திங்கள், 12 ஏப்ரல், 2021

தசை என்ற சொல்

 தசை என்ற சொல்லை இப்போது ஆய்வு செய்வோம்.

இது தை என்ற அடிச்சொல்லிலிருந்து வருகிறது.  இச்சொல்லின் இறுதியில் உள்ள சை என்பது விகுதி.  இதனை மேலும் பிரித்து இரண்டு சிறு விகுதிகளைக் கண்டுபிடிக்கலாம்  அவை சு+ ஐ என்பன,  இரண்டையும் இணைத்து ஒரு விகுதியாகக் கூறினாலும்  சு என்பது இடைநிலை, ஐ தான் விகுதி என்றாலும் ஆவதொரு தெற்றில்லை என்றறிக.

தை > தைவருதல் :  தடவுதல்.

தை > தைலம் :  தடவும் எண்ணெய் அல்லது நீர்ப்பொருளான மருந்து அல்லது நெகிழ்களிம்பு.

தைத்தல் -  இணைத்தல்.

தை -  தையல்:  துணிகளை நூலால் இணைத்தல்.

தையல் -  வீட்டுடன் இணைந்திருப்பவள்,  என்பதே அடிப்படையான பொருள். இன்னொரு வீட்டிலிருந்து பெண்வீட்டில் வந்து இணைபவனே மாப்பிள்ளை. அதனால்தான் திருமணத்தின் முன் பெண்பார்க்கப் போவது வழக்கில் வந்தது. பெண்வழி வாழ்வுமுறை மாறிவிட்டாலும் இந்த எச்சங்கள் தொக்கி நிற்கின்றன.

இணைத்தல் தடவுதல் எல்லாம் தொடுதல் வகைகள்.

தைமாதம் என்பது இணைக்கும் மாதம்.  மக்களையும் அவர்கள் நடாத்தும் நிகழ்வுகளையும் இயற்கை நலங்களையும் ஒருங்கிணைக்கும் மாதம்.

தடவுதல், இணைத்தல், பொருந்துதல் என்று தை என்பதன் அடிப்படைக் கருத்தை அறிந்தோம். இனித் தசை எனற்பால சொல்லைக் காண்போம்.

தை > தை+ சை  ( சொல்+ விகுதி)  >  தசை.  ( இது ஐகாரக் குறுக்கச் சொல்லமைப்பு).

இன்னொரு வழியில்:

தை >  தய் >  தசு > தசை.    ( தசு+ ஐ).

இது பை > பய் > பயன் (பையன்) > பசன்  ( பசு+ அன் )  > பசங்க (பேச்சு) போல்வது ஆகும்.

பசன் என்பதை பசுமை + அன் = பசன் என்று காட்டினாலும் அதே.   பசுமை, இளமைக் கருத்தில் அங்கே ஒளிந்துகொண்ண்டுள்ளது.  உணரும்படியாக இவண் வெளிக்காட்டப்படுகிறது.

தை > தைச்சு > தச்சு.  தச்சுவேலை என்பது மரங்களை அறுத்து இணைக்கும் வேலை.  இணைப்பதே அடிப்படைப் பொருள்.  தச்சு என்பதும் ஐகாரக் குறுக்கம்.

தை > தய் > தயிர்.   இர் விகுதி.  பாலில் ஏற்படும் இணைப்பு.

இவ்விதிப்படி திரிந்த இன்னொரு சொல்:  மை >  மய் >  மயிர்.  இர் விகுதி. இன்னொன்று:  பை > பய் > பயிர்.  

சொல்லை ஆய்வு செய்யும் ஆர்வமுள்ளவர்கள் இதனைப் பட்டியலிட்டு மனனம் செய்துகொள்க.

உடலில் ஏனை உள்ளுறுப்புகளுடன் இணைந்திருப்பதே தசை.


அறிக மகிழ்க.

செப்பமிடு மீள்பார்வை பின்னர்.


பிற்குறிப்பு:

தயங்கு என்பது தங்கு அங்கு என்ற கருத்துக்களின் ஒன்றுபாடாக வந்த சொல்லே ஆமென்க.  த என்பது தன்மை. தன்மை இடத்தில் கு : சேர்ந்திருத்தல். கு என்பதை விரிவாக முன் ஆய்ந்துள்ளோம். தம் என்பதும் வேறன்று. அவற்றை மறுநோக்கு மேற்கொள்க.  தன் + கு = தங்கு.  தன் இடத்தில் இருப்பதே மேலானது என்று கருதிவிட்டால்  அதுவும் த+ ஐ,   அல்லது த+ இயை = தயை ஆகும். [ ஐ என்பது மேன்மைக் கருத்து. ] மேற்சென்று போரிடுதல் துரத்துதல் என இல்லாமல் இருக்குமிடத்தில் இயைந்துவிடுதல்.  ஒரு வீரன் சீறிப் பாயாமல் இரங்கித் தன் நிலையிலே நின்றுவிட,  அது  தய , தயை என்று வந்துவிடுகிறது. அப்போது அது இரக்கம் என்று கூறப்படும். இவ்வாறு தயவு, தயை, தங்கு,  தயங்கு என்ற சொற்பின்னல்கள் எழுதலை கூர்ந்துணர்ந்து  மகிழ்க.

