வெள்ளி, 25 ஜூன், 2021

கொடிய கூற்றத்தால் மறைந்தோர்க்கு நெகிழுரை

 படித்தலில் பார்த்தலில் பதிந்துதம் சிந்தையைப்

பறிகொடுத் தோர்பலர் போய்விட்டனர்;

உடைத்தது பொன்மனத் துயர்ந்தவர் குழுவினை

ஒப்பதில்    லாத் தீய கொடுங்கூற்றமே. 1


படித்தலில் -  இடுகைகளைப் படிப்பதில்

பார்த்தலில் -  என்ன உள்ளது என்று நோட்டமிட்டோர் செயலில்

கொடுங்கூற்றமே = கொடிய எமனாகிய  கோவிட்19 நோய்

உடைத்தது குழுவினை - நோய் உள்ளே வந்து சிலரைக் கொன்றுவிட்டது.

[ இறந்தோரை பொன்மனத்தை உடையோர் என்றும்   பொதுவான நோக்குடையோர்

என்பதால் குழுவினர் எனத் தக்கார் என்றும்  இவ்வரிகள் போற்றுகின்றன .]

[ பொது நோக்காலும் ஆர்வத்தினாலும் யாவரிடத்தும் காணப்பெறும்

தம் செயல்பாட்டினாலே குழு என்பதறியப்படுவதால் குழுவாயினர் ]

 

முன்னூறு நானூறு  முன்வந்து  பாய்ந்தவர்

முத்த  மிழ்க்கடல் முட்ட நீந்தித்

தந்நா தங்கிடத் தாம்பல கண்டனர்

தம்மொழி தழைந்திட ஓங்கிநின்றார் 2


பாய்ந்தவர் -  வலைப்பூவில் விரைந்து வந்து புகுந்தோர்

முட்ட -  முற்றவும்

தந்நா தங்கிட -  தம் நாவில் தமிழ் நிலைநிற்க.

[தம் நாவில் இவ்விடுகைகளில் உள்ள தமிழும் அதன் மூலம்

கிட்டும் அறி பொருளும் குறித்தது.]

பல கண்டனர் -  பல கருத்துகளை அறிந்தின்புற்றனர்

தழைந்திட -  தழைத்திட


முதலாம் தொற்றலை மூலை முடுக்கெலாம்

மூண்டத    னால்அதைத் தாண்டிவர

எதனா    லும் இய லாதமக்  கள்அங்கே

இறந்தனர் தாங்காத்  துயரமிதே.  3


தொற்றலை -  தொற்று அலை


இரண்டாம் அலையின் இறுதியில் வந்தவர்

இருந்தவர் தம்மில் பாதியன்றே!

உறண்டி மடிந்தோரை மறவா    தேதலை

இருகால்  பணிந்து தாழ்கின்றமே. 4



இரண்டாம் அலை -  கொரனா அலை 2

உறண்டி -  நோயினால் நலம் குன்றி

இருகால் பணிந்து -  இருகால்களையும் பணிந்து;/   இருமுறையும்

வணங்கி.  ( இரட்டுறல்)

தாழ்கின்றமே -  வணங்குகிறோம்.

இக்கவியில் தொற்று என்றது கோவிட்19  நோயை


வியாழன், 24 ஜூன், 2021

காரை, சாந்து முதலியவை [cement]

 

24.6.2021


இன்று காரை என்ற சொல்லை ஆய்ந்து உரையாடுவோம்.


முதலில் சொல்லின் பொருளைக் காணப்புகுந்தால், காரை என்பது 1. ஊத்தை, 2. ஆடை, 3. சுண்ணச்சாந்து (என்பவற்றோடு), மற்றும் செடி, மரம், மீன் இவற்றின் வகைப்பெயர்களாகவும் உள்ளது. இவற்றுள் ஊத்தை சாந்து முதலியவை கரைய அல்லது கரைக்கத் தக்கனவாய் உள்ளன. இது காரணமாக, இச்சொல்லினைப் பற்றிய ஆய்வில் வகைப்பெயர்களை விடுத்து முதல் மூன்றில் இரண்டை மட்டும் சற்று விரித்துக் காண்போம்.


