தாமரை பூத்த தடாகமடி
தமிழ்மணத் தேன்பொங்கிப் பாயுடதடி
-- என்பது ஓர் அழகிய பாடல்.
தடாகம் என்பதொரு கவினிய இன்சொல். இச்சொல்லில் தடு என்ற வினைச்சொல்லும் அகம் என்ற பெயர்ச்சொல்லும் உள்ளன.
இதன் உள்ளுறைவை எவ்வாறு வெளிக்கொணர்வது? இப்படி விளக்கலாம்.
அகம் -- தன் உள்ளில் அல்லது குழிவான உட்பகுதியில்,
தடு - நீரைத் தடுத்து வைப்பதாகிய ஒரு நீர்நிலை.
சொல்லமைப்பில் எல்லாப் பொருட் பரிமாணங்களையும் பற்றி உள்ளமைத்துப் புனைய முடிவதில்லை. எடுத்துக்காட்டாக, நாற்காலி என்ற சொல், நாலு கால் என்ற இரு உட்கட்டுகளை முன்வைக்கின்றதே தவிர, அது உயிர் உள்ளதா, இல்லாததா, நாயையும் குறிக்குமா, நாயும் நாலு கால்கள் உள்ளதுதானே என்ற கேள்விகளுக்கெல்லாம் விடைதருவதில்லை. ஒரு சொல்லமைவுக்குள் இத்தனையும் வைக்கவேண்டுமென்றால் மொழிப்பயணம் தடைப்பட்டுவிடும்.
தாடாகம் என்பதில் இவ்வளவும் வேண்டுமா? அப்படியானல் இனிமேல் நான் டொங்க்டெங்க் என்று சொல்லும் போதெல்லாம் வண்டி என்றுதான் பொருள்கொள்ளவேண்டும் என்று அம்மா அடித்தால், நானும் வேறுவழியின்றி அப்படியே கொள்ளுவேன். மொழியில் இப்படி யாரும் அடிக்காவிட்டாலும், இடுகுறிப் பெயர் என்பது இதைத்தான் நம் முன் நிறுத்துகிறது. அமைபொருள் ஒன்றும் தெரியவில்லை, இருந்தாலும் அப்பெயர் இதைத்தான் குறிக்கின்றது என்பது தான் ஏற்பாடு. வேறு பொருளுக்கு இப்பெயரை இட்டழைக்க நமக்கு அதிகாரம் எதுவும் இல்லை. ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் வாதத்துக்கும் இடமில்லை.
தடாகம் என்பதன் உள்ளுறைகளைப் பெயர்த்து எடுத்துக் கவனித்தால் அது ஒரு சிறைக்கூடத்தையும்கூடக் குறிக்கலாம். இப்போது அது நீர்நிலையை மட்டுமே குறிக்கும் என்று வைத்துமுடிக்கவும்.
புரிந்துகொள்ளும் முயற்சியில் நாம் இப்படிப் புகன்றுகொண்டாலும் தடாகம் என்ற சொல்லுக்குக் கோட்டம் என்ற ஒரு பொருளும் உள்ளது. கோட்டம் என்பது சுற்றுச்சுவர் அல்லது அடைப்பு உள்ள ஓர் இடக்கட்டினையும் குறிக்கும். எடுத்துக்காட்டு: அரண், கோயில், சிறை முதலியன. இவ்விடங்களிலெல்லாம் மனிதர்களைத் தடுத்து அகத்தில் இருத்துதலாகு மன்றோ - அதனால்தான். இவ்வாறு தடுத்துவைத்தலில் ஒரு நேரவரையுடன் கூடிய தடுத்தலுக்கும் அவ்வரையற்ற தடுத்தலுக்கும் வேறுபாடு ஒன்றுமிலது. தடுப்பு என்பது தடுப்புக் கட்டுமானத்தையோ, வெளிச்சென்றுவிடாமல் வன்மையுடன் தடுத்தலையோ, பிறர் உள்ளே நுழைந்துவிடாதபடி அவர்களிடமிருந்து உள்ளிருப்போரைத் தடுத்துக் காத்தலையோ இன்னும் ஏனை முறைகளில் ஏற்படக்கூடிய தடுப்புகளையோ குறிக்கலாம். பொருந்தியதை ஏற்றல் கூடும்.
இது ஒரு வாவியையும் குறிக்கவல்லது. வாவியாவது, வாய்விரி நீரோடை. வாய்வி > வாவி. வாய் என்பது கடைக்குறைந்த பின், வி என்னும் விகுதி பெற்று வாவி என்பது சொல்லாயிற்று என்பதும் அதுவே. இச்சொல் (வாவி) வருதல் என்ற சொல்லடிப்படையிலும் எழுதல் கூடும். வரு > வா > வாவி எனல். வாரி என்ற சொல்லும் "வரு" அடிச்சொல்லினடிப் பிறப்பதே. வரு> வார்> வாரி. இப் பிறப்பியல் ஒற்றுமை கருதத்தக்கது.
தடாகம் என்பதில் தடு என்பதன் உகர கெட்டது. மீதமிருப்பது தட் என்பதே. இது சொல்லன்று. சொற்புனைவு எதிர்நோக்கிய இடைவடிவம். இது தட என நின்று அகம் என்பது வர, தட+அகம் > தடாகம் என்றாயது. இரு அகரங்கள் ஆகாரமாயின. தடம் என்ற சொல்லுக்கும் இது புனைவுப்பொருத்தம் உடையதே. அது அம் (ம்) நீத்து, தட் என்றாகி, அகரம் பெற்றுத் தட என்று வந்தே அகம் என்பதனோடு கூடுவது. மட ஆலயம் > மடாலயம் போலுமே. அடி அடி> அடாவடி எவ்வாறு? அடாத அடி - அடாவடி எனினுமாம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.