ஞாயிறு, 7 மார்ச், 2021

சில சொல்லியல் நெறிமுறைகள், தத்துவங்கள். சுழு> சூழ்

 ஓடுதல் என்ற சொல்லில் வினைப்பகுதி   "ஓடு"  என்பதுதான்.  ஆகவே ஓடுதல் என்பதில்  தல் என்பது விகுதி என்று முடிவு செய்துவிடில், ஓடு என்பது முதனிலை அல்லது பகுதி ஆகி,   தெளிவாகவே உள்ளது.  ஆடல் என்ற சொல்லில் ஆடு என்ற சொல்லே வினை.  ஆதலின்  வினைச்சொல் அதற்குரிய பொருளுடன் தனியாகவும் அழகாகவும் கிடைத்துவிடுகிறது.   அல் என்பதே விகுதி.

ஆனால் சுழல் என்ற சொல்லில்  அல் என்பது விகுதி என்று வைத்துக்கொண்டால் அதில் சுழு என்றொரு   பகுதி மொழியில் இல்லை. (காணாமற் போய்விட்டது). விழு என்பதில் பகுதி விழு.  இச்சொல் விகுதி பெறாமல், தனியே நின்று பொருளுணர்த்துகிறது.   ஒப்பிட சுழு என்பது தனியே பொருளுணர்த்தவில்லை. எனினும்  சுழுமுனை,  சுழுத்தி என்று சொற்கள் உள்ளன.

ஆகவே சுழு என்ற ஒரு வினைச்சொல் ஒரு காலத்தில் வழங்கி,  தன் தனிநின்று பொருளுணர்த்தும் ஆற்றலை இழந்துவிட்டது என்று முடிவு செய்யவேண்டும்..  ஒரு மொழியில் ஏற்பட்ட எல்லாச் சொற்களும் ஏற்பட்டு முன் வழங்கியவாறே இருந்துவிடுவதில்லை.  சில இன்னும் உள்ளன.  சில தம் ஆற்றலை இழந்துவிட்டன. இவ்வாறு வினைத்தன்மையை இழந்த சொற்கள் மொழியில் இன்னும் இருத்தல் வேண்டும்.  அவற்றை நீங்கள் தேடிக் கண்டுபிடித்தல் நன்று.

சுழு என்பது ஒரு தனிச்சொல்லாகவும் இல்லையாதலால்  அதையும் அதன் பொருண்மையையும் மீட்டுருவாக்கமே செய்ய இயலும். சுழு என்பதினின்று அதனுடன் இணைந்து வேறு சொல் தோன்றியிருப்பதால்  அதை  ஓர் அடிச்சொல்லாகக் கொண்டு விளக்கிவிடலாம்.  ஆனால் அல் என்னும் வினையாக்க விகுதி பெற்ற சுழல் என்ற சொல் உள்ளது.  அது முதனிலைப் பெயராகவும்  சுழலுதல் என்று வந்து " சுழல்" என்பதே பகுதியாகவும்   வருகிறது.   சுழு என்பது தன் வினையாற்றலை இழந்தபின் அடுத்து அதற்கு ஏற்படும் வடிவமைப்பு சுழல். என்பது தானே வினையாகிவிடுகிறது. எனவே சுழலுதல் என்பது நல்ல தொழிற்பெயராய் மொழியில் ஏற்கப்பட்டுள்ளது.

சூழ் என்பது வினைப்பகுதியாகவும் உள்ளது.  சூழ்தல்,  சூழல் என்று  தல், அல் என்ற விகுதிகளை ஏற்று,  ஒரு வினைப்பகுதி மொழியில் பெறும் ஆற்றல்நிலைகளைப் பெறுகின்றது.  விழு , வீழ் என்ற சொற்கள் போல சுழு என்பது தனிவாழ்வு பெறாமல்  வீழ் என்பதை ஒக்க சூழ் என்றுமட்டும் வடிவம் பெறுகின்றது.  ஏற்கெனவே  நாம் பார்த்தபடி  சுழு என்பது ஓர் ஒட்டுவாழ்வு பெற்று இயல்வதை  அறிந்துகொள்கிறோம்.  இன்று அது ஓர் அடிச்சொல் என்ற தகுதியை மட்டுமே பெறுகிறது. சுழு+ அல் > சுழல் என்பதும் தன் தொழிற்பெயர்த் தன்மை மறைந்து தானே ஒரு வினையாய் முடிகிறது.  முயல்+சி என்பது முயற்சி என்று தொழிற்பெயராய் அமைந்தபின், முயற்சித்தல் என்று மீண்டும் ஒரு தொழிற்பெயராய் ஆகி முயற்சி என்பதை ஒரு வினைப்பகுதி ஆக்குவதற்கு முற்பட்டதுபோன்ற நிலையே இதுவாகும்.

