செவ்வாய், 7 செப்டம்பர், 2021

வசீகரித்தல் வசீகரம்.

 இன்று வசீகரம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்

இந்த ஆய்வைச் சுருக்கமாகவே முடித்துவிடலாம்.

வசம் என்ற சொல்லை நாம் முன்னரே அறிந்துள்ளோம்.  இதன் முன்வடிவம் வயம் என்பது.

ஓர் ஈயைப் பிடித்துத் தேனுக்குள் விட்டால், ஈ உடனே தேனின் வயமாகி விடுகிறது.  எதை எங்கு இடுகின்றோமோ  அது அவ்விடத்து வசமாகி விடுகிறதென்பதே உண்மை.  ஓர் ஆடவனைப் பிடித்து ஒரு பெண்ணிடத்துத் தந்தால்,  அவ்வாடவன் அப்பெண்ணினால் ஏற்றுக்கொள்ளப் படுவானாயின்,  அவன் அவள் வயப்பட்டு  விடுகிறான். சிலர் அப்புறம் அப்பா அம்மாவைக் கூட மறந்துவிட்டு, அவளே கதி என்று கிடந்துவிடுகிறார்கள். கதி என்று கிடத்தலினாலேதான் பதி என்ற பெயர் அவனுக்கு ஏற்பட்டது.  அவன் பெண்ணிடத்திலும் அவள் வீட்டாரிடத்திலும் பதிந்து கிடப்பதனால் "பதி" ஆகி, அவ்வீட்டிலே தன்னைப் பதிந்துகொள்வதனால் அவன் ஆங்குப் பதிகின்றான் என்று சொல்கிறோம்.  பதி பின் வதியாக,  வதி வசியானது.  ( த- ச போலி).

வை :  வைத்தல்.  

வை > வய் > வயம் > வசம்.

ஆண் ஈர்க்கப்பட்டதால்,   வச +  ஈர்.

ஈர்க்கப்பட்டு,  அருகில் சென்று விடுகிறான்.

வச + ஈர் + கு +  அரு. + இ.

ஈர் என்பது இகரச் சுட்டில் வந்த சொல்.  இ என்பதில் மீண்டும் இகரச் சுட்டு வந்து இங்கு என்பதை உணர்த்துகிறது. 

தல் என்ற தொழிற்பெயர் விகுதியைச் சேர்த்தால்,  வசீர்கரி+ தல் > வசீ(ர்)கரித்தல் ஆகிறது.  இங்கு ர் இடைக்குறை.  ரகர ஒற்று பல சொற்களில் இடைக்குறையாகும். இன்னோர் எ-டு>  சேர்(த்தல்) > சேர்+ மி > சேமி என்பதுபோலுமே ஆகும்.   மி என்பது ஒரு வினையாக்க விகுதி.  வினையில் இன்னொரு வினை தோன்றிற்று. இதை இப்போது விரிக்கவில்லை.

இவ்வாறு,  வசீகரம் என்பது ஈர்க்கப்பட்டு வசமாவது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

வீட்டுக்குள் இயற்கைக் காட்சிகள்

 பூந்தோட்டம்  ஒன்றைப்போய்க் காணவேண்டும் ---  அங்கே

பூத்துக் கமழ்மலரைச் சூடவேண்டும்;

வீட்டுக்குள்  இணையத்தில் பூங்காகண்டேன் ----  இயற்கைக்

கிணையாக அதுநிற்கும்  இன்பமுண்டோ?


பகலோனும் எழுங்காலை கீழ்த்திசையிலே  ----  சென்று

பார்த்தின்பம் என் கண்கள் அடையவேண்டும்  ;

நகர்வின்றி அறைக்குள்ளே நாட்டிக்கொண்டு ---- அவனை

நான் காணில் நயக்கும்நல்  இன்பமுண்டோ?


தெப்பக்குளம்  திகழும்  திருத்தலத்தே----சென்று  

தேர்மீது  தேவன்வரப்  பணியவேண்டும்;

நிற்கநடப்  பதற்குமட்டும் இடமேகாணும்  ----  வீட்டில்

நிழல்விரித்த கோவிலதை நிகர்த்தல் உண்டோ?



