வியாழன், 15 ஜூலை, 2021

உலாச்செல்வோர் தங்கிடத்தின் அழகு.

 இந்த இடம் சுவிட்சர்லாந்தில் உள்ளது.  "சாத்தூ டி ஷில்லியோன்"

chatteau de chillon

இது கோட்டையின் வெளியழகைப் புகழும் கவிதை.

----------------------------------------------------------------------------------------

பேராற்றின் கரைபாதி

நீரோட்டம் மருவிமகிழ்

ஊறாத தரைதன்னில்

நேருயர்ந்த நெடுங்கோட்டை.  1


பேராறு - பெரிய ஆறு.

ஊறாத தரை - ஆற்றுநீர் புகாத தரை.


முன்மாந்தர் முடித்துவிட்ட

மண்காணாச் சாளரங்கள்!

தண்காற்று நாள்முழுதும்!

வெண்ணீரில் இரவிமுகமே. 2


முன்மாந்தர்- பழங்கல மக்கள்  (ஆட்சியாளர்கள்.)

தண் - குளிர்ந்த

மண்காணா - நீரைமட்டுமே காணக்கூடிய

சாளரங்கள் - சன்னல்கள்

இரவி - சூரியன்

வெண்ணீர் - வெள்ளை நீர்


ஊறிமலைப் புறத்திருந்து

ஓடிவரும் நீரின்மிகை

மீறிவரும் காற்றினிலே

ஆடியகல் சிற்றலைகள்  3


ஆடி அகல் - ஆடிக்கொண்டு அகன்று செல்லும்

மீறி -  கூடுதலாக

நாற்புறமும் சாய்கூரை

நடுவிலெழும் கூர்முகமே

மேற்புறத்து நெடுங்கூடு

கொடும்புயலில் மடங்காது.   4


இது ஓர் எழும் கூடுபோன்ற கட்டிட அமைப்பு

இது மேற்பறந்து பார்க்கையில் தெரியும் காட்சி


உலாவருவோர் தங்குதலை

வளாகமெனில் கலாச்சுவையே..

எலாயிரவும் நிலாவெனவே

சொலாமகிழ்வு மெய்துவரே.   5


தங்கு - தங்கும்.

தலை வளாகம் - தலைமையான கட்டிடம்.

எலாயிரவும் - எல்லா இரவும்.

நிலா - சந்திரன்.

சொலாமகிழ்வு - சொல்லவியலாத ஆனந்தம்.

எலாயிரவும் ( இல்பொருள் உவமையின்பால்படும்)

கலாச் சுவை -  கலையழகு தரும் இரசனை.



புதன், 14 ஜூலை, 2021

துவும் அதுவும் வந்தவை இன்னொரு மொழிக்கா?

 ஒரு சொல்லை வடிக்கும்போது  பெரும்பாலும் அஃறிணை விகுதி என்று உணரப்படும் து-வோ,  அல்லது அதன் முழுச்சொல்லாகிய அது ( மற்றும் இது, உது )வோ வந்துவிட்டால் அது தமிழா என்ற ஐயப்பாடு சிலர்க்கு வந்துவிடுகிறது. இப்போது இதைக் கவனித்து உண்மை அறிய முயல்வோம்.

தென்றல் என்பது வீசும் காற்று -   அது இனியது கவிகளைத் தூண்டிவிடுவது என்பதெல்லாம் ஒரு புறம் இருக்க, நாம் அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் இருக்கலாம் என்பதை கவனத்திலிருத்துவோம்.

தென்றல் நம்மை வந்து தழுவும் காற்று.  மெல்லிய இன் காற்று எதுவுமே மனிதரையும் மரங்களையும் செடிகளையும் எதிரில் உள்ள எதையும் வருடித் தடவிச் செல்கிறது.  அதனால் மருவுதல் என்ற சொல்லிலிருந்து இக்காற்று வகைகளுக்குப் பெயர்கள் அமைந்துள்ளன.  இது மிக்க இயல்பான ஒன்றன்றோ?

