சனி, 30 அக்டோபர், 2021

கோ - அரசன்; கோ - மாடு, எப்படி?

 இன்று கோவன், கோன் என்ற சொற்களைக் கவனிப்போம்.

கொடுத்தல் என்பது வினைச்சொல். இது முதனிலை நீண்டு பெயராகும் போது கோடு என்று வரும்.  இப்போது இச்சொல்லில் அன் என்ற விகுதியை இணைக்குங்கால் :-

கோடு + அன் = ( கோடன்.) 

கோடு + வ் + அன் =( கோடுவன்), இது டுகரம் இடைக்குறைந்து, கோவன் ஆகும்.

கோடு + அன்  =( கோடன்), இது டகரம் இடைக்குறைந்து:  கோன் என்றாகும்.

கொடுத்தல் என்ற பொருளேயன்றி,  கோடு என்பதற்கு மலையுச்சி என்ற பொருளும் இருந்தது.  எடுத்துக்காட்டு:  திருச்செங்கோடு.   இது ஓர் ஊரின் பெயராகவும் உள்ளது.  திரு என்ற அடைமொழி இன்றி, செங்கோடு என்பதனோடு அன் விகுதி இணைக்க,  செங்கோடன் என்று வரும்.  இது செம்மையான மலையுச்சியை உடையவன் என்று பொருள்பட்டு, அவ்விடத்து ஆட்சியாளன் என்ற பொருளைத் தரும்.

கடின ஒலிகளை விலக்கி,  மெல்லோசை தழுவச் சொல்லை அமைத்தலை இடைக்காலத்தில் கடைப்பிடித்தனர்.  மனிதன் போகப்போகத்தான் பல தந்திரங்களை அறிந்து  அவற்றைத் பயன்படுத்திக்  கொள்கிறான். இதை ஒரு முன்னேற்றம் என்றாலும்,  பிற்போக்கு என்றாலும் அதற்கு ஒரு முத்திரையிடுதலானது ஒரு பிற்கருத்தே ஆகும்.  அதாவது அபிப்பிராயம்.  அபி என்பதில் அ-  அடுத்து,  பி -பின்னர் அல்லது பின்னால்,  பிராயம்:  பிர - பிறப்பிக்கப்பட்டு,  ஆயம்  -  ஆயதாக  மேற்கொள்ளப்பட்டது.  பிறக்க ஆயது - பிராயம் ஆனது. அபிப்பிராயம் - அதன்பின் கருத்து என்பதன்றி வேறில்லை பிராயம் - வயது என்பது வேறு. homonym.  ஒத்தொலிச் சொல் அல்லது ஒத்தொலிக் கிளவி. இப்படிப் புனைந்து ஆக்கம் செய்கையில் பல மனிதர்கள் அதை எட்ட இயலாமல் சிந்தனைச் சுழலில் சூழிருளில் வீழ்தலுறுவர்.  இங்குக் கண்டு தெளிக.

பல கடின ஒலிச்சொற்கள் மெலிப்பொலி மேற்கொண்டன:  எ-டு:  பீடுமன் > பீமன்.  கடின ஒலியான டு விலக்குண்டது. இதுபோல்வன தந்திரச்சொற்புனைவு.  இலக்கணம் "கிலக்கிணங்களில்" இல்லை.  இவற்றுள் பலவற்றை எடுத்துக்காட்டியுள்ளோம்.

இப்போது கோட்டைக்குத் திரும்புவோம்.

பெரும்பாலான அரண்கள், மலையுச்சிகளில் அமைக்கப்பட்டன.  ஆகவே, கோடு + ஐ = கோட்டை ஆகி அரண் ஆகிய அமைப்பைக் குறித்தது. பின்னாளில் மலை இல்லாத இடத்தில் அமைந்த அரணையும் கோட்டை என்றே கூற, அது தன் அமைப்புப் பொருளை இழந்தது.