நயக்கும் -  தரும்

நிழல் -   கணினிக்காட்சி


மெய்ப்பு பின்னர்

திங்கள், 6 செப்டம்பர், 2021

அர்ப்பணிப்பு - அற்பணிப்பு விளக்கம்.

 இன்று அர்ப்பணிப்பு என்பதன் பொருளை உணர்வதுடன்,  இதை அற்பணிப்பு என்று எழுதின் பொருள் என்னவாகும் என்பதையும் இன்னொரு திரிபையும் அலசுவோம்.

அர் என்ற அடிச்சொல் ஒலித்தொடர்பைக் காட்டுவதாகும்.  அர் -  அரட்டு என்பதில் ஒலி மேலிடுவதையும் அதனால் அச்சம் உறுத்துவதையும் தொடர்பு காட்டும்.   இந்தச் சொல் அதட்டு என்று திரியும்.  இங்கு ரகர தகரத்  திரிபு நம்முன்  வருகிறது .  சொற்களெல்லாம் ஒலியினால் ஆனவை என்பதால்,  ஒலிக்குப் பொருளை உணர்ந்துகொள்கிறோம் என்பதே உண்மை.  அதனால்தான் " அர்த்தம்" என்ற சொல் உலவுகின்றது.  அர்ச்சனை என்றும் அருச்சனை என்றும் சொல்வது.  ஒலியுடன் கூடிய ஒரு தொழுகைமுறையைக் காட்டுகிறது.  அர் > அராகம் என்ற செய்யுள் உறுப்பும் ஒலியைச் சுட்டுவதே ஆகும்.  அது பின் இராகம் என்று திரிந்து பாடும் முறையையும் குறிக்கும்.  இகரம் இழந்து ராகம் என்றும் அது உலவும்.

அர் - அரவம் என்பது ஒலியைக் குறிக்கும்.

சில ஒலிகளை எழுப்பியவாறு ஒரு பொருளை ஒரு தொழுகையில் முன் வைத்தல் அர்ப்பணிப்பு என்று உணரலாம். பிற்காலத்தில் ஒலியுறவு ஏதுமின்றி அவ்வாறு முன் வைத்தலையும் குறிக்கப் பொருள் விரிந்தது. இச்சொல் பின் பொருள்விரிந்து ஒலியின்றி முன்வைத்தலையும் குறித்தது இயல்பே ஆகும்.

இதனை இவ்வாறு செய்க என்று ஏவப்பட்டு அதனை ஏற்றுக்கொள்ளும் செயலைக் குறிக்கவும் "பணிப்பு" என்பது வழங்கும்.  " இதைஎழுதப் பணித்தனர்" என்ற வாக்கியத்தில் இப்பொருள் காணலாம்.  அவ்வாறானால் அற்பணிப்பு என்பது பணிப்பு அற்றநிலையில் ஒன்றைச் செய்தலைக் குறிப்பது தெளிவாகும்.  ஆகவே  அர்ப்பணிப்பை   அற்பணிப்பு என்று எழுதினால் பொருள் மாறிவிடும்.  அல்+ பணிப்பு > அற்பணிப்பு, அதாவது பணிப்பு இன்மை நிலை.

இன்மை அன்மை இவற்றிடை ஒரு நுட்ப வேறுபாடு உள்ளது.

ஓர் அரிய பணிப்பு என்று பொருள்படுவதே  அருப்பணிப்பு  ஆகும்.   அருமை+ பணிப்பு  >  அரும்பணிப்பு,  இது வலித்துவரின் அருப்பணிப்பு என்னலாம்.  இப்புனைவு எங்கும் கையாளப்பட்டதாகத் தெரியவில்லை.

எனவே  அர்ப்பணிப்பு,  அருப்பணிப்பு,  அற்பணிப்பு,  அரும்பணிப்பு  என்ற ஆக்கங்களைக் கண்டு இன்புறுக.

இவற்றுள் அர்ப்பணிப்பு என்பதே பயன்பாடு கண்டுள்ளது.ஏனைத் தொடர்புடைய சொற்கள் ஈண்டு உட்பாடு காணவில்லை: அவை அர்ப்பணம் எனற் றொடக்கத்துச் சில..



அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.