ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

அம்பலம் - உட்பொருண்மை அழகு.

 அழகாகப் பலரும் அமைதியாகக் கூடி யிருக்கும் இடந்தான் அம்பலம்.  இறை நம்பும் ஒருவனுக்கு அவ்விறைவன் மறைதிருப்பதுபோன்ற மாய்தன்மை மேலிட்டு நெஞ்சில் நின்றாலும் அவன் எழுந்தருளியிருக்கின்றான் என்றே எண்ணிக் கும்பிடுதல் நோக்கி இச்சொல்லை வேறுவிதமாக அமைத்திருக்கலாம். அப்படி அமைக்கவில்லை. அதற்குக் காரணம், அவன் அங்கு உள்ளானா இல்லையா என்ற ஐயுறவு சொல் அமைத்தவன் உள்ளத்தில் தோன்றவில்லை என்றே நாம் கருதுதல் பொருந்தும். அன்றியும் இறைவனோ எங்கும் நிறைந்தவன். எனவே அவ்வாறு அமைத்தல் தேவையற்றதுமாகும்.  அம்பலம் என்பது இறைவனை உள்ளத்திருத்திப் பலரும் கூடுமிடம் என்ற கருத்தில்,  " பலரும் அழகுடன் கூடுமிடும்: " என்பதை மட்டுமே முன்வைத்து அம்பலம் என்ற சொல்லை அவன் உருவாக்கினான்.     "அம்பலத்தே ஆடுகின்றஆனந்தத்  தெய்வம் :  ஆடுதலாவது பற்றுநர் உள்ளத்து ஆடுதல்.

அம் -  அழகு.

பல் -   பலர்.

அம் - அமைப்பு குறிக்கும் ஒரு பழங்கால விகுதி.  அறம் பொருள் இன்பம் என்ற மூன்று அழகிய சொற்களிலும்  அறம்  (அறு + அம்), இன்பம் ( இன் +பு+ அம் ) என்ற இரண்டிலும் அம் விகுதி வந்துள்ளது காண்க.   அமைப்பு என்பதின் அடிச்சொல்லான அம் என்பது தமிழில் மிக்கப் பழைமையான விகுதி என்று அறிவான் ஆய்வறிஞன்.  வீட்டில் பயன்படுத்தும் முறம் என்பதிலும் அம் விகுதி உள்ளது. சொளகு என்ற சொல்லில் கு விகுதி உள்ளது.  இவை பழங்கால விகுதிகள்.  திறம் என்பதிலும் அம் விகுதி.  இவற்றுள் சில வினைப்பகுதிகள். சில பிறவாகும்.

ஆகவே,  அம் பல் அம் -  அழகாகப் பலர் கூடுமிடம்.   "அம்பலம்"   ஆகிறது.

தொல்காப்பியனார் ,  செய்யுளழகு கூறுவார், "'அம்மை அழகு தொன்மை தோலே விருந்தே இயைபே புலனே இழைபு"   எனப் பொருந்தக் கூறியவை எட்டென்பர்.   எட்டும் ஒவ்வொரு வகை அழகு ஆயினும் அவை யாவும் செய்யுட்குள்  அழகே ஆகும். அழகு என்ற சொல்லும்  அழகுகளில் ஒரு வகையையும்,  பொதுவாக அழகையும் குறிக்கும் சொல்.  அதை நுண்பொருள் நோக்கி எடுத்துக்கொள்வதா அல்லது பொதுப்பொருள் நோக்கி மேற்கொள்வதா என்பதை வாக்கியத்தில் வரும் இடமும்  எந்தத் தலைப்பில் வருகிறது என்ற நிலையும் உணர்ந்து போற்றிக்கொள்க.  இச்சொற்கள் இலக்கணத்தில் இலக்கணக் குறியீடுகள். அல்லாதவிடத்து மொழியில் பொதுச்சொற்கள்.

பொதுச்சொல்லாகச் சொல்லமைப்பில் வருங்கால்  அது (அம்மை)  கவர்தன்மை உடைத்து என்றே பொருள்படும்.  அம்மை என்பது தோன்றும்போதே உள்ள அழகு.  மூல அழகு அதுவாம். மூலமாவது மூளும் நிலை. முன்மை, முதன்மை.

