செல்வத்தைச் சேர்த்துவைத்தீர் செய்யும் வேலை
சீரான ஓயும்பொற் காலம் தொட்டீர்.
பல்வித்தை நீரெவையும் பயில வேண்டாம்
பார்த்துமெல்ல ஒருவீடு வாங்கிப் போட்டால்
மல்யுத்தம் போல்வாழ்வு மாறி டாமல்
மதிப்போடு மேன்மைபெற வழியுண் டாகும்.
சொல்பத்தும் காசாகும் சூழல் தன்னில்
சொகுசாக ஊணுறக்கம் கொள்வீர் நீரே.
இது யாம் சொல்வதன்று. ஒரு வீடு வாங்கி விற்பவர் தம் விளம்பரத்தில்
தந்துள்ள "வாழ்க்கை ஆலோசனை". யாம் கவிதையாக்கி உள்ளோம்.
இது உண்மைதானா? வாங்கிப்
போட்டுவிட்டால் வீட்டைப் பிள்ளைபோல் பார்த்துக்கொள்ள வேண்டுமே.
அதற்கும் அணியமாக ( தயார் ) இருக்கவேண்டும். யாரையும் வீட்டில்
வாடகைக்கு வைத்து அவர் புதிய வீட்டைப் பழைய வீடாகத்
திருப்பிக்கொடுப்பாரே. புதிப்பிப்பு வேலைகளுக்கு இங்கு அதிகம்
செலவாகிறது. வீடுவாங்கும் வாய்ப்பும் நோக்கமும் இருந்தால் நீங்கள்
கருதும் இடத்தில் வாங்கிப் போடுங்கள். இந்த விளம்பரம் சிந்தனையைக்
கிளறியது. அது ஒரு சிறு கவியாயிற்று. நன்றி.
தொட்டீர் - தொடங்கினீர்
இங்கு ஓயும்காலத்தைப் பொற்காலம் என்கிறார்கள்.
பல்வித்தை - பணம்பண்ணும் கலைகள்.
மல்யுத்தம் - மற்போர். வாழ்க்கை போராட்டம்போன்றது என்பது.
உது - உத்து > உத்தம் முன்செல்வது. ( சண்டையிட ) இது
யுத்தம் ஆயிற்று. ஆனை> யானை என்பதுபோலும் திரிபு.
சொல்பத்தும் - சொல்வது பலவும். பத்து என்பது பல என்ற்பொருட்டு.
சூழல் - சுற்றுச்சார்பு.
சொகுசு - சிறப்பு.
சொக்குதல் வினைச்சொல். சொக்கு + சு ( விகுதி) > சொக்குசு, இது
இடைக்குறைந்து சொகுசு ஆயிற்று. கண்டோரை மயக்கும் சிறப்புத்
தன்மைகள்.