கார் என்ற அடிச்சொல், கருநிறத்தைக் குறிக்கின்ற சொல். கருநிறத்தது எனப்படும் சனிக்கிரகம், காரி என்ற பெயருமுடையது. மற்றும் பிற கோள்களுடன் ஒப்புநோக்க, தனித் தன்மை வாய்ந்தது சனிக்கிரகம்; அதன் பெயரும் இதனால் வந்ததே. நடைமுறையில் தன்மை பற்றிப் பெயர் வருவது மிக்க இயல்பானதே. தகர வருக்கம் சகர வருக்கமாம் ஆதலின், தனி > சனி ஆயிற்று. கிரகம் இங்கு கோள் என்ற சொல்லுக்குப் பதிலாக வந்தாலும், அது வீடு ( சோதிடத்தில் வரும் 12 வீடுகள் ) என்னும் பொருளதே. அதை இவ்வாறு உணர்க:-


சனிக்கு + இரு + அகம் : சனிக்கிரகம் ( சனியின் வீடு என்பதாம்). இரு என்பது இருத்தல் வினை. கோள் தொடர்புற்று இருக்கும் வீடே இராசி ( இரு + ஆசு + ). கணியக் கலை, தமிழர் கலை என்பதறிக. இச்சொற்களின் அமைப்பு அதனை நிறுவி உண்மை தெரிவிக்கும்.


எடுத்துக்கொண்ட சொல் "காரை" எனினும், உண்மை உணர்த்துவதே வான் நோக்கு ஆதலின் சற்றுப் பிற திசைகளில் விரிதலில் குற்றமொன்றும் இலது காண்க.


ஊத்தை என்பது, வேண்டாதவை. நீரோடும் நெடுங்குழிவில் வீசப்பட்டவை பலவும் கரைந்து கருநிறத்தவாய்க் கிடத்தலால் காரை என்பது அதற்குப் பொருத்தமே. கரை > காரை. (முதனிலை நீண்டு தொழிற்பெயரானது.) கரை(தல்) என்பது வினைச்சொல்.


மேற்கண்ட பொருள்போல், சுண்ணச் சாந்து என்பதும் கரைத்துப் பயன்பெறுவதே ஆகும். அதுவும் காரையேயாகும்செமென்ட் என்பதைச் சீமைக்காரை என்று மொழிபெயர்த்துள்ளனர். (20th c). தரைக்காரை இணக்குக்காரை இறுகுகாரை எனினும் ஏற்புடையனவே. செவிக்கினியதைத் தேர்வுசெயதுகொள்க.


தரைக்காரை என்பதில் இது சுவர் எழுப்பவும் பயன்படுவது என்பதால் காரண இடுகுறிப்பெயர் ஆகிறது. இணக்கு என்பது முதனிலைத் தொழிற்பெயராகும். காரை என்பதும் தொழிற்பெயராவதால் வல்லெழுத்து மிகுந்து புணர்ந்து இணக்குக்காரை என்று வந்தது..இறுகுகாரை என்பது வினைத்தொகை.இதில் வலிமிகவில்லை.


அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்


புதன், 23 ஜூன், 2021

பாதுகாப்பு என்ற பதம்.

தொடங்குரை: 

ஏடெழுத்து ஏதேனும் எழுதவேண்டும் என்று எண்ணுங்கால், எண்ணிறந்தன எம்மனத்துள் இயல்கின்றன.  என்செய்வேம் யாம்! ( செய்வோம் என்பது இன்னொரு வடிவம்).   அவற்றுள் ஒன்று: பாதுகாப்பு என்ற சொல்.  இச்சொல் நாம் அடிக்கடி செய்திகளில் மற்றும் நண்பர்களிடைப் பேச்சுகளிலும் கூடச் செவிமடுப்பது ஆகும்.  