அம் பல் அம் என்பதில் பல் என்பது ஆன்மா பலவாதல்.

அம்பலம் என்பது சொல்லமைப்பால் தமிழினழகும் காட்டும் சொல்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



சாங்கி என்ற பெயர்.

 சிங்கப்பூரில் சாங்கி ( சாங்ங்ி)   என்பது ஒரு வட்டாரத்தின் பெயராக உள்ளது. இதே பெயருள்ள ஒரு வீதி சீனாவின் ஷாங்காய் நகரத்திலும் உள்ளது. இது ஹுவாங்க்பூ மாவட்டத்தில் இருக்கிறது..  (ஷாங்காய்,200025).

சிங்கப்பூர் வானூர்தி (விமான)  நிலையத்தின் பெயரும் சாங்கி என்ற சொல்லைக் கொண்டுள்ளது.

செங்காய் மரத்தின் பெயரிலிருந்து இப்பெயர் பெறப்பட்டதென்று ஐரோப்பிய ஆய்வாளர்கள் கருதியுள்ளனர்.   https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D. இதனை விக்கிப்பீடியாவில் காணலாம்.

சிங்கப்பூரின் சாங்கிப்பகுதி,  முன்னர் மலாய் மொழியில் தஞ்சோங் ரூசா என்று அழைக்கப்பட்டதாம்.

சீனாவின் வீதிக்கு எப்படி இப்பெயர் உள்ளது என்பது ஆய்வுக்குரியது.

சனி, 10 ஏப்ரல், 2021

சிதம்பரும் சிதம்பரமும் தொடர்பின்மை

 பூவம்பர் என்றால் அது ஒரு வாசனைத் திரவியத்தைக்1 குறிக்கும். இச்சொல்லைத் திருக்காளத்தி புராணத்தில் (7.55)  அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூ என்ற மலரைக் குறிக்கும் சொல்லுடன் அம்பர் என்ற சொல் சேர்ந்து இப்பெயர் அமைந்துள்ளது.  அம்பர் என்பதும் ஒரு வாசனைத் திரவியமே.  அம்பர் என்ற சொல் அம் விகுதிபெற்றுக் கோயில் என்றும் பொருள்தரும். கோவில் எப்போதும் தூய்மையாகவும் மணமுடனும் திகழ்வது இதன் காரணமென்று அறிவதில் ஏதும் இடரிருக்காது.  அம்பலம் >  அம்பரம் என்று திரியும்.   எடுத்துக்காட்டு:  சிற்றம்பலம் > சித்தம்பரம் >  (  இடைக்குறைந்து )  சிதம்பரம் ஆகும்.

இறைவன் உலகமுழுதும் நிறைந்துள்ளான்.  " எங்கும் நிறைந்தவன், எங்கோ மறைந்தவன்" என்றும் பாராட்டிப் பாடுவதுண்டு. " எங்கும் உனைநான் தேடி அலைந்தேனே" என்று மனம் கவல்வதுண்டு.  (கவலை கொள்வதுண்டு).  மறைவாய் இருத்தலாவது இறைவனின் ஐந்தொழில்களில் ஒன்று.  ஐந்தொழில்களாவன:  படைத்தல், காத்தல், அழித்தல், அருளல் மற்றும் மறைத்தலாம்.

இனி, அம்பரம் என்பது கோவிலையே யன்றி எப்பொதுமன்றத்தையும் குறிப்பதும் உண்டு.

அம்பர் என்ற சொல்லில்  இரு துண்டுச் சொற்கள் உள்ளன.  அம் என்றால் அழகு.  அம்மை அழகு.  பர் என்பது  பர (பரத்தல், பரவுதல் ) என்பதன் கடைக்குறை. பரம்  பர் ஆனது.   இறுதி அம் கெட்டது (௳றைவுற்றது).  இவ்வாறு நோக்குங்கால்  அழகிய பரந்த இடமென்றும் பொருள்படும்.    கோவில், மன்றம் முதலியன இதற்குத் தகுதிபெற்று நிற்பனவாகும்.   வாசனை என்னும் மணப்பொருளும் பரவுதற்குரியது.    ஆகவே வாசனை என்ற பொருளும் சொல்லினின்று புறப்பட்டது ஏற்புடையதே ஆகும்.

