வெள்ளி, 2 ஏப்ரல், 2021

செவ்வாய், 30 மார்ச், 2021

குடைவு, குடம், குடை, குகை,

{இதைச் சுருக்கமாக எழுதவேண்டியிருந்ததால்,  சில புரியாமல் இருந்தால் பின்னூட்டமிடுங்கள். விளக்குவோம். நன்றி. }


 குடு > குடை > குடைவு என்ற சொல்லைப் பார்த்தபின் தான் தெளிவே பிறக்கும். குடு என்பது ஓர் அழகுமிக்க அடிச்சொல். ஒரு குடத்தின் எல்லைகள் சுற்றிவந்து தொடங்கிய இடத்திலே முடிந்து வளையமாய்ப் பொருந்துதலைக் காணலாம். அடிப்பகுதி வளையம் சிறுத்தும் இடை பெருத்தும் வாய்ப்பகுதி மீண்டும் சிறுத்த கண்ணறியாத இடைவெளியும் இல்லாத வளையங்கள் குடத்தில் உள்ளன. குடவாய் வழியாகக் கைவிட்டால் அது ஒரு குடைவமைப்பு என்று தெரிந்துகொள்கின்றோம்.  இதேபோலும் ஒரு குடைவு ஒரு கற்குன்றில் இருந்தால் அது குகை என்றாகிறது.    குடை > குகை.  இது ஓர் உயிர்மெய் எழுத்துத் திரிபின்மூலம் அமைந்த சொல். இதுபோலும் திரிபுகள் வெளிப்படையாகத் தெரியாதவை.  குடை என்று மழைக்கு நாம் பிடிக்கும் துணைப்பொருளும் கைபிடி மேலாகும்படி பிடித்தால் குடைவைக் கண்டுகொள்ளலாம். அதை நிமிர்த்திப் பிடிக்க அது கூரைபோல் மழைநீரிலிருந்து நம்மைக் காக்கின்றது. ( இருபுறமும் சாய்வாகவும் நடுவில் மேலெடுத்தும் கூராக அமைக்கப்படுவது கூரை. )

குடை > குகை என்பது  அகு>  அடு என்பதுபோலும் திரிபு.   கு என்பது சேர்விடக் குறிப்புச் சொல்.  தமிழில் வேற்றுமை உருபுமாகும். அடு என்ற சொல்லில் டுகரம் குகரம்போல் செயல்பட்டது.  இதை நேரம் கிட்டும்போது விளக்குவோம்.

குடு என்பதன் முந்து வடிவம் குள் என்பதுதான்.   குள் -  குடு.  இதுவேபோல் குள்> குகையாகும்.  பள் > பகு என்றாகும்:  பள்ளம் ( நிலப்பிளவு).  பள் > பகு  ( பிளவாக்குதல்.  ) பள் > படு > படுகை என்பதும் பள்ளமே  ஆகும். இத்தன்மைபோல் குள் > குடை;  குள் > குகையாகும்.  இரண்டிற்கும் அடி ஒன்றுதான்.

குள் > குளம் என்பதில் நீர் சென்று சேர்விடம் என்பதை அறிவிக்க,  கு முன்னரே வந்து நிற்கிறது. தொடங்கிடமும் சேர்விடமும் குளத்தைச் சுற்றிவர ஒன்றாகிவிடுகிறது. இருவகையிலும் பொருத்தமே. நீர் பெரும்பாலும் குளத்தின் உள்ளிருப்பதால்  கு + உள் =  குள் > குளம் என்று அறியமுடிகிறது. ஈருகரங்களில் ஒன்று வீழ்ந்தது சொல்லாக்க நெறியாகும். இவ்வாறு ஒவ்வொரு தமிழ்ச்சொல்லும் ஒரு திரைக்காவியம்போல் கதையன்றோ சொல்கிறது.

"அந்தப் பெண் பேரழகி" என்னலாம்.  அழகையும் அழகின்மையையும் வரணித்துச் சொல் என்று குறுக்குசாவல் செய்தால் ஒரு சாட்சி எப்படிச் சொற்களால் உரைக்க இயலாதோ,  அப்படியே சொல்லமைவில் உள்ளீட்டுக் கவின்மையை கிளக்க - விளக்க முடிவதில்லை. இருப்பினும் அறிய முயல்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

சில திருத்தங்கள் :  2141-31032021



திங்கள், 29 மார்ச், 2021

களைக்கொட்டும் களைக்கொத்தும்

 மேற்படி இரு சொல்வடிவங்களும் சரியானவை தாம்.

கொட்டு என்பது சற்று வன்மையையும் கொத்து என்பது குறைவான வலிமையுடன் குத்துவதையும் பண்டை குறித்திருத்தல் வேண்டும் என்று தெரிகிறது.  ஆனால் இன்று இவ்விரு பதங்களிடையே நிலவும் வேறுபாடும் மறைந்து  இரண்டும் ஒருசொல்லேபோல் மக்களிடை வழங்குகின்றன.

எனவே  "-ட்டு" என்று முடியும் சொற்கள் திரிந்து "த்து" என்று முடிவுறின்-- பொருள் வேறுபடாவிடில் -  அவற்றைப் போலி என்றே கொள்ளுதல் வேண்டும். திரிந்து வேறுபொருள் குறித்தலுற்றவை பல.  ஓர் எடுத்துக்காட்டு:

முட்டு  >  முத்து.   ( முட்டி வெளிவருவது என்பது அடிப்படைப் பொருள்).

முத்து > முத்தம் என்றும் சொல் தோன்றியிருப்பதால்,  முத்து என்பதும் முத்தம் என்பதும் மென்மைத் தொடுதல்.  முட்டு என்பது வன்மைத் தொடுதல் என்பது அறிக.  அடிப்பொருள் தொடுதலே.

நத்து நட்டு என்பவும் ஆய்வுசெய்யற்குரியவை.  நத்துதல் -  மெல்ல ஒட்டிச் செல்லுதல் குறித்தது.  நத்து > நத்தை : இது மென்மையாய் ஒட்டி நகரும் உயிரி. நட்டு என்பது எச்சமாயினும்,  நடு > நட்டு என்று வந்து,  வன்மையே குறிக்கும்.

இவ்வேறுபாடுகட்குக் காரணம் யாதெனின் வன்மை மென்மையே.  ஆயினும் இரண்டும் வல்லின எழுத்துக்கள் பயின்றன என்பதிலோர் ஒன்றுபாடு இருப்பினும் அவை தம்முள் ஒன்று வன்மையும் இன்னொன்று மென்மையும் உடையனவாகும் என்பதறிக.

டகரம் காட்டும் வன்மை, இட்டு - பட்டு என்பவற்றிலும் ( எச்ச வடிவிலும் அல்லாத வினைப்பகுதி வடிவிலும் ) அறியலாம்.  இத்து, பத்து என்பவற்றில் வல்லொலி தாழ்வடைந்தது அறிக.

ஆகவே வல்லொலிகளைக் மிகுவல்லொலி தாழ்வல்லொலி என்று பிரித்து உணரவேண்டிய நிலை ஏற்படுகிறது.

அறிந்து மகிழ்க.

மறுபார்வை பின்.