சக்கரம் என்ற சொல் ஆய்ந்து தெளிவுறுத்தப்பட்டது. அதற்கான இடுகையை இங்குக் காணலாம்:
சக்கரம் , இரதம் :
https://sivamaalaa.blogspot.com/2017/08/blog-post_28.html
சக்கரம் :
https://sivamaalaa.blogspot.com/2020/08/blog-post_28.html
சக்கரம் என்ற தமிழ்ச்சொல் அயலிலும் சென்று வழங்குவது. சக்கரதாரி - சக்கரத்தைத் ஆயுதமாகத் தரித்தவர். தரி - தரித்தல் > தாரி. முதனிலை நீண்ட தொழிற்பெயர்.
தரித்தல் என்பது அணிதல் என்று பொருள்படும். தரித்தல் என்பது அணிதல் என்பதே வழக்கில் பொருள் என்றாலும் ஒருவன் ஒன்றைத் தரிக்குங்கால், அவன் அதில் காட்சியளிக்கிறான், காட்சி அளித்தல் - காட்சி தருதல். எனவே தருதலுக்கும் தரித்தலும் உள்ள தொடர்பினை அறிந்துகொள்ளலாம். தரு > தரி .தரித்தல் எனச் சொல் பிறந்தது.
சகடம் என்பது சகடு என்றும் அம் விகுதி இல்லாமல் இன்னொரு வடிவத்தில் தோன்றும்.
மடி - மரி என்ற திரிபு விதிப்படி, டகர ரகரம் ஆகும்.
அரு என்பது அடுத்துச் செல்லுதலுடன் பொருள் தொடர்பு கொண்டது. அருகில் என்பது அடுத்து என்று பொருள்தருதல் அறிக. அருகுதல் என்றால் குறைதல் என்று பொருள்தரும். அடுத்துச்செல்லுங்கால் செல்பவனுக்கும் சென்றடையும் தொலைவுக்கும் உள்ள இடைவெளி அருகுகிறது அல்லது குறைகிறது என்பதை அறியவும். டு - று பொருள் அணிமையும் தழுவலும் காண் க. தொலைவு குறுகுதல் அடுத்தல் என்பது குறிக்கும்.
எனவே சக்கரம் ( சறுக்கரம் ) , சகடம் ( சறுக்கடம் ) என்பவற்றோடு சகடு என்பதன் அணுக்கம் காண்க. சறுக்கு + அடு என்பதில் அடு என்பதில் விகுதி இல்லை. அடுத்தல் என்ற பொருளில் முதனிலைத் தொழிற்பெயர் . இனி அடு என்பது ஐ தொழிற்பெயர் விகுதி பெற்று முடியவும் பெறுமாதலின், சகடை என்ற சொல்லும் ஆகி வண்டியையே குறித்தது.
இனிச் சகடு என்பது சாகாடு என்றும் சகரம் நீண்டும் அடு என்பது முதனிலை நீண்டு ஆடு என்றும் பெயராம். இச்சொல் வந்த குறள் நீங்கள் அறிந்ததே.
" பீலி பெய் சாகாடும் அச்சிறும்..." (குறள்).
ஊர்தி தொடர்பான இச்சொற்கள் பல்வேறு வடிவங்களில் மொழியில் தோன்றுதலானது, இவை பழங்காலத்தில் பெரிதும் வழங்கப்பட்டன என்பதையே காட்டுகிறது.
வண்டி என்ற சொல் வளைந்த உருளையைக் கொண்டதாகிய ஊர்தி என்ற பொருளைத் தருவது. வள் - வளைவு. வள் + தி > வண்டி. ஒப்பு நோக்குக: நள்+து > நண்டு. ( இதற்கும் ஓர் இடுகை விளக்கம் உள்ளது).
வளைவு : வண்டி என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு:
வாங்கு + அன் + அம் > வாங்கனம் > வாகனம்.
வாங்கு என்பது வளைவு, வாங்கரிவாள், வாங்குவில் தடக்கை ( பு.வெ.மாலை).
சகடம் வண்டி இந்தச் சொற்களில் பின்னது காலத்தால் பிற்பட்ட சொல் என்க. வளைசுற்றி அல்லது உருளை என்பது பின்னரே அவ்வுருவை அடைந்த பொருள். சகடம் என்பது தாங்குருளை சுற்றுருவை அடையுமுன் இருந்தது. சுற்றுரு முழுமையுடன் அதன் பயன்பாடும் வளர்ச்சி அடைந்தபின் சிலகாலம் செல்ல, சகடம் என்ற சொல் பேச்சுவழக்கிறந்து விட்டது. அதன் பொருளை வண்டி என்ற சொல்லே உணர்த்திற்று. வாழும் சொல் வண்டி எனினும் இற்றை நிலையில் அது நீடிக்குமா என்று தெரியவில்லை. நீடிக்கவேண்டும் என்பது எம் அவா.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.