சனி, 8 மே, 2021

நல் அடிச்சொல்லுக்கு ஒத்துப்போகாத "நலி(வு)" சொல்.

 இப்போது நாம் ஒரு அடிச்சொல்லுடன் முரண்பட்ட ஓர் சொல்லமைப்பை அறிந்துகொள்வோம்.

நலம் என்ற சொல்லின் அடி  "நல்:"  என்பதுதான்.  நல் என்றாலே கெடுதல் ஒன்றுமில்லாதது என்பதுதான் நாமறிந்த,     தமிழுலகறிந்த பொருளாகும்.

நல்  +  அம் =   நலம் என்பதே சரியான புனைவு.  நலி  +  அம் =  நலம்  என்று  வந்தது என்று தமிழாசிரியர் கூறார்

ஆதியில்----  - அதாவது கல்தோன்றி மண்தோன்றாக்  காலத்து  முன்தோன்றித் தமிழ்  உருவெடுத்த  நிலையில்    -----    அ, இ,    உ   என்ற  முச்சுட்டுகளே மொழியில் சொற்களாகப்  புழங்கக்  கிடைத்த   நிலையில்  -----  மனிதன் அவனுக்குத்    தோன்றிய   கருத்துக்களை   அடுத்து  நின்றவனிடம்  தெரிவிப்பதற்கு  ,  இங்கே  என்று  குறிப்பதற்கு   அவனிடம்  இ   மட்டுமே இருந்தது.  இங்கே  என்று   சொல்ல  " இ " என்று   குறித்தாய்  !     அப்புறம்   இல்லை என்பதற்கு   இன்னொரு சொல்  வேண்டுமே,   என்ன செய்வாய்?  இந்த மாறாட்ட நிலையை  தமிழால்   விளக்க  முடியும்.  சுட்டுக் கருத்தை  ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளிலும்  காணலாம்.   ஆங்கிலம் என்ற எங்கிலோ  செக்ஸன்  மொழியில் கூடக் காணலாம்.   "ஹி"  என்பதில் வரும்  ஹ்  என்பதை எடுத்துவிட்டுப்  பார்த்தால்    இ  என்பது  இருக்கிறது.   சுட்டு   ஒளிந்துகொண்டு  இருக்கிறது.   திருடனைக்  காவலன்  பிடிப்பதுபோல்   பிடித்துக்கொள்ளுங்கள்.  மலாய்  என்ற   Austronesian (Malayo-Polynesian)  மொழியில் பார்த்தால் கூட,  டி-ஸீனி  என்பதில்  ஸி  -   இ   இருக்கிறது.   ஸானா  என்பதில்   ஆ(   அ -  ஆ - அங்கே)   என்ற சுட்டு  உள்ளது.  ஆனால் வேறு  ஒலிகளுடன் கலந்து உள்ளமைக்குக் காரணம்  அது  தோற்றகாலத்  தாயினின்று வெகு காலத்தொலைவு  பயணித்து  வந்துவிட்டதுதான்.

மாறாட்ட நிலையென்று  மேல் குறித்த நிலைக்குத் திரும்புவோம்.   இல்லை என்று குறிப்பதற்கும்  "இ"  என்றுதான் குறிக்கவேண்டும்.  இதைப் போலவே,  இல்  (  இருக்கிறது  என்று குறிக்க ) என்பதும்   இல்  (  இல்லை  என்று  குறிக்க)  என்பதும்  ஒரு  சொல்லே (  அல்லது  ஒரொலிச் சொற்களே )   இருபொருளையும்  தெரிவிக்கிறது.   இல்  என்பது இன்று இடப்பொருள் குறித்தாலும்  அதன் பண்டைப் பொருள்  இருக்கிறது  என்பதுதான்.   இரு என்ற சொல்லே  இல் என்ற அடியிலிருந்து  வந்ததுதான்.   இல் >   இரு  ஆகும்.  இதேபோல  புல்  >  புரு  ஆகும்.  மல்>  மரு ஆகும்.(  புருடன்  என்ற  சொல்லுக்கு யாமெழுதிய விளக்கத்தை   முன் வந்த இடுகையில் காண்க ).

இலத்தீன்(    maxim சட்டமுதுமொழி  )  வாக்கியம்  Ubi jusibi remedium  என்பதில்  இபி  -  என்ற சொல்லில் இகரச் சுட்டு கலந்துள்ளது. hic என்பதிலும் உளது.  இவற்றைப்  பிரித்துணர வேண்டும்.  உள்ளது  குறிக்கும் உ மற்றும் இ என்ற  சீனமொழிச் சொல்லும் இதை  விளக்கவல்லது.  இ மாய் -  இவளுக்கு வேண்டாம்  என்பதிலும் காண்க.

