இப்போது சுழுத்தி என்ற ஆன்மீகச் சொல்லின் பொருளை அறிந்துகொள்ள முற்படுதல் ஏற்புடைத்து. காரணம் : சுழுமுனை என்பதை நாம் முன் ஓர் இடுகையில் கண்டிருத்தலின்.
சுழுமுனை நாடி
https://sivamaalaa.blogspot.com/2021/03/blog-post_8.html
சுழுத்தி என்னும் சொல்லில் அதன் பகுதி அல்லது முதனிலை "சுழு" என்பதாகும். தி என்பது விகுதி அல்லது இறுதிநிலை. இதனைப் பின்னொட்டு என்றும் சொல்லலாம். தமிழ்மொழியின் இயல்பு யாதென்றால் தனக்கு வேண்டிய பொருளை உணர்த்த விகுதிகளைப் பெரும்பாலும் சொல்பகுதியின் பின்னில் இணைத்து அவ்வாறு வந்த புதிய சொல்லால் குறித்தல் என்பதை அறிக. முன்னொட்டுகளால் புதுச் சொல்லாக்கம் விளைத்தல் இந்தோ ஐரோப்பிய மொழிகளில் பெருவரவு ஆகும். தமிழிலும் இவ்வாறு சொல்லாக்கம் செய்தல் உண்டெனினும் அது குறைவே ஆகும். முன்னொட்டுப் பெற்றமைந்த சில சொற்கள் : அல்வழி, அல்திணை( அஃறிணை), இல்பொருள் ( இல்பொருளுவமை), இல்வசம் ( இலவசம், இதில் இல் என்பது இலவானதில் அகரம் இடைநிலை ) (விலை இன்றி வசமாதல் ), ஆகாயம் ( ஆ+ காயம்: காயம் என்பது சூரியன் நிலவு முதலியன காயும் ( ஒளிவீசும் )அகண்டவெளி ------ எனச் சில காண்க.
உடலுடன் கூடிவாழும் ஆன்மா அல்லது ஆத்துமா ஐந்து நிலைப்பாடுகளை உடையதென்பர். இவற்றுள் சாக்கரத்தை முன் ஓர் இடுகையில் விளக்கியிருந்தோம். இவற்றை அறிந்துகொள்ள முனையும் போது ஒரு சொல்லின் அமைப்பு அர்த்தத்திலிருந்து வேறுபட்டு முன் கருதப்படாத ஒரு பொருளுக்கு அது பயன்படுத்தப் படலாம் என்பதை நினைவில் இருத்திக்கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக, நல்ல மணம் என்று பொருள்படும் நாற்றம் என்ற சொல் இன்று தீய வீச்சத்திற்குப் பயன்படுத்தப் படுகிறது. இனி, முற்காலத்தில் ஒரு பெண்ணின் வீட்டில் போய் அங்கு "பதிந்து" வாழ்ந்தவன் ( வீட்டுக்கு மாப்பிள்ளை போல என்பர்) , இன்று பதி - தலைவன், ஆள்பவன் என்ற பொருளில் அறியப்படுகிறான். பதிதல் என்ற சொல் பொதிதல், பதுங்குதல் மற்றும் வதிதல் என்ற சொற்களுடன் பிறப்பியல் தொடர்புடைய சொல்லாவது அறிக. ( பதி, பொதி, பது, வதி ) பதி என்பதில் பெண்வழி ஓங்கிய வாழ்வுமுறையில் அவள் தலைமைக்குட்பட்டோன் என்று பொருள்படுதல் காண்க. இன்று ஆண் ஆதிக்கமே நிலைபெற்றுள்ளது. பதி என்பதன் பொருளும் மாறிவிட்டது.
சுழுத்தி என்பது சுழு> சூழ் என்ற அடியில் தோன்றிய சொல்லாகும். உறக்கம் என்பதில் ஆன்மாவிற்கு பெருமை சேர்ப்பது ஒன்றுமில்லை. யோகம், தியானம், நிட்டை என்ற செயல்களை நோக்க, உறக்கத்தில் ஆன்மாவுக்கு ஒரு பெருமைதரத் தக்க அமைவு ஏதுமில்லை. அதனால் சாக்கிரத்தைக் கேவலக் கிடை என்றனர். இதே காரணத்துக்காக சுழுத்தியும் சைவசித்தாந்தத்தில் கேவலச் சுழுத்தி என்றும் சொல்லப்படுகிறது. உறக்கத்துக்குச் செல்லும்போதும் அதிலிருந்து மீளும்போதும் சாக்கரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்ற நிலைகளில் ஒன்றில் ஆன்மா நிலவும் என்பது சிவயோகியர் கூறுவதாகும். இவற்றில் ஒவ்வொன்றையும் ஒரு நிலை என்று அறிந்து கொள்க.