கொடு, கோடு என்பன வளைவு என்று பொருள்படும்.  ஒருவன் ஒன்றைப் பிறனுக்குத் தருகையில், பண்டை வழக்கப்படி வளைந்து கொடுத்தான். அதனால் வளைவு என்று பொருள்தரும் சொல், கொடுத்தல் ( தருதல் ) என்னும் பொருளை அடைந்தது.  வாங்குதல் என்பதும் வளைவு.  வாங்கறுவாள் - வளைந்த அறுவாள்.  வாங்கு -  வளைந்த இருக்கை. இது மலாய் மொழிக்குச் சென்று "பங்கூ" என்று, இருக்கையைக் குறித்தது.  " வாங்குவில்"  என்றால் வளைந்த வில். " வாங்குவில் தடக்கை வானவர் மருமான் "  என்ற தொடரில் வாங்குவில் என்றது காண்க.

குன்றுதோறும் ஆடுதல் என்பது பல குன்றுகளில் ஆட்சிபுரிதல் என்ற பொருளை உடைய தொடர்.  ஆள்> ஆடு என்று திரியும்.  (ஆட்சி).

போரில் மலைகளைப் பிடிப்பது சிறப்பு.  அங்கிருந்து எதிரியின் படை நடமாட்டங்களை எளிதிற் கவனிக்கலாம்.  மலையை உடைய குறுநில மன்னர் இருந்தனர்.  பாரி வள்ளல் பறம்புமலைக்குச் சொந்தக்காரன்.  மலையமான்- இவனும் மலையை உடையவன்.  மலைய -  மலையை உடைய.  மலையன் என்பது மலைக்காரன் என்று பொருள்தரும். குன்றத்திலுள்ளவன் குன்றன். இனிக் குன்று > இடைக்குறைந்து குறு >  குறு + அன் = குறவன்.

மாடு என்றால் அது ஒரு செல்வம்.  அது பல வரவுகளைத் தருவது.  பால், தயிர் இன்னும் உள.  அதுவும் கோடு என்ற கொடுத்தல் சொல் கடைக்குறைந்து கோ என்றாகி,  மாட்டினைக் குறிக்கும்.  மாடல்ல மற்றையவை என்ற தொடரில், மாடு என்ற சொல் ( குறளில் ) செல்வத்தைக் குறித்தது அறிந்துகொள்க.

இன்னும் உள. அவை பின்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு:  பின்னர்.


வெள்ளி, 29 அக்டோபர், 2021

29102021 கோவிட்19 சிங்கை

 [Gov.sg அனுப்பிய தகவல் - அக்டோபர் 29]

 

அக்டோபர் 28, நண்பகல் 12 மணி நிலவரப்படி, 1,732 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்,

- பிராணவாயு தேவைப்படுவோர்: 294

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவோர்: 75

- தீவிர சிகிச்சைப் பிரிவில் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளோர்: 61

- தீவிர சிகிச்சைப் பிரிவின் பயன்பாட்டு விகிதம்: 72.8%


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில்,

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 98.7%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 0.9%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவோர்: 0.1%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் கடுமையாக நோய்வாய்ப்பட்டோர்: 0.1%

- உயிரிழந்தோர்: 0.2%

  

அக்டோபர் 27 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / 2 தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 84%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 85%

- Booster தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 14%


அக்டோபர் 28 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 3,432 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வாராந்திர நோய்ப்பெருக்கு விகிதம் - 1.13.


go.gov.sg/moh281021

பைரவர் வைரவர்

 காலபைரவருக்குரிய தேய்பிறை அட்டமியும் முற்றவே, இன்று இன்னொரு தினம் ஆயிற்று.  காலபைரவரைப் போற்றினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம் நம்பிக்கை.  "எதையும் நம்புவதென்பதைவிட அதைத் தேடிச்செல்வதுதான் நம் மதம்" என்று வேறுபாடாகச் சிலவேளைகளிற்  குறிக்கப்படும் ஒரு வாழ்வியல் முறையின் இலக்கணம்  தான் -   நமது,   என்றும் சொல்வர்.   எனினும் எதையும் நம்பாமல் வாழ்வதென்பது இயலாத வேலை.  இல்லை என்பவன் இல்லை என்பதை நம்புவது போலவே உள்ள தென்பவன் உள்ள தென்பதை நம்புகின்ற படியால் நம்பிக்கை இல்லாத வாழ்வே உலகில் இல்லை என்ற முடிவுக்கு வந்தாலும் அது சரியாகவே இருக்கும் என்று தோன்றுகின்றது.