த -  தன்மை அல்லது தன்னிலையில்,

அ - அங்கே நின்றுவிடுதல்.

த + அ =  தய. இவ்விடத்து யகர ஒற்று (ய்) உடம்படு மெய்.

தயங்கு, தயவு, தயை எனச் சொற்கள் அமைதல் காண்க.

பண்டை மொழிமாந்தனுக்கு ஒருவன் தன்னிலை நீங்கி எதிர்நிற்பவனிடம் நெருங்கினால்  அவனை அடிப்பதற்கோ, வெட்டுவதற்கோ முற்படு செயல்;  இவ்வாறு தன்னிலை கொள்பவன் அரசனோ அதிகாரியாகவோ இருப்பான். தன்னிலை நீங்காமல் நிற்றல் என்பதே தயை,  அதுவே தயங்குதலுமாம்.  தண்டிக்கத் தயங்குதல்.  அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்ற தமிழ்நாட்டுப் பழமொழியையும் காண்க.  நின்று கொல்லும் - நின்று என்பதுதான் தயை, தயங்கு என்பவெல்லாம்.  நில் > நிலை.  தான் நிற்றல் - தன் நிலை - தன்னிலை. இலக்கணத்தில் தன்மை என்பர்.  தன்மை உடைய மனிதன் என்பர் சிலர். இதன் கருத்து என்னவென்றால், தன்னிலை நீங்காமல் " தயை" யுடனும் "தயக்கத் "துடனும்  ( இரங்கி ) நடந்துகொள்வோன் என்பது. தெய்வம் நின்று கொல்லக் காரணம், இடையில் மனிதனுக்குத் திருந்த ஒரு வாய்ப்பு அளிப்பதற்காகவே என்பர். அன்றை மாந்தனின் கருத்துகளின் ---நிலைமைகளின் அடிப்படையில் சொற்கள் உருக்கொண்டன.

தயாநிதே -  தயங்கி நின்றோனே ;  நி தே -  நில் + து + ஏ >  நி து ஏ. தயை செய்தோனே.  நில் > நி  ஆனது கடைக்குறை.

நிதி என்ற சொல் மாந்தனை அல்லது கடவுளைக் குறிக்கையில் அது திணைப் பிறழ்ச்சி ஆகிறது.  து என்பது அஃறிணை விகுதி.  மூலத்தில் தமிழிலிருந்து புறப்பட்டதாகக் காட்டினாலும், இலக்கணம் பிறழ்ந்ததால் அது தமிழென்று ஒப்பார் தமிழ்ப்புலவர் சிலர்.  இது இங்கு திணை விகுதி அன்று, சொல்லாக்க இடைநிலையே என்று கொள்ளின்,  இத்தடை இருக்காது. வேறு விளக்கங்களும் உள்ளன. எ-டு:   து  என்பதன்று,  த்  என்ற இடைநிலை என்பதுமொன்று. இத்துடன் நிறுத்துவோம்.

Classification should be based on a word's functionality and not form. 

---- என்பவை அறிக.

தமிழில் தெரிந்துகொள்ளவேண்டியது அனந்தம்.  ( எல்லை இல்லை). இயன்ற மட்டும் எழுதுவேம்.  மேலும் அறிவோம் பின்.

உங்கள் கருத்துகளையும் பின்னூட்டம் செய்யலாம்.

மெய்ப்பு பின்பு



தமிழ்நாட்டுத் தேர்தலில் யார் வெல்வார்?

 உலைபற் றியிலா  அரியும்  நீரும்

நிலையிற் சமைந்து வருமோ சோறும்?

அலைகள் இலவாய் அடங்கிய தேர்தல்

விலைகொள் வாக்கால் கடந்திடு வாரோ?


இது தமிழ்நாட்டுத்  தேர்தல்  (2021) பற்றிப் பேசப்பட்ட ஒரு கருத்தை மேற்கொண்ட ஒரு பாடல்.  பார்க்கப் போனால் அப்படித்தான் தோன்றுகிறது.

உரை பற்றி இலா -  உலையில் நெருப்பிடாமல்,

அரியும் நீரும் -  கிளைந்து வைத்த அரிசியும் நீரும்,

நிலையில் - அப்படியே விட்டுவிட்டால்,

சமைந்து வருமோ சோறும் -   (சாதம்) தானே வெந்து சோறு ஏற்படுமோ?

