எத்துதல் என்பது தமிழ் அகரவரிசைகளின்படி ஏய்த்தல் என்பதாம்.
"எத்தித் திருடும் அந்த காக்கை -- அதற்கு
இரக்கப் படவேண்டும் பாப்பா"
என்பதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். ஆனால் பேச்சு வழக்கில் இன்னொரு பொருளும் இருந்தாலும், அந்தச் சொல்லை அப்பொருளில் பயன்படுத்துவோரே அதைத் தங்கள் நினைவுகளிலிருந்து மீட்க முடியவில்லை போலும். " அவன் காலால் எத்தியதில் ஒரு பல விழுந்துவிட்டது" என்ற பேச்சு வாக்கியத்திலிருந்து இதை உணர்ந்துகொள்ளலாம்.
"இந்த வண்டி இன்னும் ஒருமணிக்கூறுகொண்டு திருவனந்தபுறத்து எத்தும் " என்ற மலையாள வாக்கியத்தில், எத்தும் என்பது சென்றடைதலைக் குறிக்கிறது.
அகரவரிசைக்காரர்களும் நிகண்டுகளும் ஒரு சொல்லின் எல்லாப் பொருள்களையும் கூறிவிடுவதில்லை. அடிசறுக்குவது மனித வலிமைக்குன்றுதலையே காட்டுகிறது.
எத்துவது என்பது உதைத்தல் என்ற பொருளில் இன்னும் வாழ்கிறது. இப்போது இச்சொல்லைப் பயன்படுத்துவோர் குறைவுபோலும். "கிக் பண்ணிவிட்டான்" என்பர்.
எத்துதல் என்பது உண்மையில் ஒத்துதலே. கால் சென்று ஒத்தித் திரும்புகிறது. எகரம் ஒகரமாகும் என்பதை முன்னர்க் கூறியுள்ளோம். எ-ஒ திரிபு.
எத்துதல் - அடைதல், சேர்தல். ஒத்துதலும் அதுவன்றி வேறில்லை.
ணகரம் னகரமாகும் என்ற எம் இடுகைகாண்க. இவ்விதிப்படி, அணித்தாகுதல் என்பது அனித்தல் என்று திரியும்.
எத்த - சென்றடைய,
அனித்தல் - அணிமையாகுதல்.
எத்தனித்தல் என்பதன் பொருளறிந்தீர்.
இதை யத்தனித்தல் என்றும் எழுதுவர். அகர வருக்கம் யகர வருக்கமாய் நிகழ்வதுண்டு. ஆனை - யானை ; ஆக்குதல் - யாத்தல் என்பதும் அறிக. (ஆ- யா.) ஆங்கு - யாங்கு.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.