புதன், 25 நவம்பர், 2020

குந்தாணி. சொல் திறம்.

முன்வந்த இடுகை இங்கு உள்ளது.

https://sivamaalaa.blogspot.com/2020/11/blog-post_24.html

மேற்கண்ட இடுகையில் குந்தாணி என்ற சொல்லை ஆய்வு செய்யும்படி நேயர்களைக் கேட்டிருந்தோம்.  இதுவரை யாரும் எதையும் தெரிவிக்கவில்லை என்றாலும், இப்போது நாம் அதைக் கவனித்து அறிவோம்.

குந்தாணி என்பதில் குந்து என்பது முன் நிற்கும் சொல்.  இது கு + து என்ற இரண்டு உள்ளீடுகளை உடையது.

கு என்பது சேர்விடம் குறிக்கும் சிறுசொல்.   அமெரிக்காவிற்கு என்பதில் அது உருபாக வருகிறது.  ஆனால் குந்து என்பதில் அஃது இடம் குறிக்கிறது.

கு எனில் இடத்தில் என்று பொருள்.

து என்பது வினையாக்க விகுதியாய் வந்துள்ளது.  

முழுப்பொருள் இடத்தில் இரு என்பதே.

ஓரிடத்தில் வன்மையுடன் சென்று சேர்தல்  சற்றே  மென்மையுடன் சென்று சேர்தல் என்று சேர்தல் இருவகைப்படும்.  வன்மையுடன் சேர்தலைக் குறிக்க, வல்லெழுத்து சேர்க்கப்படும்.   கு + து >   குத்து என்று.  து என்பது வல்லெழுத்தே என்றாலும், குது என்றால் அது மெதுவடைந்துவிடுகிறது.  குத்து என்று தகர ஒற்று நுழைந்தால்தான் வன்மை மேல்வருகிறது.  கையால் குத்துதல், நெல்குத்துதல் குச்சி குத்துதல் முதலியவற்றில் வன்மை உள்ளது.

சற்று மென்மையுடன் சென்று சேர்தலே  குந்துதல். இந்த மென்செயல் குறிக்க, சொல்லும் நகர ஒற்று  ( ந் ) பெற்று ஒருவாறு வன்மை குன்றுகிறது.  குத்துதல் என்ற செயல்வன்மை குந்துதலில் இல்லை.  ஆனால் இரண்டும் சென்றடைவினையே குறிக்க எழுந்த சொற்கள்.

ந் என்பது  மெல்லினம். மென்மை குறிக்க, மிக்கப் பொருத்தமாகிறது.

நெல்லைக் குத்துவது உரலுக்குள் ஓர்  உலக்கை அல்லது தடி. அது நெல்மேல் சற்றே மென்மைப்படவே குத்தப்படுவதால்,  அது அவ்வேலையை நல்லபடி அறிந்தோரால் கையாளப்படுகிறது என்று சொல்லவேண்டும்.  இந்தக் கையாளுதலைக் குறிக்க,  ஆள் என்ற சொல் அடுத்து வைக்கப்படுகின்றது.

அதன்பின் இடைநிலையும் விகுதியும்.  இடைநிலையான  ந் என்ற ஒற்றும்  முடிவாக இ என்ற இ'றுதிநிலையும் வைக்கப்பட்டுள்ளன.   எல்லாம் இணைக்க,

குந்து + ஆள் + ந் + இ =  குந்தாணி ஆகின்றது.

ஓட்டுநர் என்ற சொல்லில் ந் + அர் வந்ததுபோலவே,  இங்கு  ந்+ இ  வருகிறது.

அறிக. மகிழ்க.



 


சிங்கப்பூர்க் கொரனா (முடிமுகிக் கிருமி)

 சிங்கப்பூரில் உள்ளூர்வாசிகளிடம் நோய்நுண்மித் தொற்று இல்லை. வெளியூர் வருகையாளர்களால் இந்நோய் வந்தபோதும் அவர்கள் வீட்டிருப்பு மூலமோ வேறுவகையிலோ தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இன்று ஏழுபேருக்குத்தான்.

அதிகம் ஒன்றுமில்லை.  இன்று திகதி 25, நவம்பர் 2020.