அலைகள் இலவாய் -  அரசியல் அலைகள் ( எதிர்ப்பு, வாதங்கள் முதலியவை)

இல்லாதனவாக,

அடங்கிய தேர்தல் -   அமைதியாக (கிளர்ச்சிகள் போல் இல்லாமல் ) நடந்து முடிந்த இந்தத் தேர்தல்,

விலைகொள் வாக்கால் -   பணம் புழங்கி  இய ந்திரத்தினுள் சென்ற வாக்குகளால்,

கடந்திடுவாரோ -  வெல்ல முயல்வோர் வென்றிடுவார்களோ?


 உங்கள் கருத்துகளைப் பதிவிடலாம். நன்றி.


ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

அம்பலம் - உட்பொருண்மை அழகு.

 அழகாகப் பலரும் அமைதியாகக் கூடி யிருக்கும் இடந்தான் அம்பலம்.  இறை நம்பும் ஒருவனுக்கு அவ்விறைவன் மறைதிருப்பதுபோன்ற மாய்தன்மை மேலிட்டு நெஞ்சில் நின்றாலும் அவன் எழுந்தருளியிருக்கின்றான் என்றே எண்ணிக் கும்பிடுதல் நோக்கி இச்சொல்லை வேறுவிதமாக அமைத்திருக்கலாம். அப்படி அமைக்கவில்லை. அதற்குக் காரணம், அவன் அங்கு உள்ளானா இல்லையா என்ற ஐயுறவு சொல் அமைத்தவன் உள்ளத்தில் தோன்றவில்லை என்றே நாம் கருதுதல் பொருந்தும். அன்றியும் இறைவனோ எங்கும் நிறைந்தவன். எனவே அவ்வாறு அமைத்தல் தேவையற்றதுமாகும்.  அம்பலம் என்பது இறைவனை உள்ளத்திருத்திப் பலரும் கூடுமிடம் என்ற கருத்தில்,  " பலரும் அழகுடன் கூடுமிடும்: " என்பதை மட்டுமே முன்வைத்து அம்பலம் என்ற சொல்லை அவன் உருவாக்கினான்.     "அம்பலத்தே ஆடுகின்றஆனந்தத்  தெய்வம் :  ஆடுதலாவது பற்றுநர் உள்ளத்து ஆடுதல்.

அம் -  அழகு.

பல் -   பலர்.

அம் - அமைப்பு குறிக்கும் ஒரு பழங்கால விகுதி.  அறம் பொருள் இன்பம் என்ற மூன்று அழகிய சொற்களிலும்  அறம்  (அறு + அம்), இன்பம் ( இன் +பு+ அம் ) என்ற இரண்டிலும் அம் விகுதி வந்துள்ளது காண்க.   அமைப்பு என்பதின் அடிச்சொல்லான அம் என்பது தமிழில் மிக்கப் பழைமையான விகுதி என்று அறிவான் ஆய்வறிஞன்.  வீட்டில் பயன்படுத்தும் முறம் என்பதிலும் அம் விகுதி உள்ளது. சொளகு என்ற சொல்லில் கு விகுதி உள்ளது.  இவை பழங்கால விகுதிகள்.  திறம் என்பதிலும் அம் விகுதி.  இவற்றுள் சில வினைப்பகுதிகள். சில பிறவாகும்.

ஆகவே,  அம் பல் அம் -  அழகாகப் பலர் கூடுமிடம்.   "அம்பலம்"   ஆகிறது.

தொல்காப்பியனார் ,  செய்யுளழகு கூறுவார், "'அம்மை அழகு தொன்மை தோலே விருந்தே இயைபே புலனே இழைபு"   எனப் பொருந்தக் கூறியவை எட்டென்பர்.   எட்டும் ஒவ்வொரு வகை அழகு ஆயினும் அவை யாவும் செய்யுட்குள்  அழகே ஆகும். அழகு என்ற சொல்லும்  அழகுகளில் ஒரு வகையையும்,  பொதுவாக அழகையும் குறிக்கும் சொல்.  அதை நுண்பொருள் நோக்கி எடுத்துக்கொள்வதா அல்லது பொதுப்பொருள் நோக்கி மேற்கொள்வதா என்பதை வாக்கியத்தில் வரும் இடமும்  எந்தத் தலைப்பில் வருகிறது என்ற நிலையும் உணர்ந்து போற்றிக்கொள்க.  இச்சொற்கள் இலக்கணத்தில் இலக்கணக் குறியீடுகள். அல்லாதவிடத்து மொழியில் பொதுச்சொற்கள்.

பொதுச்சொல்லாகச் சொல்லமைப்பில் வருங்கால்  அது (அம்மை)  கவர்தன்மை உடைத்து என்றே பொருள்படும்.  அம்மை என்பது தோன்றும்போதே உள்ள அழகு.  மூல அழகு அதுவாம். மூலமாவது மூளும் நிலை. முன்மை, முதன்மை.

அம் பல் அம் என்பதில் பல் என்பது ஆன்மா பலவாதல்.

அம்பலம் என்பது சொல்லமைப்பால் தமிழினழகும் காட்டும் சொல்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.