வெள்ளி, 11 ஜூன், 2021

. (உல்லாசம்) :அடிச்சொற்கள் உல் குல் சுல்

மேற்கண்ட அடிச்சொற்களை ஆராய்வோம்.

குருள் > சுருள்

 சுருளுதல் என்ற சொல் குருளுதல் என்றும் திரியும்.  முன்னரே நாம் அறிந்துள்ள  சகர ககரத் திரிபுகளை, இது மேலும் உறுதிசெய்வதாகும். இத்தகு திரிபுகட்கு இன்னொரு எடுத்துக்காட்டு முன்வைப்போம்:  கேரளம் < > சேரலம்.  இது லகர ளகர பரிமாற்றுக்கும் உதாரணமே. இன்னொன்று: (இளகியம்) <> இலேகியம். இது அகர ஏகாரத் திரிபுக்கும் ஆகும்.

சுருளுதல் குருளுதல் இரண்டுமே வளைதல் ஆதலின்,   சுல் -  குல் என்ற முந்து வடிவங்களுக்கும் இப்பொருள் இயற்கையாகவே உள்ளதென்று நாம் ஊகிக்கலாம்.  இந்த ஊகத்தை மெய்ப்பிக்க,  குலவு என்பதன் பொருளை ஆய்ந்தால் அதற்கு வளைவு என்ற பொருளும் இருக்கின்றது.  எனவே  சுல் என்பதும் வளைவு,  குல் என்பதும் வளைவு;  பின்னர் லகர - ரகரத் திரிபினால் சுர்  - குர் என்பதும் வளைவு என்பது தெளிவாகிறது. இனி.  குலவுதல் என்பதை நோக்கினால் அதற்கு உலவுதல் என்ற பொருளும் உள்ளது. உலவுதல் என்பது சுற்றிவருதல்.

வளைவு -  அடிப்படைக் கருத்து

இப்போது இந்த அமைப்பு விதியை நாம் அறிகிறோம்:

உல் -  குல் - சுல்.  எல்லாம் வளைவு குறிக்கவல்லவையாகும்.

வு என்னும் தொழிற்பெயர் விகுதியை இணைக்க,

உலவு, குலவு, சுலவு  ஆகும்.

ஆ என்னும் விகுதி இணைத்தால்:

உலா,  குலா,  சுலா என்று அடுக்கலாம்.

உலா,  குலா என்ற சொற்கள்  உள்ளன.  குலா என்பது மகிழ்ச்சி என்று பொருள்படுவது.  மகிழ்ச்சி வந்துவிட்டால் மனிதனும் விலங்கும் வளைவளைந்து ஆடுவதால் ,  இம்மகிழ்ச்சிப் பொருள் பெறுபொருள் என்பது தெளிவு.

சுல் அடிச்சொல் சிறப்பு

சுல் என்பதை எடுத்துக்கொண்டால்,  சுலவுதல், சுலாவுதல், சுளாவுதல் என உள்ளன.  சோலையில் சுலாவினான்  என்ற வழக்கு உண்டு.  தேவாரத்திலும் உண்டு.   சுளாவு = சுழலுதல்.  இங்கு லகர - ளகரப் பரிமாற்றமும் காணலாம்.  சுலாவுதல் என்பது சிலாவுதல் என்றும் திரிந்துள்ளதால்,  பொருள் அணுக்கமும் இருப்பதால் இங்கும் நாம் பெருவெற்றியை  அடைகின்றோம். மனம் மகிழ்வு என்பதே வெற்றி.

இப்போது சொல்லாய்வு சுவைதருகிறது.

குலவு:  புதுப்பதம் அமைவு -  காரணம்: மறைவு

ஆனால் இது ஆடுதல் ( வளைதற்) பொருள் நாளடைவில் மறைந்துவிட்டதனால்,  குலா +  ஆட்டு =  குலாட்டு என்ற ஒரு சொல் ஏற்பட்டு,  அது உற்சாகம் என்ற பொருளை அடைந்துள்ளது.

எடுத்துக்காட்டு:  நீம் என்ற சொல்லில் பன்மைப்பொருள் மறைந்துவிட்டபடியால் கள் விகுதி சேர்த்து நீங்கள் என்ற சொல்லைப் படைத்துக்கொண்டது போலுமே இது.

