ்ந்தாலும், அவனுக்கும் புழுவுக்கும் சில ஒற்றுமைகள் இணையுற்று ஓடி ஒன்றுபட்டு வரும்படியாகவே கடவுள் படைத்துள்ளார் என்பதில் உங்களுக்கு ஐயமிருந்தால் பின்னூட்டம் இட்டு நாம் சொல்வன திருத்துங்கள்.

எழுத்துக்களுக்கே அவ்வாறு என்றால் எழுதப்படும் ஆவணங்கட்கு எதுவும் வேறுபட வழியில்லை.  இறந்தபின் ஏற்புறும் ஆவணங்களும் அதன்முன் ஏற்புறும் ஆவணங்களும் எல்லாம் இல்லாமல் ஒழிதலை ஓரளவு சரிப்படுத்துதற்காகவே உண்டானவைதாம்.  பிற்பாடு அவை வேறுபடுத்தி அறியப்பட்டது நடைமுறை வசதிகளுக்காகவே  ஆகும்.

சாகப் போகும் மனிதன் சாகுமுன் சிலவற்றைத் தனியாக எடுத்து வைத்துக் கவனித்து,  தானிறந்த பின் இருப்போர் அறிந்துகொள்ளுமாறு  வரைந்து வைக்கவேண்டும்.  தொடக்கத்தில் ஏடுகள் இல்லாமையால் ஓலை, ஓடு, கல் என்று கிடைத்தவற்றில் எல்லாம் எழுதினான் மனிதன்.  இப்போது உள்ள நல்லனவும் வல்லனவும் எல்லாம் ஒரே அடியாகக் கடவுள் உருவாக்கித் தந்துவிடவில்லை.

சா -   சாவின் காரணமாக  அல்லது சாகுமுன்;

தன் -   தனியாக.

அ  -   அங்கு வைத்து,

அம்  -  அமைப்பது.

தகர முதலாகத் தோன்றிய சொல், சகர முதலாக வரும்.

இதற்கு எடுத்துக்காட்டு:  தங்கு >  சங்கு.   ( ஓர் உயிர் தங்கி வாழ்வது சங்கு).


ஆகவே,  சா+ சன் + அ + அம்,  இது சா-சன- அம் >  சாசனம்.

இதில் பின் ஓர் அகரம் கெட்டது.  ஆகவே சா சன ம்  > சாசனம் ஆனது.  அல்லது சா சன் அம் எனினுமாம்.

நாளடைவில் சாவு பற்றிய பயம் நீங்கிய கற்பனையில் நாம் சா என்பதன் பொருளை மறந்துவிட்டோம்.

சாவைச் ஸா எனினும் அதே.

பின்னாளில் ஆளுமை உடையோன் எழுதிவைக்கும் ஆவணங்கள் அனைத்தும் சாசனம் என்று பொருள்விரியலாயிற்று,  அல்லது அதுபோலும் நிலை உணரப்பட்டது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

தட்டச்சுப் பிறழ்வுகள் கண்டால் பின்னூட்டம் செய்து தெரிவிக்கவும்.  இன்றேல் அவை கண்ட பின் திருத்தம் பெறும்



வெள்ளி, 10 டிசம்பர், 2021

தீர்த்தல் : தீர்க்கம், தீர்த்தம்,

( Sorry whilst writing there was a minor emergency at home ( floor flooded) and this had to be attended. Writing suspended)

(Now all fixed. )

=======================================

தீர் என்ற வினைச்சொல்லின் பொருட்சாயலில் தோன்றிய தமிழ்ச்சொற்கள்:


தீர்க்கம்:

ஒரு முடிவு தீர்க்கமானது என்பதுண்டு. தீர்க்கம் என்பதை ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமென்றால் "பாசிடிவ்"  என்பது சரி.  வேறு எந்த வித முடிவுக்கும் இடம்கொடாத முற்றத் தெளிந்த முடிவே தீர்க்கமான முடிவு.  இதற்குரிய வினைச்சொல் "தீர்" (தீர்த்தல்)  என்பதாகும்.  ஒரு முடிவில் அது அந்த நிலைக்குத் தீர்வாக அமைந்துவிட்டால்,  அதுவே தீர்க்கம்.  அதனால் தீர்வு உணடாகிவிட்டது. இதை ஒரு வாக்கியத்தில்:

"புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்துகொள்வதே தீர்க்கமான பயன் தரும்."


தீர்த்தம்:

இது பத்தி ( பக்தி)  செய்வோரிடை வழங்கும் சொல்.   எல்லா வினைகளையும் தீர்ப்பதற்கான ஆற்றல் உள்ளது இந்தச் சாமி தீர்த்தம்.(நம்பிக்கை).

" அன்னை தந்தையரையே வணங்கிவந்தால்,  அங்கே உனக்குத் தீர்த்தம்  வாராது வரும்.  மற்றும் மூர்த்தித் தலமும் அதிலே கிட்டும்."

( அதாவது இது: " தீர்த்தம் வாங்கிக்கொள் என்று உன் அன்னை உனக்குத் தராவிட்டாலும்,  அவர்கள் உன்னை அரவணைத்துக்கொண்ட போதே, அவர்கள் தரவேண்டிய தீர்த்தம் உனனை வந்து சேர்ந்துவிட்டது" .  ---  என்பது பொருள்)

வினைகள் தீர்க்கும் நீர்.  - தீர்த்தம்.

தீவு:

ஓரு நிலத்துண்டைச் சுற்றி நீர் சூழ்ந்திருந்தால்,  வேறு நிலப்பகுதிக்குச் செல்லும் நிலத் தொடர்பு இல்லையென்றால்,  அது தொடர்பு தீர்ந்த நிலம்.

தீர் > தீர்வு > தீவு.  இங்கு ரகர ஒற்று மறைந்தது.  இடைக்குறை.

இதுபோல் அமைந்த இன்னொரு சொல்:

சேர் >  சேர்மித்தல் >  சேமித்தல்.  ( இடைக்குறை).

யகர ஒற்றும் குன்றும்:

செய்தல்:   செய் > செய்வி > செய்வி+ ஐ >  செய்வை > சேவை. 

செய்வை > சேவை எனினுமாம்.( வை என்பது விகுதி)

செய்தி என்பதும் சேதி என்று திரியும்.

இங்கு முதனிலை நீண்டு  விகுதியும் வந்து தொழிற்பெயர் அமைதல் காண்க.

தீவு =  தீவகம்.

தீவக + அல் + பு + அம் = தீவகல்பம் >  தீபகற்பம்.   ( தீவு அல்லாதது.  ஒரு பக்கம்      வேறு    நிலத்தொடர்பு உள்ளது ).

தீர்> தீர்வை.  ( ஒரு வரி).

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்.

00.44 12122021 மெய்ப்பு பார்க்கப்பட்டது.