சிலவிடத்து  ஓரொலிச் சொல்  (ஒலியொருமைச் சொல்)  மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்க இயல்வதுண்டு.  ஒரு கதையில்  இதை விளக்கலாம்.  ஆனால் அதை இன்னொரு நாள் பார்க்கலாம்.

நல்-நலி  என்றவற்றில் உண்டான  அடிச்சொல் எதிர்மறையை  வேறு வகையிலும் விளக்கலாம்.   நலி என்பதில்  வரும் ஈற்று  இகரம் ,  இல்லை என்பதன் கடைக்குறை  எனலாம்.  அப்படிச் சொல்வதற்கும் இடம் இல்லாமல் இல்லை.

இவ்வாய்வை இடுகை இன்னொன்றில் காண்போம்.

அறிக மகிழ்க

மெய்ப்புபின்



  


வியாழன், 6 மே, 2021

அனங்கம் மன்மதன் உடலற்றோன் அனல்


முன்னுரை:

 எங்காவது ஒரு முன்மை (முக்கியம்) வாய்ந்த மனிதரைப் பார்க்கப் போகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  அவர் இருக்கும் ஊருக்குள் நுழைந்தவுடன்,  அங்கு அந்த மனதரைப் பார்ப்பதற்கு முன்னோ பின்னோ,  நமக்குத் தெரிந்தவர்கள் எத்தனை  பேர் இருக்கிறார்கள் என்று நம் கண்ணும் வாயும் மனமும் தேடத்   தொடங்கி  விடுவதுண்டு.  நமக்கிருக்கும் நேரத்தைப் பயன்படுத்திக் கூடுமானவரை சில நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுதல் நன்று நாம் அவ்வாறு நினைப்பது இயல்புதான். அதுதான் இயல்பு என்று நாம் நினைப்பதும் சரியேயாகும்.  கொஞ்சம் தொலைவிலுள்ள நகரில் வாழ்பவரானால் அதற்காகக் கொஞ்சம் காலத்தை ஒதுக்கி வைத்துக்கொள்ளுதல் நன்மை பயக்கும்.

அணுகுதல் கருத்து:  "அண்"

"நகரை" அணுகினோம் என்றால்,  அங்கிருக்கும் மனிதர்தம்மை அணுகிச் சென்றோம் என்பதே உண்மை.  அணுகிச் செல்லாவிடில் நாம் யாருடனும் நட்புடைய நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது கடினம்.  சில சொற்கள் தமிழில் அன்பையும் அணுக்கத்தையும் காட்டுவனவாக உள்ளன.  அன்பு என்ற சொல்லே அணுக்கம் காட்டுகிறது.    அண் >  அன்;   அன்> அண். இவ்வாறு எப்படியும் அது கருத்து வளர்ச்சி பெற்றிருக்கும் திசை புலப்படுகின்றது.

காலமுன்மை

முச்சுழி ணகரத்துக்கு  இருசுழி னகரம்  காலமுன்மை உடையது.  அதைச் சுழிகளின்  எண்ணிக்கையினால் அறிந்துகொள்ளலாம். அதனால்  அன் என்ற சொல் அண்  என்பதன் முந்துவடிவம் ஆகும்.  அண் என்ற அடிச்சொல்,  அண் > அணை என்று நெருக்கத்தைக் காட்டுகிறது  எனற்பாலது  புரிந்துகொளல்  வேண்டும்.

என்றாலும்  அண் என்பதிலிருந்தே இதை விளக்கின் தெளிவு தோன்றும். அதனால்  அவ்வாறே ஈண்டுச் செயல்பெறும்.

அண் >  அன்:   இங்கு ணகர -  னகரத்   திரிபு.  (  அல்லது  னகர > ணகரத்   திரிபு எனினும் இழுக்கிலது ).

அன் + பு:  பு விகுதி. பெற்றது.  ஓர் ஈடற்ற முன்மையுள்ள பயன்பாட்டுச் சொல் இங்குத் தோற்றுவிக்கப்பட்டது. 

அன்பு உண்மையில் பண்டைத் தமிழனுக்கு அணுக்கத்தினால் உண்டான விருப்பினைக் காட்டியது என்பது இப்போது இச்சொல் ஆய்வு  தெளிவிக்கிறது.

அனங்கம்:

அன்புடன் நடந்துகொள்வதே அறிவுடைமை என்று  நம் பண்டைத் தமிழர் எண்ணினர்.  அது எப்படி வெளிவருகிறது   பாருங்கள்:

அன் +  நன்கு  + அம் >    அனங்கம்  :   பொருள்  :   அறிவு.    இது  சந்தியில்  அன்னங்கம் என்றுதான் வரும்  என்று  வாதிட்டாலும்,   இடைக்குறை என்ற வசதி தமிழில் இருப்பதால் பின்  பயன்பாட்டில் சுருங்கிவிடும்.  சொல்லாக்கத்தில் வாக்கியத்துக்குரிய இலக்கணம் புகுதற்கிடமில்லை. அன் என்பது நிலைமொழியும் அன்று;  பு என்பதோ  நன்கு என்பதோ வருமொழியும் அன்று.  இங்குக் களம் வேறு.