இன்று கண்டுபிடிப்பதற்கு

இப்போது உல் என்பதனடித் தோன்றிய உல்லாசம் என்பதைக் கண்டறிவோம். இது தொடக்கத்திலே நுழைவாயிலைக் கொண்டுள்ளது என்னலாம்.  அதுதான் உல் என்பது.  உல் என்பது சுற்றுதற் கருத்து -  வளைதற் கருத்து இவற்றை உள்ளடக்கியுள்ள படியினால்  அது குலவு, குலாட்டு என்பனபோல் மகிழ்வுக் கருத்தை வெளிப்படுத்தியது வியப்பு அன்று.  உல் ஆயது  >  உல்லாயம் > உல்லாசம் என்று யகர சகரப் பரிமாற்றப்படி வந்துவிடுகிறது.  உலவுதல்  குலவுதல் எல்லாம் உள்ளடக்கமாய் இச்சொல் அமைகிறது.  ஆயது எனின் ஆகியது.  அவ்வளவே.  சொல்லமைப்புக்கு அடிப்படை : உலவலும் குலவலும். மற்ற மகிழ் வகைகளை நீங்கள் உள்ளடக்குவதை இந்தச் சொல் தடுக்க அதனிடம் ஒன்றுமில்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்..  


வியாழன், 10 ஜூன், 2021

சொல்லமைப்புக்கு இலக்கணம் உண்டா?

 சிலர் இப்போது உள்ள தமிழ் இலக்கண நூல்களைப் படித்து, அதன்கண் உள்ள விதிகட்கு உட்பட்டுச் சொல்திரிபுகள் காட்டப்பட்டுள்ளனவா என்று காண முனையலாம்.  ஆனால்,  இலக்கணம் என்பது மொழியைத் திருத்தமாகப் பேசவும் எழுதவும் கற்பிக்கும் நூல் என்று கா. நமச்சிவாய முதலியார்  (1876 -1936) போன்ற ஆசிரியர்கள் உணர்ந்து சொன்னதே உண்மை.  இலக்கணம் என்பது எவ்வாறு மொழியைத் திருத்தமாக நீங்கள் பயன்படுத்திக்கொண்டு பேசவும் எழுதவும் செய்வது என்று தெரிவிக்கிறது.  இலக்கணம் வேறு , சொல்லாய்வு வேறு. மேலும் ஒரு சொல்லைப் பிரித்து அதன் உள்ளுறுப்புகளை கண்டுபிடித்து எவ்வாறு அவ்வுறுப்புகள் புணர்த்தப்பட்டுள்ளன என்பதை இலக்கணம் தெரிவிக்காது.  இலக்கணம் கூறும் புணரியல் முழுச்சொற்களின் புணர்ச்சி பற்றியது. சொல்லமைப்பில் வலி (வல்லெழுத்து )மிகவேண்டுமா, வேண்டாமா என்பது புணரியல் தெரிவிப்பதில்லை.  ஒரு மொழியைத் திருந்தப் பயன்படுத்தக் கற்றுக்கொள்பவர் சொலாராய்ச்சியாளர் அல்லர்.  அவர் வெறும் மாணவரே. புணரியல் கூறும் நிலைமொழி, வருமொழி என்ற குறிப்புகள் ஒரு சொல்லினுள் இருக்கும் கூறுகள் அல்லது துண்டுகளைக் குறிக்காது.  மொழி என்பது ( நிலைமொழி, வருமொழி என்ற சொற்களில் ) முழுச்சொல்லைக் குறிக்கும்.

தகு என்ற வினைப்பகுதி அகரத்துடன் சேர்ந்தால்  தகு+ அ > தக்க என்றும் வரும். தக  என்றும் வரும்.  தக என்பது வினை எச்சமாகப் பயன்படும்.  இரட்டித்த தக்க என்னும் எச்சம் பெயரெச்சமாகப் பயன்படும்.  ஆனால் இரண்டிலும் அகரம் சேர்ந்துள்ளது.  அறு+ அம் என்ற சொல்லமைப்பு,  அறம் என்று ஒருவகையாகவும் அற்றம் என்று இன்னொரு வகையாகவும் சொல்லாகும். 

இலக்கணம் என்பது ஒரு பேச்சுமுறை அல்லது மொழிக்குப் பிற்பட்டது. பேச்சுமுறை முதலில் தோன்றி, அப்புறம் அதில் ஓரளவு ஆய்வு செய்தவர்கள் இலக்கணத்தை உரைத்தனர்.  இதற்குக் காரணம் முன்னோர் பயன்படுத்தியவாறே மொழியை எளிதில்  கையாளவேண்டும் என்ற நோக்கம்தான். இதைத்தான் மரபு என்று சொல்கிறோம்.

