துண் என்ற அடிச்சொல் சேர்ந்திருத்தல் என்ற கருத்தை மையமாகக் கொண்ட அடிச்சொல் என்பதை முன் இடுகையிலே கண்டோம். இந்த அடிச்சொல்லுக்கு ஒரே ஒரு பொருள்மட்டும்தான் உண்டு என்று எண்ணிவிடலாகாது. வேறு அர்த்தங்களும் உண்டு. இவ்வாறு இலங்கும் பொருள்களில் இன்னொன்றை இங்கு அறிந்துகொள்வோம்.
ஒன்றாய் அல்லது முழுமையாய் இருப்பதே உடையும், துண்டுபடும். இரண்டாய் இருப்பனவும் இரண்டு ஒன்றுகள் - இரண்டு தனிப்பொருள்கள் எனின், ஒவ்வொன்றும் ஒரு முழுமை எனக் கொள்ளவேண்டும். எது முழுமையாய் இருக்கிறதோ அது உடையவும் துண்டுபடவும் செய்யும். துண்டுபடுதற்குக் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவை சொல்லாக்கத்தில் எப்போதாவது உள்வரும். பெரும்பாலும் வராமலும் போகும்.
காண ஒன்றாய் இருப்பனவெல்லாம் சேர்ந்திருக்கின்றவை என்று பொருள். அணு என்ற சொல்லை ஆதியிலேயே உடையது தமிழ்மொழி ஆகும். டால்டன் முதலிய மேலை அறிஞர் அணு பற்றிய தெரிவியலை ( theory) அறிந்து கூறுமுன்பே அதைக் கண்டுசொல்லிவிட்டனர் நம்மனோர். தனித்தனி முழுமைகளாய் ஒன்றையொன்று அண்மி ( அண்) நிற்பது அணு. இங்கு உ என்பது விகுதி. உகர விகுதிக்கு இன்னோர் எடுத்துக்காட்டு: வல் > வலு. இன்னொன்று: கொள் > கொளு. இவ்விகுதி வினையிலும் பெயரிலும் வரும். அணு இயற்கையில் தனித்தியங்குவது என்பது விளக்கம் இன்றியே புலப்படுவது ஆகும். மேலும் அணுவைக் காண இயலாது. மிக்கச் சிற்றுருவினவற்றுள் மேலும் சிற்றுருவை அடைய இயலாத ஒன்றுதான் அணு. அணுவையும் பிரிக்கலாம் என்பர் அறிவியலார். ஆனால் அக்காலத்தில் அணுவுடன் தமிழன் நின்றான். இதுவே அக்காலத்துக்குப் பேரறிவு ஆகும். ஆகவே சேர்ந்துள்ளது துண்டுபடும், அது இயற்கை; இதிலிருந்து துண் > துண்டு என்ற சொல் அமைந்தது.
துண் > துண்டு (துண் + து).
துண் > துணி > துணித்தல்.
( வெட்டுப்படுதல் ).
ஒன்றாய் இருப்பது வெட்டுண்டால், வெட்டுண்ட ஒவ்வொன்றும் தனித்தனி இயக்கம் உடையவை ஆகின்றன. பிரிந்தவற்றுள் ஒவ்வொன்றும் உள்ளடக்கத்தில் சேர்ந்து இருக்கின்றன. எனவே, பிரிதல் சேர்ந்திருத்தல் எல்லாம் சொல்லாக்கத்தில் ஒன்றுதான். சேர்வில் பிரிவும் பிரிவில் சேர்வும் ஒன்றே. ஆகவே சொல்லாக்கத்திற்கு ஒரே அடியைப் புழங்கியது பொருத்தமே.
பலர் ஒன்றுபட்டு இயங்கும்போது ஒருவன் துண்டுபட்டு நின்றுகொண்டிருப்பான். இவனைப் பெரும்பான்மையினர் நம்பாமையினாலும் அவன்றன் பின்செயல்பாடுகளாலும், அவனைக் கபடு உடையவன் என்று நினைத்தனர். அதனால் அவன் துண்டகன் எனப்பட்டான்.
துண்டு + அகம் + அன் = துண்டகன்;
அகத்துள் துண்டுபட்டு நிற்போன் எனினும் ,
துண்டு + அகல் > துண்டகல் > துண்டகன்
துண்டாய் அகன்று நிற்போன் எனினும்,( ல்-ன்)
துண்டு + அ(ங்)கு + அன் = துண்டகன்
ங் - இடைக்குறை எனினும்,
எவ்வாறு விளக்கினும் செய்துகொள்க.
விளக்கம் ஏற்பச் செயல். ஒரு பூனையைப் பலவாறு தோலுரிக்கலாம் என்பது ஆங்கிலப்பழமொழி. கபடு சூது வஞ்சகம் நெஞ்சகத்துடையான் துண்டகன். அதுவே பொருள்.
இனித் துண்டன் என்று சொல் நிறுவுற்று, அது கொலைஞனைக் குறிக்கிறது.
துண்டு > துண்டித்தல்.
இது இகர வினையாக்க விகுதி பெற்று, துண்டுபடுதலைக் குறிக்கிறது.
மூங்கில் பல இணைப்புகள் உடையதுபோல் உள்ளபடியால் "துண்டில்" என்பது மூங்கிலுக்கும் பெயராயிற்று.
திடுக்கிட்டவன் மூச்சு விடுகையில் மூச்சு விடுதல் பல துண்டுபட்டதுபோல் இழுப்புடையதாவதால் துண் என்ற அடியிலிருந்தே "துண்ணிடுதல் " என்ற சொல்லும் அமைந்தது.
தன் தந்தை கொலையுண்டதறிந்த அவன், தான் ஆடித் தன் தசையாடித் துண்ணிட்டான்
என்று வாக்கியம் செய்யலாம்,.
இனித் துண்டு என்ற சொல் முண்டு என்றும் திரியும். முண்டினைத் தலையிலணிய, முண்டு + ஆசு = முண்டாசு ஆகும். ஆசு என்ற சொல் பற்றிக்கொள்வு குறித்தது. தலைப்பற்றுத் துணி எனலாம். ஆதல் வினை. ஆசு என்பதில் ஆ -வினையடி. சு - விகுதி.
உங்கள் கருத்துகளையும் பின்னூட்டமிட்டு
மகிழ்ந்திருங்கள்.
அறிக. மகிழ்க.
குறிப்பு:
பிரியம் என்ற பற்றுதல் குறிக்கும் சொல் ,"பிரியோம்" என்ற எதிர்மறை வழக்கினின்று தோன்றியது. இவண் கூறிய வகையுட் படுமெனக் காண்க. பிரியா என்ற பெண்பெயர் பிரியாள் என்பதன் கடைக்குறை. ( பிரியமாட்டாள் ஆதலின் "பிரியம்" உடையாள் ).
அச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.