நேயர்கள் இச்சொல்லில் இரு பகுப்புகள் இருப்பதைக் காணலாம்.  ஒன்று பாது என்பது.  இன்னொன்று: காப்பு என்பது. இரண்டையும் நல்லபடியாக உங்களுடன் இணைந்தே அலசுவோம்.

இணைப்பொருட் சொற்கள்

பாதுகாத்தல் என்ற பொருளுடைய பிறசொற்களைக் காண்போம்.

ஓம்புதல்.  இது பலவகைகளில் ஒரு சிறந்த சொல்.  தொடக்கத்திலே  "ஓம்" இருக்கின்றதன்றோ.   தன்னை இறைவன்  பாதுகாக்க வேண்டுமிடத்துப் பற்றன் பயனுறுத்தும் பண்புமிக்கச் சொல்.  ஆனால் இன்று இலக்கியச் சொல்லாக மட்டுமே உள்ளது.  இறைப்பற்றுப் பாடல்களாயின் பழம்பாட்டுக்களாய் இருத்தல் கூடும். இச்சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும்,  யாம் மேலும் ஆய்வு மேற்கொள்ளவில்லை. ஆயின் தமிழிலக்கியத்தில் ஆங்காங்கு வந்துழிக் காண்க

ஓம்படை, ஓம்படுத்தல்;  ஓம்படுத்தும் ~ அல்லது பாதுகாவலுறவேண்டிப் ~  பெரியோர் சொல்வது.

புறங்காத்தல்  -  இதுவும் இப்பொருள் உடையதாயினும், இது இலக்கிய வழக்கினது  ஆகும். குடியைப் புறங்காத்தல் நம் ஒவ்வொருவருடைய கடமையும் ஆகும்.  தான் பிறந்த குடியை வெளித்தாக்குதல்களிலிருந்து காத்தல் என்பது குடிபுறங்காத்தல்.

காத்தல் என்றாலே பாதுகாப்பை(யும்) குறிக்கும் என்கிறது திவாகர நிகண்டு.

காப்பு  பாதுகாத்தல்,  பாதுகாவல் எனினுமது.  விகுதி வேறுபாடுதான்.  காக்கை என்ற சொல் ஒரு பறவையைக் குறித்தல் மட்டுமின்றி இப்பொருளும் உடையது.

கா -  இது பிறசொற்களைப் பின்னொட்டி வரும்.  எ-டு:  பூங்கா.  கடிமரக் கா .  புறநானூற்றில் "கடிமரந்  துளங்கிய கா" என்று வருகிறது.  புறம் 23.

ஆதரித்தல் என்பதும் பாதுகாப்பு என்ற பொருளில் ஆளப்பட்டுள்ள சொல்.  "இப்புலவர் குறுநில மன்னரால் ஆதரிக்கப்பட்டவர்"  என்பதில் அப்பொருளும் வாழ்வாதாரம் அளித்தவர் என்ற பொருளும் உள்ளன.

இரட்சித்தல் என்ற சொல்லிலும் இப்பொருள் தொக்கு.    இரக்கம் >இரக்கி > இரட்சி > இரட்சித்தல்.  ஒ.நோ:  பக்கி > பட்சி. அட்சரம் >  அக்கரம்.  தக்க இணை> தக்கிணை> தட்சிணை. ( குரு, பூசாரிக்குகட்குச் சம்பளமாகத் தரப்படுவது). 

அகரம் தொடங்கிச் சரமாக (வரிசையாக ) வருவது அச்சரம்.  அடுத்தடுத்து வருவது அடு + சரம் ;  அச்சரம் ( டு இடைக்குறை) என்பது இருபிறப்பி.  சரம் : சரி+ அம் = சரம்,  இகரம் கெட்டுப் புணர்தல். ஒன்றன்பின் ஒன்றாய்ச் சரியாக வைக்கப்பட்டது. 