இலக்கணம் எழுதியவன் கண்டுபிடிக்காமல் விட்டதெல்லாம் இல்லை என்று நினைப்பது அறியாமை ஆகும்.  பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி என்று ஒருசில இலக்கண நூல்களிலும்   சொல்லப்பட்டிருந்தாலும் அது தொட்டுச்செல்வது போன்றதுதான்.  அதனால் சொல்லாய்வு என்பது இலக்கணத்தின் ஒரு பகுதியாகிவிடாது. தொல்காப்பியமுனி,  சொல்லின் பொருளும் காரணமும் பார்த்தவுடன் தெரிந்துவிடாது என்று மட்டும் சொல்லிவைத்தார்.

இலக்கணம் சொல்வது எல்லாம் சரியென்றால்,  அது சொல்லமைப்புக்கும் பொருந்துமென்றால்,  

மக + கள்  என்பது ஏன் மகக்கள் என்று வராமல் மக்கள் என்று வருகிறது.  மக என்பது தானே பகுதி?  மக் என்பதா பகுதி?  மக என்பதில் இறுதி அகரம் அன்றோ?  அ+ கள் :  அக்கள் என்று வரவேண்டுமே.  மக+ அள் என்பதும் மகவள் என்று வரவேண்டும், எப்படி மகள்?

ஏற்க முடியாது என்பவர்கள் நன்கு சிந்திப்பார்களாக.

மருந்து சாப்பிட்டவன் எல்லாம் பிழைத்ததுமில்லை, இலக்கணம் படித்தவன் எல்லாம் சரியாக உணர்ந்து மொழியை அறிந்ததுமில்லை.  சிலரே அறிந்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்.







கொரனா குறுகும்

 கொரனா என்னும் முடிமுகி நோய் முற்றிலும் நீங்கிடுமா?  இதற்குப் பதில் சொல்வதானால் முன்வந்த தொற்றுகளெல்லாம் முற்றும் இவ்வுலகினின்று நீங்கிவிட்டனவா என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.  அவ்வாறு கொள்ளுங்கால்  என்னதான் நாம் அதைத் தொலைக்க முயன்றாலும் அதை நூறு விழுக்காடு உலகிலிருந்து விலக்கிவிட இயலாது என்பது தெளிவாகும்.  இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கும் என்றே நம் நிபுணர்கள்1 நினைக்கிறார்கள்.  கொரனா  (கோவிட்19)  குறுகும்.

நலம் விளையும் என்பதற்கு ஒரு கவிதை:


வருநாளில் வான்துயரம் வற்றியொரு வண்மைவரும்;

கொரனாவின் கோரப்பிடி குறுகியொரு நன்மைபெறும்

இருகாலும் பெருமக்கள் இன்னலற ஒண்மைதரும்

திருநாளும் வருகிறதே தெள்ளுலகும் சீர்பெறுமே.


பொருள்:

வருநாளில்  - எதிர்காலத்தில்;

வான் துயரம் -  மிகப் பெரிய துயரம்.

வற்றி -  குறைந்து

வண்மை  -  வளமான நிலை

கோரப்பிடி -  கொடுமையான நீக்கமில்லா நிகழ்வு

குறுகி -  ஒடுங்கி;

இருகாலும் -  இரவு பகல் இரு காலங்களிலும்;  நெடுங்காலம் எனினுமாம்.

பெருமக்கள் - உலகின் மக்களைச் சுட்டியது.  உலகம் பெரிதாதலின் அதன் மக்கள் பெருமக்கள்  எனப்பட்டனர்.   புவிமக்கள்.

இரு - பெரிய என்ற பொருளும் உண்டு.

திருநாளும் - நாம் மகிழ்வுறும் நாளும்;

தெள்ளுலகும் -  அறிவியல் உலகமும்.  ( தெள் - தெளிவு)


குறிப்புகள்:

1. நிபுணர் -    நிற்பு + உணர்.   நிற்பு என்பது நிலை. தம்துறையின் நிலையையும் கலையையும் முற்ற உணர்ந்தவரே  நிற்புணர் >  (  இடைக்குறைந்து) - நிபுணர் எனப்படுவார்.