இடையர்தம் வாழ்வில் பசுமையைப் புகுத்தியது ஆக்கள் என்னும் பசுக்களே ஆகும். பசு என்னும் சொல்லும் தமிழரிடத்துப் பட்டி தொட்டிகளிலெல்லாம் வழங்கும் சொல். இது எப்படி இப்பொருளை அடைந்தது என்பதை அறிவோம்.
இடையர்களே பசுக்களை பெரிய அளவில் வளர்த்துப் பால் தயிர் மோர் வெண்ணெய் எல்லாம் விற்றுப் பண்டமாற்றும் பின்னர் பணமும் பார்த்தனர். பூசாரிமார் சிறிய அளவிலே பசுக்களை வைத்திருந்திருக்கலாம்.
இடையர்தம் வாழ்வில் பசுமை ஆக்கிய ஆக்கள் பசுக்கள் எனப்பட்டதானது , இந்த ஆக்கள் "பசு" என்ற பசுமை தந்த வாழ்வின் அடிப்படையில் அவ்வாறு குறிக்கப்பட்டன. இந்த இடையர் சொற்பயன்பாடு, நாளடைவில் எங்கும் பரவி ஆவிற்குப் பசு என்பதே பெயராகிவிட்டது.
பசு வென்பது பசுமை என்னும் பண்புப் பெயரின் கடைக்குறை. ஆகுபெயராய் ஆவைக் குறித்தது ஆயர்தம் பெருமையைக் காட்டும் பழநிகழ்வு ஆகும். பசுமை என்பது செல்வப் பெருக்கம். மாடு என்பதும் செல்வப் பொருள் உடைத்தாம். மாட்டைச் செல்வம், ஆக்கம், பசுமை என்று தமிழர் கருதினர் என்பதைச் சொல்லத் தேவையில்லை. பண்பாடு.
ஆதாரம், ஆதரவு என்ற சொற்களும் இத்திறத்தனவே ஆகும். எதிரிகள் ஆநிரை கவர்ந்த போது ஆ பற்று > ஆபத்து ஆனது. பற்றுதல் கவர்தலும் ஆகும்.
அறிக மகிழ்க.
--------------------------------------------------------
குறிப்புகள்:
Pasu is a farming term as in English where "course" (taking a course or certain course) is a nautical term. பொருள் பதிவுபெற்ற ஒரு சொல் பதமாகும், பதி+ அம் = பதம். இறையுணர்வு பதிந்த செய்யுள் பதிகம் - பதி + கு+ அம் . கு இடைநிலை. அமைவு காட்டும் அம் விகுதி அல்லது இறுதிமிகுதி. ( இறுதிநிலை)
ஒப்பீடு: ஆ என்ற சொல்லும் பசுவென்ற சொல் போலவே, ஆக்கம் குறிப்பதாகும். ஆதல், ஆகு, ஆகு+ அம் = ஆக்கம், என்பவும் இன்னுமுள்ள சொல்வடிவங்களும் இந்தக் கருத்தொற்றுமையைக் கொண்டுதருகின்றன. ஆக்கம் தருவது ஆ, பசுமை தருவது பசு. இப்பொருண்மை இன்னும் தொலைந்துவிடாமல் கற்படிவு (fossils) போல நம்மை எதிர்கொள்கிறது.
மாந்த வளர்ச்சி நூலைப் பின்பற்றி, மனிதன் எப்போது பண்டைவரலாற்றில் பசுபோலும் விலங்குகளை வளர்த்தெடுத்துப் பயன் காணத் தொடங்கி நன்மை பெற்றானோ, அப்போதே அவனுக்குப் பசுமையானது வாழ்வில் உண்டாகத் தொடங்கிவிட்டது என்று முடிக்கத்தான் வேண்டியுள்ளது. பசு என்ற சொல் பால்கறக்கும் பெண்மாட்டுக்குப் பெயராய், அப்பழங்கால முதல் இன்றுவரை தமிழில் வழங்கிவருகின்றது. இது ஒரு பேச்சுமொழிச் சொல். பேச்சுமொழிச் சொற்களைத் தமிழிலும் குறைத்து எண்ணும் போக்கு, இன்றுபோலவே சங்க காலத்திலும் இருந்தது என்பது தெளிவு. ஆவென்பது அரசர் கேட்புக்குரிய சொல். பசுவென்பது ஊர்ப்பிள்ளைகள் சொல். பிற்காலத்தில் மதங்கள் இறைகொள்கைகள் சிறந்து நின்ற காலை, பசுவென்பது மதத்துறைக்குள் புகுந்து வேறு பொருட்சாயல்களைக் கவர்ந்துகொண்டு இன்றும் காணப்படும் நிலையை அடைந்துவிட்டது . இச்சொல்லுக்கான மதத்துறை விளக்கங்கள் பிற்காலத்தவை. பல மதநூல்களினுள்ளும் புகுந்து பசுவென்பது புதிய பொருண்மையையும் பொருட்சாயல்களையும் அடைந்தது.
கடவுட்சிந்தனை ஒவ்வொரு மனிதனுக்கும் மனிதகுலத்துக்குமே வளர்ச்சிமுதிர்வில் வருவது, சிறுபிள்ளைகளைப் பழக்கினாலே வருவது. தானாக வருவதில்லை.
பிணி மூப்பு சாக்காடு உணவின்மை இன்னல்கள் எல்லாம் வரவேண்டும். சாவின் திறமறியாமல் திகைக்கவேண்டும். அப்போதுதான் சாத்திறம் ( சாஸ்திரம் ) அவன் அறியவும் பின் வெகுகாலம் சென்று அறிந்தன தொகுக்கவும் மனிதன் தொடங்குவான். பெரிய பெரிய ஞானிகட்கும் பிற்பாடு வருவதுதான் இறையறிவு.
முற்பிறப்புகளின் தாவற்பதிவுகளாலும் ஏற்படுமென்பர். அதுவும் பட்டறிவுதான்.
"கெட்டபின்பு ஞானி."
௷ய்ப்பு பின்