அக்கரம் -{ பல்பொருளொரு சொல்.}

அனுபாலனம்  ( அணுகிப் பாலித்தல் ).  அணுகு - அணு - அனு.  பாலித்தலாவது தம் பாதுகாவலுக்குள் ஒரு பாலாக அல்லது பகுதியாக மேற்கொள்ளுதல்.  பால் - பகுதி.   எ-டு:  அறத்துப்பால்.  அறத்தைக் கூறும் பகுதி.   பால் - பாலி - பாலித்தல்: பகுதியாய்க் கொள்ளல். (அமைப்புப் பொருள்).  பால்> பாலி + அன் + அம் =  பாலனம்.  அன் - சொல்லாக்க இடைநிலை.  அம் என்பது இறுதிநிலை அல்லது விகுதி,  இச்சொல் பரிபாலனம் என்பது போல்வது.  பரிதல் - பல்பொருட்சொல். இவற்றுள் வெளிப்படுதலுமாம். இச்சொல் பர > பரி என்ற பரவற் கருத்தும் உடைத்து.

பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப்

பாலித்திட வேண்டும்   ( பாரதி)

பத்திரம் -   "பத்திரமாகப் போய்வருக".

பரித்திராணம்பரி + திரு + அண(வு) + அம்> பரித்திரு + அணம் > பரித்திராணம்.  பரிந்து மேலான முறையில்  அணவி அமைதல்.

பாலனம் -  மேலே பரிபாலனம் காண்க

புரத்தல்  --  "இரவலர் புரவலர் நீயும் அல்லை "  (புறநானூறு).

புரவு  - " பயிர்களுக்கு நீர்ப்புரவு இல்லை"

அரக்கம் "ஒவ்வொரு நாடும் அணுகுண்டு வைத்திருந்தால்  பாருக்கு ஓர்

அரக்கம் இல்லை".  அரிய நிலை என்பது பாதுகாப்பு உடைய நிலையே.[ அரு+ அ+(கு+அம்) ]

பெட்பு - பாதுகாப்பு.  பெண்+பு = பெட்பு.  பெண் பாதுகாக்கப்படுபவள்,  விரும்பப் படுபவள் ஆதலால் இச்சொல்லிலிருந்து பெட்பு என்ற சொல்லமைந்து இப்பொருள்களைக் குறித்தது.

என்றிவ்வாறு பாதுகாப்பைக் குறிக்கத் தமிழில் சொற்கள் பலவாகும்.

பாதுகாப்பு:

பதுங்கு:  பது >  பாது  + காப்பு.

பதுங்கியிருந்து ( படைத்தலைவன் போன்றோரைக்) காப்பது. அல்லது எதிரியை வீழ்த்தி இடரற்ற நிலையை உய்ப்பது.

பார்த்தல் :  பார்த்து > பாது.  இடைக்குறை இரு மெய்கள்.   பாது + காப்பு.

பகுத்துக் காப்பு >  பகுத்து >  பாது.   பாது+ காப்பு.   பகுதி என்ற சொல் பாதி என்று திரிந்தது போலுமே பகுத்து என்பதும் பாது என்று திரியும். அரசுத் தலைவர்கள் வருகையில் அவர்கள் குழாம் பகுத்துக் காக்கப்படுகிறது.  மக்கள் கூட்டத்தை வேறாகக் காப்பர்.

மேலே பாது என்பது விளக்கப்பட்டது. இம்மூன்று வழிகளிலும் இச்சொல் அமைவுறும்.  ஆதலின் இது பல்பிறப்பிச் சொல்.

காப்பு

கணவன் தன்னை வாழ்வில் காக்க என்று மணமகள் காப்புக் கட்டிக்கொள்கிறாள். இது நூல், பொன்வளையல் என்று எதுவாகவும் இருக்கலாம்.  இறைவனிடமும் வேண்டிக் கட்டிக் கொள்ளலாம்.  இதனால் கையில் அணிவதற்குக் காப்பு என்ற பெயர் ஏற்படலாயிற்று.

நிதிக்காப்பகம் ,  பணக்காப்பகம் -  வங்கி. பணவகம் எனினுமாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.