தொழிற்பெயர்கள் பலவகைகளில் அமைவன.  தொழிற்பெயர் என்றால் வினைச்சொல்லிலிருந்து அமைவது. வினையிலிருந்து ஏற்பட்ட பெயரைத்தான் அப்படிச் சொல்கிறார்கள். பல வேளைகளில் மற்ற உரிச்சொற்களிலிருந்தும் பெயர்கள் அமையும்.

வினைச்சொல்: கடு(த்தல்.)  இதன் பொருள்: கடுமையாகுதல்.

கடு+ இன் + அம் =  கடினம்.   கடு: பகுதி,  இன் - சொல்லமைப்புக்கு உதவும் இடைநிலை; அம் - விகுதி.  பொருள்: கடுமையான சூழல்.

கடு > காடு.  ( கடுமையான நிலப்பகுதி).   முதனிலை ( அதாவது முதலெழுத்தாகிய "க",   இங்கு "கா" என்று நீண்டு, இடப்பெயராகிவிட்டது.

இதேபோல் பிற:  சுடு- சூடு,  படு - பாடு என்று ஏராளம்.

இப்போது பாருங்கள்:

மரு(வுதல்) - வினைச்சொல்.  அடிச்சொல் மரு என்பதே.  மரு என்பது முதலெழுத்து நெடிலானால்,  மாரு என்று வருமே.

மரு + அது + அம் >   மரு + து + அம் >  மாரு + ~து + அம் > மாருதம்.

மனிதரையும் பிற அனைத்தையும்  மருவிச்செல்லும் காற்று.  காற்று வீசினால் மருவாமல் ஓடிவிடாது. மருவித்தான் செல்லும். அதனால்தான் அதற்கு மாருதம் என்று பெயர்.  மரு என்ற அடிச்சொல்லின் பொருளை மனத்துக்குள் நுழைக்க வேண்டுமென்றால் மரு மரு மரு மருவு என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போது காதிலேறி அது தமிழ் என்று தெரிந்துவிடும்.

இந்தச் சொல்லில் அது என்ற இடைநிலை வந்துள்ளது. அதனால் அது பிறசொல் ஆகிவிடாது.  சொல்லின் எல்லா உள்ளுறுப்புகளும்  தமிழே ஆகும்.

மலை என்று நாம் சொல்லும் உயர்ந்த - எழுந்த - தரையினின்று மேலோங்கிய நிலப்பகுதி,  பருத்தது;  அதாவது பெருத்தது என்று சொல்லலாம்.   அது பருத்தது:  பரு+ அது >  (புணர்த்தினால்) பருவது. அதனோடு அம் சேர்த்தால் பருவதம் .  மொத்தத்தில் உருவில் மலைக்க வைக்கும் நிலத்து மேலெழுச்சி ஆகும்.  அது என்ற இடைநிலை இருப்பதால் கேட்க நன்றாக இல்லை என்று கருதினர் போலும்.  அது என்பதை நடுவில் போடாவிட்டால், பரு + அம் > பரம், அல்லது இடையில் ஓர் உடம்படுமெய் கொடுத்து பருவம் என்றன்றோ வரும். அப்போது பொருள் மாறிவிடும். வேறுபடுத்துவதற்காகத்தான் அது நடுவில் வைத்தனர், சொல்லாக்கத்திலே.

மலை பருத்தது என்றுஎப்படிச் சொல்லலாம்?  அதிகம் சாப்பிட்டு வயிறு பருத்தது எனலாம். மலை எப்போது ஒரே வாட்டசாட்டத்தில்தான் இருக்கும்.  ஆகையால் தவறாய் அமைந்த சொல் என்று வாதத்தை எழுப்பலாம். இதற்கு நீங்கள், ஆம் ஆம், மலை எப்போதும் ஒரே அளவில் உள்ளதுதான்.  இந்தச் சொல்லைப் பயன்படுத்திக் கவி எழுதக்கூடாது என்னலாம்.  