சுழு >  சூழ்

விழு > வீழ்

(வழு) > வாழ்   (வழுத்து,   வாழ்த்து )

( அழு) >  ஆழ்  ( மேலிருந்து கீழாக உட்செல்வது)   அழுந்து, அழுத்து, ஆழ்தல்.

(குழு ) > கூழ்   அடிப்படைப் பொருள் : ஒன்றாக ஒட்டியிருப்பது.

(உழு) > ஊழ்   [ உள் > உழு }

இவற்றின் வளர்ச்சியும் பொருண்மையும் அவ்வளவு எளிதில் வெளித்தெரிவதில்லை.  ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். இதைத் தான் தொல்காப்பியர் ஒரே தொடரில் " விழிப்பத் தோன்றா" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

உடல்நலம் காக்க.



புதன், 3 மார்ச், 2021

இருட்டு இல்லை ஆனால் திருட்டோ?

 We do not know whether this is a drama or a real incident from one of the countries in South East Asia.


இருட்டு நேரமாகத் தெரியவில்லை

திருட்டும் நடக்குமோ.

இன்னொரு நாட்டில்.


உதவி யாரும் செய்தனரோ

உண்மை அறியோம். 


செவ்வாய், 2 மார்ச், 2021

தமிழ் ஆங்கில இலக்கியங்கள் ஒப்பீடு

 தமிழிலக்கியம் ஆங்கில இலக்கியத்தினின்று சற்று வேறுபட்டதென்பதைத் தமிழறிஞர்கள் நன்கு உணர்ந்து எழுதியுள்ளனர். இரண்டு இணையற்ற பேராசிரியர்கள் இதைத் தங்கள் முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு வரைவுகள் சமர்ப்பித்தனர். இவர்களுள் தனிநாயக அடிகளார் மேலை மொழிகள் பலவும் கற்று அறிந்த பெரும்புலவர். தம் வாழ்க்கைத் தொழிலில் இலத்தீன் முதலிய  மேலை மொழிகளைத் தினமும் பயன்படுத்தும் வசதிகளை உடையவராய் இருந்தார்.

இவர்கள் கூறினார்கள் என்பதற்காக அன்றி,  நாமே ஆங்கில இலக்கிய வகுப்பில் சென்று படிக்கும்போது,  இயற்கையைத் தனிப் பாடுபொருளாக வைத்துப் பாடிய பல கவிஞர்களைக் காண்கின்றோம். அத்தகைய கவிதைகளைத் தமிழில் அண்மைக் காலத்துத் தமிழிலக்கியங்களிலன்றிக் காண முடிவதில்லை. ஆற்று வெள்ளம் என்று எடுத்துக்கொண்டால்,  "ஆற்று வெள்ளம்போல் பாயும் உன்பால் எனக்குள்ள காதல்" என்று தமிழ்க்கவி பாடுவான்.  இது அப்பொருளை ஓர் உவமையின் பொருட்டுப் பயன்படுத்திக் கொண்டதே அன்றி வேறில்லை.  ஷெல்லி முதலியோர்  சருகுகள் இலைகள் முதலியவை காற்றில் புரள்வதைத் தனிப்பொருளாய்ப் பாடினர். இயற்கையை இவ்வாறு தனிமேடையில் வைத்துப் பொருட் கலப்பின்றிப் பாடிய கவிதைகள் தமிழில் தேடிப்பிடிக்கவேண்டும்.  ஆகவே இயற்கை தனிப் பாடுபொருளாய் அமைதல் அருகி நிற்பதால் அதை ஓர் இலக்கியப் பண்பாடாய்க் கருத  இயலவில்லை.   

இயற்கையுடன் மனிதன் என்றும் சமமாக நிற்க இயலாது.   மகுடமுகி (கொரனா )  நோயில் பலர் மடிந்துவிட்டனர்.  ஆனால் அதனால் இயற்கைக்கு ஒன்றுமில்லை.  எப்போதும்போல் காலைக் கதிரவன் செவ்வொளியைச் செலுத்திக் கடற்பரப்பில் எழுகின்ற காட்சியில் எந்த மாற்றமும் இல்லை. மனிதன் இயற்கையின் ஒரு பகுதிதான்.  அதை ஆள்வதாக அவன் நினைத்துக் கொண்டாலும்  இயற்கைக்கு உட்பட்டு அவன் மாய்பவன் தான்.  அவன் செய்யும் காதல் உட்பட்ட எந்தத் தொழிலும்  அவன் இயற்கையின் கொத்தடிமை என்பதையே மெய்ப்பித்துக் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.

நோயினின்று காத்துக்கொள்ளுங்கள்.

ஒரு தட்டச்சுப் பிழை திருத்தப்பட்டது.

எழுத்து பிழைகளைச் சுட்டிக்காட்டி உதவுங்கள்.

நன்றி.