அன்னங்கம் >  அ(ன்)னங்கம்  >  அனங்கம்   ஆகும்.  வாதிடுவது  எடுபடாது.

அன்பில் எப்போதும் தோய்ந்து ஊறிக் கிடப்பவன்  அனங்கன்.  அதனால் அவனுக்கும் இங்கு   ஒரு பெயர் கிட்டியது.   அவன் தான்  மன்மதன். 

மன்மதன்:

   மன்மதன்  படைப்பு   என்றாலும்  பரந்து விரிந்து நிற்கின்ற பரமன் என்றாலும் சொல்லில் உள்ள இனிமையைப்  பாருங்கள்:

மன்  -   நிலைபெற்ற,   அழிவற்ற.  மாற்றமில்லாத.

மது  -   மயங்குவதைத் தரும் தேறலைத் தருகின்ற.

ம(யங்குவ)து  >   மது.   சில எழுத்துகள் விட்ட இடைக்குறை.

அன் -   அவன்.

முன்னைப்    பொருளுடன் பின்னல் உறும்  இயைபு,  இதில் தோண்டவும் வேண்டாத  துய்ய  நிலையில் கிட்டுகிறது.

உரு:

அப்படியானால்  அப்பரமனுக்கு  உடலம் உண்டோ என்ற கேள்விக்கு அச்சொல்லிலே  பதிலும்  பதிந்து வைக்கப்பட்டுள்ளதே.  எப்படி?

அன்மை + அங்கம் +  அன்

>  அன் ( மை)  +  அங்க(ம்)  +  அன்:   ( பிறைக்கோட்டுக்குள் உள்ள எழுத்துக்கள் புணர்ச்சியில் கெட்டன அல்லது மறைந்தன ).

> அன் + அங்க+  அன் =  அனங்கன். (   தோற்றம் அல்லாத வழியில் நிற்பவன், அவன் அரு.---   உரு  இல்லை ).  அரு  என்பதும் அகரத்தில் தொடங்கி   அல்(அல்லாமை)க் கருத்தையே முன் தரும்.  அ(ல்)  +  ( உ ) ரு=  அரு.  இது இருபகவொட்டுச் சொல்.

அவனுக்கு உண்மையில் உடலம் இல்லை  ஆதலின்,  அவன் பகிரும் மது  ஒரு ஆன்மிக மதுவாகும்.  எண்ணப்  போதை.

அவன் "சக்தி"  அல்லது சத்தி  என்பதோ  அணுக்கம் அல்லது  அடுத்தல்  தாராத சக்தி அல்லது ஆற்றல்.   ( சக்தி என்ற சொல் தோன்றிய விதம் )

அடுத்திட இயலாமை: " அனத்தசக்தி"

இவ்வளவு மதுவையும் தந்தவனிடம்  அடுத்துச் செல்லலாம் என்றால் முடிவதில்லை.

அன் அற்ற சக்தி >  அன் அத்த  சக்தி >   அனத்த  சக்தி.

அற்ற எனற்பாலது  அத்த  எனவாகும்.  அனத்தசக்தி  என்பது இறையாற்றல்.

சக்தி என்பது முன் விளக்கப்பட்டுள்ளது.  தன் தி  >  தன்னிலிருந்தே வெளிப்படுவது  தன் + தி >  த  + தி >  ச+ தி >   சத்தி >  சக்தி.    தி என்ற இறுதி  (விகுதி)  திரும்பி வெளிவரற்     குறிப்பு.  தகர சகரப் போலிச் சொல்.

அனல்:

அனல்  <  அன் அல்  :( அணுகுதலுக்கு அல்லாத பொருள் ).  இப் படிச் சொல்லை அமைத்த தமிழன் வல்லவன். அனல் என்ற சொல்லை அமைத்த போது அவன்  கருதிய அடிப்படைப் பொருள்  தன்னால் நெருங்க இயலாமைதான்.  தீயிலிருந்து அவனை வந்து தொடுவது எது என்ற கருத்து,  பின்புலத்து மறைவு எய்தியது.

முடிவுரை

சொற்கள் இவ்வாறு தோன்றித் தமிழ்  வளம் ஒளிர்கிறது.

அளத்தல் மிகுதி இவற்றின் தொடர்பு  பின் விளக்கப்படும்.  இணைந்திருங்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்