இப்படி எல்லாம் விதண்டை பேசினால், நாய்க்கு நாய் என்று பெயர் வைத்தது தவறு.  நா என்ற நாக்கு மட்டுமா நீட்டிக்கொண்டிருக்கிறது?  வாலும் அன்றோ நீட்டிக்கொண்டிருக்கிறது. நாய் என்னாமல் நாவாலி என்று சொல்லவேண்டும் என்று நீங்களும் ஒப்பலாம்.

நாய் என்ற சொல்லைப் பாண்டியன் அவையில் பயன்படுத்தாமல் ஒதுக்கிவைத்துக் கவிதை பாடிவிட்டுப் பரிசில் பெற்று வருவீர்.  ஆகவே தமிழ் என்ன ஆனது என்றால் பருவதம், நாய் என்ற சொற்கள் கவிதைக்கு ஆகாதவை என்று வெற்றிகரமாகத் தீர்மானித்துவிட்டுத் தமிழுக்கு இருசொற்களைக் குறைத்துவிட்டீர். 

இப்படி அது சரியில்லை, இது கூடாது என்று தவிர்த்த சொற்களெல்லாம் சொர்க்கத்தில் சென்று தனிமொழியானது தமிழனுக்கு வைத்த ஆப்பாகவும் கருதலாம்.  இன்றேல் இவை தொலைந்துவிடாமல் பாதுகாக்கும் ஒரு வங்கிமொழியாகவும் அதைக் கருதலாம்.

எப்படியானாலும் இவை தமிழே ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

  

ணகர னகர வேறுபாடு மங்கிய சொற்கள்.

மேலை மொழிகளில் ஒரு  னகரமே உள்ளது.  ஆனால் தமிழுக்கு ணகரம்,  0னகரம் மற்றும் நகரமும் உள. இவற்றுள் நகரம் சொல்லின்  தொடக்கத்தில் மட்டுமே வரும். ணகரத்துக்கும் 0னகரத்திற்கும் உள்ள வேறுபாடு போற்றப்படும் ஒன்றாகும்,  அதாவது கடைப்பிடிக்கப்படுகிறது. பேச்சில்கூட இது ஒதுக்கப்படுவதில்லை. ஒப்பீடாக,  ழகரம் பெரிதும் கடைப்பிடிக்கப்படாமல் பெரும்பாலும் ளகரமே அதற்குப் பதிலாகத் தலைகாட்டுகிறது.

ழகரம் மலையாளத்திலும் வழங்குகிறது.  ஆனால் மழை என்பதை மளை என்று ஒலித்தலாகாது என்பதில் மலையாளிகள் மிக்க கவனமாய் உள்ளனர்.  அவர்கள் தமிள் என்று சொல்வதில்லை.  சரியாகத் தமிழ் என்றே ஒலிக்கின்றனர். நீங்கள் மலையாளியா 'தமிழா' என்று அழகாகக் கேட்கின்றனர்.

ணகர 0னகர வேறுபாடு சில சொற்களில் சற்று மெலிவு கண்டுள்ளமை தெரிகிறது. இவற்றுள் ஒன்றை இங்குக் காண்போம்.

முனகுதல் என்பது முன் என்ற சொல்லினடிப் பிறப்பதாகும்.  முனகுதல் எனின் மூக்கினால் ஒலித்துப் பேசுதல்.  பேச்சு  தொண்டையிலிருந்து மேலெழுந்து வெளிவராமல் நுனி மூக்கிலிருந்து வருமாயின் அதை முனகுதல் என்பர்.

முணுமுணுத்தல் என்பதும்  முன் என்ற சொல்லிலிருந்தே பிறந்ததாகும். இது முனுமுனுத்தல் என்று அமையாமல் முணுமுணுத்தல்  என்று வந்திருத்தல் காணலாம்.  இங்கு  னகரமாய் வரற்பாலது ணகரமாய் வந்தது  முணுமுணுப்புக்கு அழுத்தம்தர வேண்டியே, எனினும் சொல்லமைப்பின் காரணமாக வேறுபாடு மங்கியுள்ளது காணலாம்.

வேறு இவ்வாறு கலவைப்பட்டன உளவா என்பதை நேயர்கள் கண்டுபிடித்துச் சொல்வார்களாக. நாம் காத்திருப்போம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.