வியாழன், 4 நவம்பர், 2021

தொற்றுநிலை மாற்றாமல் போய்விட்ட தீபாவளி இராசி

[தீபாவளி வந்தாலும் சென்றாலும் கோவிட்டின் கொடுமை

மாறவில்லை. மாற்றும் இராசிநலம் தீபாவளிக் கில்லாமல்

போய்விட்டதே!  அடுத்த தீபாவளிக்கு மாறிச் சென்றுவிடுமோ கோவிட்

தொற்று?    இக்கவிதை அந்த ஏக்கத்தைப் பதிவிடுகிறது. ]


எண்சீர்  ஆசிரிய விருத்தம்.


வருகின்றாய் வருகின்றாய் என்றார் மக்கள்

வந்தாயே தீந்தமிழால் வரவேற் றோமே

இருவருக்கு மேல்போகும் வருகை யாளர்

இருந்திடுதல் ஆகாதென் றியம்பக் கேட்டே

இருவருக்கு மேலாயின் கொடையே தந்தோம

எல்லோரும் மகிழ்ந்தேந்தும் வல்ல காலம்

கரவுருக்கும் செறிவுடனே அழகு காட்டிக்

கடுகியநீ கனிவின்றிச் சென்று விட்டாய்!


நோய்காலம் வந்திணைய நினைத்தி ருந்தார்

நுகர்ந்திடவே வடைமுறுக்குப் பலகா ரங்கள்

வாய்ச்சுவைக்கே கிட்டவில்லை அயர்ந்து விட்டார்

வணிகர்களே நலம்பெற்றார் என்றார் சில்லோர்

தாய்பிள்ளை என்றபலர் தனித்து வைகத்

தரணியெலாம் தாறுமாறாய்ப் போயிற் றன்றோ?

காய்களிலே கனிந்தவையோ சிலவே யாக

காண்பலவும் பயன்சுருங்குற் றனவே கண்டாய்.

 

அடுத்தநாடு செல்வதற்கு அணிய மானோர்

அதன்பயனை அடைந்திடவே கதவை மூடிப்

படுத்தனைய  நிலைதனிலே  இருந்த தாலே

பாரினிலே ஓர்நலமும் வாரா மையால்

கெடுதலையாய் யாவுமின்று முடிந்து போச்சே

கேடுகளை அகற்றாமல் ஓடிப் போனாய்

விடுதலையும் வியனுலகில் விஞ்சி  வந்து

விடம்களைந்து நடம்படுமோர் கடம்கா  ணோமே.


மனமாற்றம்:


தீபா வளியென்ன செய்யும்  கடுந்தொற்று

தீவை அலைக்கழிக்கும் போது.


தீபாவளிக்கு வேண்டுகோள்:


மீண்டும் வருங்கால்   மிகுதிறன்  காட்டிவிடு

தாண்டித் தடம்கண்  டிட.



மகிழ்ந்தேந்தும் -  உவகையுடன் எதிர்நோக்கிய

கரவுருக்கும் -  கரவு உருக்கும் -  மறைவானவற்றை நெகிழ்த்தி அதன்
மறை தீமையை வெளிப்படுத்தும்.

கடுகிய - விரைந்த

கனிவு -  அன்பு  (இல்லாமல் )

வந்திணைய -  வந்து கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள

காய்களிலே கனிந்தவை - காய்களில் உண்ணத்தக்கவை

கேடுகளை -  தொற்று,  பொருளியல் சரிவு முதலியவற்றை

வியனுலகில் - விரிந்த உலகில்

விஞ்சி  -  மிகுந்து

காண்பலவும் -  பார்க்கின்ற பல நிகழ்வுகளும்

கடம் -  கடமை

விடம் - தொற்று

தடம் -  செல்லும் பாதை

விடுதலையும் வியனுலகில் விஞ்சி  வந்து

விடம்களைந்து நடம்படுமோர் கடம்கா  ணோமே.

இது தடம் கண்டு மேற்செல்லாவியலாத நிலையைக் காட்டுவதால் கவிதை

கரடுமுரடாக முடிக்கப்பட்டது அறிக. எல்லாம் வல்லொலியில் வந்தது.




மெய்ப்பு பின்னர்

மறுபார்வை 09112021 1422


கதி என்ற சொல்.