பைரவர் என்பது துர்க்கையம்மனின் ஒரு போராளி அல்லது படைஞன் என்று சொல்லப்படுகிறது.  பைரவத் தெய்வம் என்பது  அம்மனின் கணம்.  பைரவர் சேத்திரபாலன் எனவும் குறிக்கப்படுவார். பைரவர் என்பதும் அவரின் பெயரே.  துர்க்கை யம்மன் காடுகிழாள் எனவும் குறிக்கப்பட்டு,  பைரவரின் தாயாய்  "காரிதாய்" எனப்படுதலும் உளது. 

இவைதவிர,  சிவபெருமானின் 64 திருமேனிகளில் பைரவரும் ஒன்றாகிறார். மேலும் அறுபத்து நான்கு பணிகளைச் செய்யுங்கால் ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வோர் அடைமொழியில் பெயர் இணைக்கப்பட்டும் அறியப்படுகிறார்.  

பைரவ வழிபாடு பற்றி இத்துணை விரிவாகப் பல்வேறு கருத்தீடுகள் கிட்டுதல் கொண்டு, இவை அமைந்து உலவுதற்குக் கழிபல யாண்டுகள் சென்றிருத்தல் வேண்டுமென்பதை நீங்களே சிந்தித்து அறிந்துகொள்ளலாம்.  Rome was not built in a day என்பதை உன்னுக.

இவை புராணங்களிலிருந்து பெறப்பட்டனவாக உச்சம் பெற்று ஒரு புறம் நிற்க, நாட்டு வழக்கில் வைரவர் என்றால் நாய் என்று அறியப்படுகிறது.  மேலும் தொன்மங்களும் வைரவரைச் சிவபெருமானின் வாகனம் என்று சொல்கின்றன.  இவை அனைத்தையும் இங்கு விரித்துரைத்தல் இயலாதது.

இவ்விடுகையில் வைரவர் - நாய் என்ற பொருளுக்குரிய சொல்லமைப்பை மட்டும் அறிவோம். இதிலும்கூட, இச்சொல் ஒரு பல்பிறப்பி  ( பல்வேறு உள்ளுறைவுகளால் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் ஒரு முடிபு கொள்ளும் சொல் ) . இவை எல்லாவற்றையும் இங்குச் சொல்லாமல் ஒன்றை மட்டும் சொல்லி மற்றவற்றை அடுத்தடுத்து வரும் வாய்ப்புகளின்போது எடுத்துக்கூறுவோம். ஓரே இடுகையில் இதைச் செய்து முடித்தல் இயலாது.

இனி அமைப்பு விளக்கம்:

வை + இரவு + அர் ( அல்லது அன் ) >   வயிரவர்   (  இது ஐகாரக் குறுக்கம்  வை - வ) > வைரவர்.

வை =  வய்.

வயி என்பதில் இகரம் கெட்டது.  ஆக வய் > வை ஆனது.

இதனைப் பொருண்மையில் வரையறவு செய்ய:-

இரவில்  ( வாசலின்முன் காவலுக்கு ) வைக்கப்படுபவர் என்றாகிறது.

இரவில் வைரவர் - பைரவர் என்ற தேவரை அல்லது கடவுளை வீட்டு வாசலில் நிறுத்தும் வழக்கம் எங்கும் பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ( இருந்திருந்தால் பின்னூட்டம் செய்தல் வேண்டுகிறோம்).  நாயை இரவில வாசலில் ( கட்டியோ கட்டாமலோ) வைக்கும் வழக்கம் இருந்தது. கட்டாமல் விட்ட வீடுகளிலும் அது வாசற்பக்கம் படுத்துக் கவனமாகக் காக்கும் தன்மையது. ஆனால் வீட்டின் பின் பக்கத்திலும் சுற்றுவட்டத்திலும் அங்கிருந்துகொண்டே அது கவனம் கொள்ளும் திறனுடையது.  ஆதலின் இச்சொல் நாயைக் குறித்ததற்கு இது ஒரு காரணமாகிறது.  வைரவர் - பைரவர் என்பது வ-ப மாற்றீடு.

பிற, வாய்ப்புக் கிட்டுங்கால் பின்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

மேலும் வாசிக்க:-

இங்குப் பயன்படுத்திய சொல்: வாகனம்.  முன்னேற்றப் படிகள்

https://sivamaalaa.blogspot.com/2017/08/blog-post_28.html

வாகனம்:  https://sivamaalaa.blogspot.com/2017/08/blog-post_26.html