செவ்வாய், 4 மே, 2021

முகத் தடைத்துணி

இத்தனை பேருக்குக் கொரனா என்றால்

எவரும்  அணிந்திலரோ ---- முகத் தடைத் துணி?

இத்தனை பேர்கள் இறந்தனர்  என்றால்

எத்தனை பேர்கள் உண்டனர்  மருந்துகள்? -----தினமும்?


இந்திய நாட்டின் கணக்கினைப்  பார்த்தால்

யாரும் படவில்லையோ சிறு கவலை?

யாவரும் மகிழ்ந்துகூத்   தாடுதல் போன்ற

காத்தல் நினையாமை கடுந்துயர் தோன்றும்.


முகத் தடைத்துணி- முகக் கவசம்.

காத்தல் நினையாமை -   காத்தல் நினையாமையால்.*   ஆல் உருபு தொக்கது.


Admin note:   This is a new style poem.  Not a traditional one.


*Edited:  05052021  2124hrs

சனி, 1 மே, 2021

இல் எல் எல்லோன் பழமைத் தொடர்பு

 சிலுவையில் அறையப்பட்டிருந்த ஏசு பிரான், அக்கடைசி நேரத்தில் " இலோய், இலோய்,  லாமா சbaக்தனி?"  என்று கூவினார்.   இது தமிழில்"இறைவா, இறைவா, எனைக்   கைவிட்டனையோ?"  என்று பொருள்படும். இலோய் என்ற அரமாயிக் மொழியின் சொல்லுக்கு  "  இறைவன்,  கடவுள் என்பதே பொருள்.  கடவுள் என்பதை  இல்,  எல்,  என்றெல்லாம் சொல்வர்.  

இல் என்பது தமிழில் பல்பொருள் ஒருசொல்.  இதற்குள்ள பல பொருட்களில் மரணம் இல்லாத நிலை என்ற பொருளும் உள்ளது.  இறைவன்  அல்லது இறைமை,   இதற்கும்  பொருத்தமான தன்மையை உணரலாம்.

தமிழில் எல் என்ற  சொல்லும்  உள்ளது.  ஓன் என்ற ஆண்பால் விகுதி  சேர்த்து  " எல்லோன் " என்றும்  தமிழில் இச்சொல் உருக்கொள்ளும்.  எல்  என்பது  வேறு அர்த்தங்களும் உள்ள சொல் என்றாலும்,  இதற்கு   ஒளி,  சூரியன் என்ற பொருளும் இருக்கின்றது. இயற்கையைப் பழங்காலத்தில் வணங்கியவர்கள்,  சூரியனையும் வணங்கியுள்ளனர்.  சூரிய வணக்கம் அல்லது நமத்காரம் என்பது  யோக முறையிலும் உள்ளதொன்றாகும்.

இறுதல் என்பது முடிவு என்றும் பொருள்தரும்.  இதிலிருந்து இறுதி என்ற சொல் அமைந்தது என்பது உங்களிற் பலரும்  அறிந்தது.   இந்த இறு என்ற  அடிச்சொல்லினின்றே   இறைவனைக் குறிக்கும்  இறை என்ற  சொல்லும்  அமைகிறது.   இறு >  இறு+ஐ  >  இறை   ஆகும்.  இறை +  அன் என்பது  வகர உடம்படுமெய் பெற்று  இறைவன்  என்றானது : இறை  +  வ்+   அன் =  இறைவன்.

இறைவன் என்பது எல்லாவற்றிலும்  இறுதிநிலையினன் என்பதை நமக்குத் தெளிவாக்குகிறது.   

இல்  என்ற சொல்லும்  இறு  என்று  திரியும்.   இதற்கு  நேரான இன்னொரு திரிபு புல் -புரு  என்பதாகும்.   புரு>  புருடு >புருடன் .புல்>புரு என்பது  அம் விகுதி பெற்றுப்  புருவம் என்ற சொல்  அமைந்தது.   புல்லுதல் -பொருந்துதல்.  ஆகவே புருவம் என்பது கண்ணுடன் பொருந்தி நிற்கும் இடம் என்று பொருள்தரும். தரவே  புருடன் என்பது  பெண்ணுடன் பொருந்தி வாழ்வோன் என்ற  பொருளைத் தருகிறது. புரு>புரை >புரைதல் என்பது  பொருந்தி நிற்றலையும் குறிக்கும். புரைத்தல் என்பது உட்புகுதல் குறிக்கும்.  புல்> புன்>  புனர்  (  புனர்  வாழ்வு )  >    புணர்  என்பன பொருந்துதலின்  பொருள்வளர்ச்சியைக் காட்டுகிறது.   புண்  என்பது  மேல் பொருந்தி நிற்கும்  காயம்  குறிக்கிறது.  

இதுபோலும்  திரிந்தவை பல.  

இல் எல் என்பவற்றுடன்  இறு > இறை என்பன எவ்வாறு தொடர்பு  உடையவாய் உள்ளன என்பதைக்  காட்டவே சில சொற்களைக் காட்டினோம்.

பழங்கால மொழிகளுடன் தமிழுக்கு உள்ள  தொடர்புகள்பல.  

அறிக     மகிழ்க.

மெய்ப்பு பின்.