 கதி என்பது செல்லுதல், செல்வழி குறிக்கும் சொல்.  

இது கடுகுதல் என்ற வினைச்சொல்லிலிருந்து வருகிறது.

கடு > கடுகு~தல்   விரைந்து செல்லுதல்..

அடிப்படைக் கருத்து:  கடுமை.

கடுகு+ தி >  (டு என்ற ஈற்று எழுத்தும் கு என்ற வினையாக்க விகுதியும் கெட்டு ) >  கதி ஆகின்றது.

கதி என்பது பேச்சில் கெதி என்றும் திரியும். " என் கெதியைப் பாரையா" என்று அழுதல் கேட்டிருக்கிறீர்களா?

கதி > கதி+ இர் >  கதிர்.  இகரம் கெட்டது.

கதிர் > கதிரவன்.

பண்டை நாட்களில் ஆறுகள், குளங்கள், மேடு பள்ளங்கள், மலை, கல்மேடுகள் என்று பல தடைகள் இருந்தன.  இவ்வாறிருந்தது மனிதனின் நகர்வினைக் கடினமானதாக்கியது.  அதனால் ஒன்றைக் கடத்தல் என்பது ஒரு கடின வேலையே  ஆயிற்று.

அதனால் கடு ( கடுமை ) என்பதிலிருந்து கடு+ அ > கட என்ற வினைச்சொல் தோன்றிற்று.  கடு என்பதன் ஈற்றுகரம் கெட்டது.

கட > கடத்தல்.

ஒன்றைக் கடந்து செல்லுதலும்  "கதி" என்றே ஆகும்.

கட > கடதி > ( இடைக்குறைந்து ) கதி.

நோக்கின், கடு+தி > கதி என்பதும் கட+ தி > கதி என்பதும் ஒன்றுதான்.

கட + தி என்ற சொல்லாக்கப் புணர்வில் வலி மிகவில்லை.

வலி மிகும் இடங்களும் உள. எ-டு:

இரும்புக் கம்பி நல்ல வெப்பக்கடத்தி.

கடத்தி என்பதில் ஏன் இங்கு  வலி மிகுகின்றது? கடத்தி என்பது பிறவினையினின்று தோன்றுவதால்.

கடத்து + இ > கடத்தி.

அறிக  மகிழ்க

மெய்ப்பு பின்பு.

  

தீபாவளி வாகன ஊர்வலம் சிங்கப்பூரில்


 [இங்கிருந்த புதுக்கவிதையை இணைக்குறளாசிரியப் பாவாக
மாற்றியுள்ளேன்.  நன்றாக இருக்கிறதா பாருங்கள்.  உங்கள் கருத்தைப்
பின்னூட்டமிடுங்கள்]

கோவிட்   டாக இருந்தா    லென்ன.

குதூக   லமுமே   குறுக்கி   விடுமே 

கடுநோய்த்   தொற்றின் தாக்கம்

குணமருந்   துக்கே   ஒப்பது 

மனம   ருந்தே உணர்ந்தமை வீரே, 

கண்வழிப் புகுந்து தெண்மை   வழிய

நெஞ்ச   கத்துச் சென்றுகொஞ்  சுவது.

தியங்கா   ததீபா    வளியே  யாக

அதுமயங்  காதமா    ணொளிவீ   சிற்று.

சீன நண்பர் சிறப்பெனக் காணவும்

ஆன மலாய்நண்   பர்மனம் மலரவும்

சாலை    வழியாக மெல்லவே,

மாலை மின்விளக்    கொளியில் 

மடுத்தோ   டியது  மந்த    கதியில்.

கண்டும கிழுங்கள் காணொ    ளியிலே

எனவாங்கு,

எப்படி நிகழ்த்துதல் செப்பமென் றெண்ணுவீர்,

அப்படி நீரே மகிழ்வதே

ஒப்பதே என்றுதான் உவந்துகொள் வீரே.



சிவமாலா



தியங்காத - தேக்கமடையாத

தெண்மை -  தெளிவு

மயங்காத - இருள்கலவாத

மடுத்து -  இணைந்து, சேர்ந்து

மந்தகதி -  மென்செலவு,  மென்மையான போக்கு.