இது அரசு அறிவிப்பு மூலம் அறிந்தது.

செவ்வாய், 24 நவம்பர், 2020

இலக்கணமும் சொல்லாய்வும்

பகுபதத்தில் தொகுத்தல், பகாப்பதத்தில் முக்குறைகள்  என்று  இலக்கண ஆசிரியர்கள் கூறுவர். பார்த்தால் இத்தகு வேறுபாடு சொல்லாக்கக் கலையில் அல்லது சொன்மூலக் கண்டுபிடிப்பில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்திவிடுவதில்லை.  ஆகவே இடையில் எழுத்துக் குறைவுகள் அல்லது ஒலிக்குறைவுகள் ஏற்படின், எத்தகு பதமாயினும் இங்குள்ள இடுகைகளில் இடைக்குறை என்றே குறிக்கப்பட்டுள்ளன என்பதை பலகாலும் ஈண்டு வந்து சென்றோர் உணர்ந்திருக்கக் கூடும். ஒன்று சொல் குறுகிவிட்டது  அல்லது நீண்டுவிட்டது : அவ்வளவுதான்.

இலக்கண நூலார் ஒவ்வொருவரும் முக்குறைச் சொற்களுக்குப் பெரும்பாலும் எப்போதும் காட்டப்பெறும் எடுத்துக்காட்டுகளையே காட்டுவர். பாடத்திட்டங்கள் மாறும்வரை, வாத்தியார்களும் அவற்றையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். பல்கலைக்கழக வாத்தியார்முதல் பொடியன்களுக்குக் கற்பிப்போர்வரை எல்லாரும் அவ்வாறே.  தொழில் முறை அவ்வாறு உள்ளது. பாகவதர்கள் பாட்டுகள் போல. பாகவதர் சிலர்மட்டுமே சின்னூரில் பாடிய பாகத்தை  (பாகம் ஒன்று)  குன்னூரில் மறுபடியும் பாடாமல் இன்னொரு பாகத்தை (பாகம் 2)ப் பாடி,  3-வது ஊரில் ( முன்னூரில்) மூன்றாவது பாகத்தைப் பாடுவராம்.  அருகருகே உள்ள ஊர்களில் அதே பாகத்தைப் பாடக்கூடாது என்பதற்காக.

நாம் இங்குக் குறுக்கச் சொற்களைப் பெருவாரியாகக் காட்டியுள்ளோம்.

கிருஷ்ணன் என்ற சொல்கூட இடைக்குறையாய் வந்து முன் நிற்கிறதே.  இசையமைப்பில் புகழ்பெற்ற (சங்கர்-) ஜெய்கிஷன் பற்றி எண்ணும்போது, ~~ ஜெயக்கிருஷ்ணன் என்பதுதான் வடக்கில் இடைக்குறைந்து அவ்வாறு வழங்குகிறது என்று நாம் சொல்வோம். பகர வகரத் திரிபாயின், பன்சாடா என்பது வன்சாடா ஆகும் என்றும் பசந்த் என்பது வசந்தம் என்றும் சொல்வோம்.

நீங்கள் பின்னூட்டமிட்டு வாதிக்கப் பலவுண்டு ஈண்டு.

இரும்பினால் செய்யப்படுவதே ஆணி,  ஆனால் குந்தாணியில் ஆணி எதுவும் இல்லை. அப்புறம் எப்படி அதற்கு ஆணி என்ற பெயர் ஏற்பட்டது?   குந்துவது என்பது உட்காருவது, அமர்வது என்னலாம். உங்கள் ஊரில் உள்ள குந்தாணியில் ஆணி அடிக்கப்பட்டுள்ளதா என்பது யாம் அறியாதது.  அடித்திருந்தால் பெயர் பொருத்தம் என்று விட்டுவிடுவோம். இல்லை என்றால் மேலும் ஆய்வு செய்வோம். உள்ளதுகாறும் மென்மேலும் அறிவினை வளர்த்துக்கொள்ளுதல் நன்று,   இன்றேல் ஊதியமில்லை உயிர்க்கு.

பின்னூட்டமிடுங்கள். உங்களிடமிருந்து அறிய ஆவல்.

நாளை அல்லது பின்பு அளவளாவுவோம்.