சரியக்கூடியவை சரியும்போது, ஒன்றன் அழுத்தத்தால் அடுத்து உள்ளது முன்னது பட்டு வீழ்கின்றது. இவ்வாறு சரிதலைச் சரம் என்றனர். சரி + அம் = சரம் ஆகிறது. இங்கு வினைச்சொல் சரிதல். இகரம் கெட்டது.
படி+ அம் = பாடம். இது முதலெழுத்து நீண்டு, டி என்பதன் இகரம் கெட்டு அமைந்தது.
வரிசையாகச் சரிவது, வச்சரம். வரிச்சரம் என்பதே இடைக்குறைந்து வச்சரம் ஆனது. சரிதலென்பதன் அடியாக விழாமல் ஒன்றன்பின் ஒன்று வருவது சரம் என்றே குறிக்கப்பட்டது. இது ஓர் ஒப்புமையாக்கம் ஆகும். சரவிளக்கு என்பதில் எதுவும் விழுவதில்லை என்றாலும் அது சரிந்து விழுதல் போலவே கற்பித்துச் சொல் அமைந்தது. விழுக்காடு என்ற சொல்லை நோக்கின், எதுவும் விழுதல் இல்லை; எனினும் விழுதற்கு இணையான நிகழ்வு ஆகும். எனவே. ஒன்றன்பின் ஒன்றாய் விழுதல் என்ற கருத்திலிருந்து (விழாமல்) வருதல் குறித்தது ஒரு கருத்துவளர்ச்சியே ஆகும்.
வீதம் என்ற சொல்லைக் கவனியுங்கள். இது விழுக்காடு என்று பொருள்படும். (பெர்சன்டேஜ் என்பர் ஆங்கிலத்தில்). இதுவும் விழு என்ற சொல்லின் இன்னொரு வடிவமான வீழ் என்பதனடியாய், வீழ்தம் என்று உருப்பெற்று, ழகர ஒற்றுக் கெட்டு வீதம் என்றாயிற்று. விழு> விழுதம் > (முதனிலை நீண்டு) வீதம் எனினும் அதுவே. இதையறியாத சிலர், இது தமிழன்று என்று அலமரலாயினர். நுழைபுலம் இன்மைதான் இந்த வழுக்கல் முடிவுக்குக் காரணம் என்போம். ழகர ஒற்று வீழ்தல், வாழ்த்தியம் என்ற சொல்லிலும் நிகழ்ந்துள்ளது கூறுப. அது வாத்தியம் ஆனது காண்க.
சுருங்க உரைப்பின்:
சரிதல் விழுதல்; அடுத்துவரல்.
ஒரு மரம் சரிந்தது என்றால், நின்ற நிலை மாறி, தரையை அடுத்துவந்துவிட்டது என்பதுதான் பொருள். அம்மரம் ஒரு நிலையில் நீங்கி மறுநிலைக்கு வந்தது. ஆகவே கருத்துவளர்ச்சியில் தவறில்லை.
சரி > சரம். ( அடுத்துவரல்.).
எழுத்துக்கள் அடுத்தடுத்து வருதலை உடையவை. அகரம் ஆகாரம் இகரம் ஈகாரம் என. இது அடு + சரம் = அடுச்சரம், டுகரம் இடைக்குறைந்து, அச்சரம் ஆகும். அடுத்தடுத்து வரிசையாய் வைக்கப்படுவன. டுகரத்தை முழுமையாக நீக்கிவிடாமல், டுகரத்தில் உகரம் மட்டும் குறைத்து, அட்சரம் என்பது இன்னொரு வடிவமாகும்.
இவற்றைத் தந்திரம் என்றும் வருணிக்கலாம். அல்லது இயல்பான சொல் அமைப்பு என்றும் சொல்லலாம். எப்படிச்சொன்னால் என்ன?
அட்சரம் என்பது உண்மையில் alphabet தான்.
அடுக்குச் சரம் என்று வந்திருக்கவேண்டுமோ? அடுக்கு என்பதில் அடு என்பதே அடிச்சொல். கு என்பது சேர்விடம் காட்டும் விகுதி. சென்னைக்கு என்பதில் அது உருபு. அந்த விகுதியை ஏன் கட்டி அழுதுகொண்டிருக்கவேண்டும் என்று அந்தச் சொல்லை அமைத்த அறிவாளி அதை விட்டுவிட்டான். அவ்வளவுதான் கதை. எல்லாவற்றையும் வைத்துக்கொண்டிருந்தால், வாக்கியம் ஆகுமே தவிர சொல்லாகாது.
அறிக, மகிழ்க.
மெய்ப்பு பின்