பாவச் செயல்களும் பரவக் கூடியவையே.  காரணம் அவற்றைச் செய்யும் தீயவர்கள் சிந்தித்துச் செய்பவர்கள் அல்லர். ஒருவன் செய்த பாவச் செயலில் இன்னொருவன் கேட்காமலே கலந்து மகிழ்வதைக் காணலாம்.  பாவுதல் என்றாலே பரவுதல் என்பதே பொருள்,.  நெசவில் நெட்டாக விடும் நூலைப் பாவுநூல் என்பர்.  நடவு நடுதலில் பாவுதல் என்ற சொல் பயன்படுவதுண்டு.  பரவு >  பாவு > பாவம் என்பது காண்க. நல்லனவற்றை அவ்வளவு விரைவாக யாரும் கைக்கொள்வதில்லை.  ஆன்மாவிற்குக் கெடுதல் பரவுவதாலும் அது பாவம் எனப்படும்.  தீமை, கருமம் முதலியவை செயல்  இன்று ஆவியையும் பற்றி  அதன் துய்மையில் பரவித் தீய்த்துக் கெடுக்கிறது.   இக்கருத்துண்மையாலும் பரவுதற் கருத்து வருதலை அறிக.

வாசனை பரவும் பொருளாவதை,   புனுகு,  பொன்னம்பர்,  பூவம்பர் பொங்கவே என்ற தொடர்வாயிலாக உணர்க.    புழுகு >  புனுகு.  பொங்குதல் -  பரவுதல் வகை.

ஓர்க்கோலை என்ற கடல்படு திரவியமும் அம்பர் எனப் பெயர் பெறும்.  பிசின் நெகிழ்ந்து  இழைந்து பரவுதல் உடைத்தாதலின் அம்பராகும்.

ஆனால் சிதம்பர் என்ற சொல் உயர்வற்ற தீயோரைக் குறித்தற்குரிய சொல். இது சிதம்பரம் என்ற சொல்லின் கடைக்குறையன்று.  ஆதலின் சிதம்பரம் என்ற சொல்லைச் சிதம்பர் என்று குறுக்குதல் தவறு.  சிதம்பர் என்பது சிதை+வம்பர் என்ற இருசொற்களின் மரூஉ  ஆகும்.

மனிதனுக்குரிய நலங்கள் சிதையப்பெற்றோராய்  வம்பராய் உலவுவோருக்கு அது பெயராகிறது.

சிதை வம்பர் >  சிதவம்பர் > சிதம்பர் என்றாகும்.  சிதை என்பதில் ஐகாரம் குறுகி, வகரமும் கெட்டு அமைந்த சொல். ஐகாரக் குறுக்கம் தொல்காப்பியர் காலத்தின் முன்பிருந்தே உள்ளது.  வேலவன் > வேலன் என்பதில் வகரம் இயல்பாகவே மறைந்தது.  [ வேல்+ அ + அன் ;  வேல் + அன்]  இது ஒரு முயற்சிச்சிக்கனம் ஆகும்.  இதைப் பகவொட்டு என்பதும் சரியாகும்.

அறிக மகிழ்க.'

மெய்ப்பு பின்

உலகின் சில நாடுகளில் இப்போது மீண்டும் மகுடமுகித் தொற்று மிகுதல் கவலையை அளிக்கிறது,

முகக் கவசம் அணிந்து

நோய்க்கு இடம் கொடுக்காமல் இருங்கள்.


குறிப்புகள்:

1.  திர+ இ+ அம் = திரவியம். திரண்டுவந்த போற்றத்தக்க பொருள்.  இ இடைநிலை. அம் விகுதி.   இயம் ஈறு என்றும் கூறலாம்.  எடுத்துக்காட்டு:  நாகமணி.  திரு இயம் > திரவியம் என்பாரும் உளர்.