ஓதம்:
ஓதம் என்ற சொல் மனிதனின் விரை அளவின் பெரிதாதலைக் குறிக்கும்.இது ஒரு நோய். இதனை ஆங்கிலத்தில் hydrocele என்று சொல்வர். ஒரு தேய்வைப்பை baloon / நெகிழிப்பை காற்று ஊதிப் பருத்தலைப் போல் விதைப்பை ( விரை) ஊதிப்போகும் நோய். ஆனால் இதில் நீர் மிகுந்து பருத்துவிடுகிறது என்பர். இதை மருத்துவரிடம் அறிக.
ஊது (ஊதுதல் ) என்ற சொல்லினின்று இது வருகிறது, ஊகாரம் ஓகாரமாய்த் திரியும். எனவே ஊது > ஊதம் > ஓதம் ஆயிற்று.
ஓதமென்ற சொல் அண்டவாதம் என்னும் இந்நோய் குறிப்பதுடன், வேறு அர்த்தங்களையும் உணர்த்தும். அவற்றுள் நீர்ப்பெருக்கு என்பதும் ஒன்று. எனவே இந்த நோய் நீர்பெருக்கினால் விளைந்தது முன்னோர் உணர்ந்திருந்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இவையல்லாமல் கடல், கடலில் எழும் அலை, ஈரம் முதலிய அர்த்தங்களையும் இச்சொல் தெரிவிக்கும்.
ஊதுதல், ஓதை, அண்டம்:
கடலில் காற்று " ஊது"வதாலும், அலைகளும் "ஊது"தலால் உண்டாவதாலும் ஊது > ஓது என்ற திரிபு பொருத்தமானதே. ஓதை என்ற சொல்லுக்கும் காற்று என்னும் பொருள் உள்ளது.
இங்குக் குறித்த அண்டமென்னும் சொல், விரைப்பை உடலை அண்டி அமைந்திருத்தலால் அண்டு > அண்டம் என்று வருவதாகும். அண்டுதலாவது அடுத்து நிற்றல். அடு> அண்டு. இடையில் ஒரு மெல்லெழுத்துத் தோன்றி அமைந்த சொல். " அண்டம் ..... அடுக்கடுக்காய் அந்தரத்தில் நிறுத்தும் " என்று தாயுமான அடிகள் பாடலில் வருகிறது. ( தாயுமானவர், மண்டலம் 1)
அண்டம் என்னும் சொல்லுக்கு முட்டை என்பது உட்படப் பிற பொருள்களும் உள.
" அண்டமா முனிவரெல்லாம்
அடங்கினார் பெண்டுக்குள்ளே"
என்பது ஒரு நாட்டுப்பாடல் வரி. இதில் அண்டமென்பது பூமியுடன் வானத்தையும் சேர்க்கும் சொல். நாமறியா நாட்டுப்புறத்துப் பாவலர்கள் எவ்வளவு அழகாகத் தம் கவிதைகளை வடிக்கிறார்கள் கண்டீரோ? அண்டம் பூமி மட்டுமே குறிப்பதுமுண்டு. இடனறிந்து பொருள்கொளல் அறிவார் கடன். முந்திரிக்கொட்டைக்கு அண்டி என்ற பெயரும் உளது, அது பழத்துக்கு வெளியில் அதனை அண்டி இருப்பதானால்தான்!.
காற்று, வளி, வாய்வு (பேச்சில் ), வாயு
குருதி ( (அ)ரத்தம் ), வாயு (காற்று) முதலியவை உடலை அண்டி நிறுவப்பெற்று, அவ்வுடலையே உடலின் திறன் குறைந்தக்கால் நோயுறுத்துவன. ஆகையால், கல்லண்டம், குடலண்டம் என்று நம் தமிழ்மருத்துவம் கூறும். வளிமுதலாய் எண்ணிய மூன்றும் மிகினும் குறையினும் நோய்செய்யு மென்றார் நாயனார். பல வலி இழுப்பு முதலிய ஆக்கி உடலின் குறித்த இடங்களில் தொல்லை தருவதால், மற்றும் மூச்சு முதலியவற்றால் உயிரையும் வயப்படுத்துவதால், வயம் > வய > வாயு ஆகும். வாய் - இடம் என்றும் பொருள். எவ்விடத்தும் உள்ளிருப்பதால் வாய் > வாயு எனவும் படும். வாய் இடமெனவே, உ - உள்ளிருப்பது, வாயு ஆம். உயிர்கள் காற்று உட்கொண்டு வெளிவிடுகின்றன. எங்கிருப்பதும் காற்று. வாய் +உ ஆகும். இவ்வாறு பலபிறப்பி ஆவது இக்காற்றுச் சொல்.. வாழ்வு வாய்க்கப்பெற்றோம் காற்றினால் ஆதலின் வாய்த்தல் > வாய் > வாயு எனினுமாம். வாய்வு என்ற பேச்சுவழக்குச் சொல்லில் இன்றளவும் இச்சொல்லில் பகுதி நிலைத்துள்ளமை காண்க. வாய்த்தல் > வாய்வு. வாய்வு காலைக் குத்துகிறது, தோளில் குத்துகிறது என்பர்.
உ ஒ திரிபு
உடனென்ற சொல் (உருபும் ஆம்), உடு என்பதுடன் அன் விகுதி பெற்றது. உடனென்பதை வேறு சொற்களால் சொல்வதாயின், உடு- கூடவே, அன் - அங்கு என்று கூறி விளக்கலாம். ஒடு எனபது அப்பொருளதே. உ - ஒ உறவை அறிந்துகொள்க. ஒடு > ஒடுங்கு ( வினை). ஒடுங்கி நிற்பது ஒருங்கு செல்லுமாகலின், ஒடு > ஒரு. மடி - மரி திரிபு கவனிக்க.
ஊங்கு என்ற சொல் மிஞ்சிவருதல், கூடுதல் குறிக்கும். "அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை" என்ற சொற்றொடர் அறிக. ஊங்கு ( மிகுதல்) - ஓங்குதல் மிகுதலே. ஊங்கு - ஓங்கு.
உடனே என்பதை ஒடனே என்பது பேச்சில்.
ஊ - ஓ திரிபு அறிக.
தட்டச்சு மெய்ப்பு பின்.