ஆன்மாவைச் சூழ்ந்துகொள்ளும் நிலைகளில் ஒன்று சுழுத்தி. சுழு> சூழ். இது விழு> வீழ் என்பதுபோலும் சொல்லமைப்பு என்பதை அறிந்து கொள்க. சொல்லமைந்து கழிபல ஆண்டுகள் ஓடியபின்னர், புதிய விளக்கங்களும் கருத்துகளும் சொல்லில் இணைந்துகொள்ளும் என்பதும் அறிக. இது ஒரு காரண இடுகுறிப் பெயர். இச்சொல் மூலம் நாமறிவது, உறக்கம் ஒருவனைச் "சூழ்ந்துகொள்கிறது" என்பது; அதுபோலவே உறக்கம் ( மெய்யறிவின் உறக்கம்) அவனது ஆன்மாவையும் சூழ்ந்துகொள்கிறது. அதுவே அவனுக்குக் கேவலக்கிடையாகவும் ஆகிவிடுகிறது. சுழுத்தியும் கேவலச் சுழுத்தி ஆகிவிடுகிறது.
[ உடல் உறங்குதல் போல் ஆன்மா உறங்கினால் ஆன்மாவின் அறிதிறன் மழுங்கிவிடும் அல்லது இல்லையாகி விடும். அதுவே ஆன்மாவின் வலம் ( வலிமை) கெட்டநிலை. " வலிமை கெட்டுக் கிடத்தல் : வலம் கெட்டுக் கிட : கெடு வலம் கிட > கே வலம் கிட > கேவலக்கிடை ஆனது . கேவலக்கிடை பழிப்பிற்குரியது ]
யாம் இவற்றை எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் முழுத் தந்நினைவுடன் தான் எழுதிக்கொண்டிருக்கிறேம் (~றோம்). இருந்தாலும் இவ்வுலகமும் இவ்வாழ்வும் யாம் இருப்பதும் நீங்கள் இருப்பதும் அப்புறம் நாம் அனைவரும் இன்னும் 100 ஆண்டுகளில் இல்லாமற் போய்விடுவதும் எல்லாமே மெய் அன்று. எல்லாம் ஒரு கனவு போலத்தான். இல்லாமற் போய்விடுவது எப்படி மெய் ஆகும்? எல்லாம் பொய்!! எம் கொள்ளுத்தாத்தா எங்கே? எம் கொள்ளுப் பாட்டி எங்கே? எல்லாம் தொலைந்துவிடுதல் கண்டீரோ?
முற்றறிவு மூலம் நாம் கண்டுகொண்டது உண்மை. முற்றறிவுக்கு இறையருள் வேண்டும். அஃதில்லையானால் அது சிற்றறிவுதான். இப்போது முற்றறிவு இல்லை: நம்மில் எவரும் இராமலிங்க சுவாமிகள் போலவோ தாயுமானவர் போலவோ அறிதல் முற்றுறப் பெற்றோமில்லை.
அவர்கள்: [அறிவுஅறி கின்ற அறிவு நனவாம்] நனவில் நின்றனர். அவர்கள் தம் ஆத்துமீகத் தெளிவில் நின்று ( இது அறிவு) அறிகின்ற மெய்ப்பொருள் ( முற்று அறிவு) நனவு எனப்படும். நம் நனவு என்று நாம் கொள்வது ஒன்றும் ''நனவில்லை". நம் அறிவு ஒரு கனவுதான்!! காரணம் நம் "அறிவு" அறியாமையாகிவிட்டது. ( ஒரு நிலையற்றதை நிலை என்று எண்ணியிருத்தல் புல்லறிவாண்மை , கேவலம். புல்லறிவாண்மை பல வகையாகலாம். அவற்றுள் நிலையற்ற ஒன்றை நிலையானது என்று எண்ணுவது ஒன்று. ) . நம் தரவினை நாம் "அறிவு" என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது அறிவு அன்று; அது அறியாமை. ஆகவே கனவு. உடல்உறக்கமின்றியே கனவிற் பட்டோம். விழித்துக்கொண்டே கனவில் உள்ளோம், வீழ்ந்தோம். ) நம் அறிவு நமது அறியாமையை உணர்ந்துகொண்டிருந்தால் அது சுழுத்தி. சூழ்ந்துள்ள பொய்யறிவு. விழித்துக்கொண்டிருந்தாலும் நம்மைச் சூழ்ந்துகொண்டுள்ளது. உடல்கொள் உறக்கத்திலும் நீங்கியபாடு இல்லை. விழிப்பிலும் நம் நிலை உறக்கம் ஆகிவிடுகிறது. அறிவு உண்மையறிவாய் விடில் - மெய்ப்பொருள் கண்டுவிடில் அது துரியம் எனப்படும். இந்தச் சூழ்தெளிவின்மையைத் துருவி அப்பால் சென்றடைந்தோம் எனில் : துருவு > துரு+ இ + அம்> துரியம். திருமந்திரம் பாடல்: 2206:
அறிவுஅறி கின்ற அறிவு நனவாம்