வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

எஸ்.பி. பாலாவுடன் நம் ஐயப்ப சாமிகள் ( பாடுகின்றனர்)



இந்தியத் திரைவான் விந்தையாய்ப் போற்றிய பாடகர்
செந்தமிழ் முதலாய்ச் சீர்சான்ற பன்மொழி இசைவானில் 
எந்தவோர் வயதினர் ஆயினும் தம்வயம் ஈர்த்தவர் 
இந்தநாள் இனிப்பல ஆண்டுகள் வாழ்ந்திடப் பிரார்த்தனை

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

அம்பும் அஸ்திரமும்.

 அம்பு அஸ்திரம் என்ற இருசொற்களையும் ஒப்பாய்வு

செய்தல்  தக்கது  ஆகும்.


அம்பு என்பது ஒரு சுட்டடிச் சொல். அ : இவன் 

( இங்கிருப்போன்) (அம்பு) அவனிடம் போகுமாறு,    (அ - அவன்பால்)

இடைவெளியில் பறந்து செல்லுமாறு அனுப்பப்படுவதே

அம்பு.   இதில் உள்ள பகுதி அல்லது முதனிலை "அ"

என்பதே.  பு என்பது ஒரு விகுதி. விகுதிக்கும் பொருள்

கூறவேண்டின்,  புகுவது, புகுத்தப்படுவது என்று விளக்கம்

செய்யலாம். எவ்வாறெனினும் அது ஒரு சுட்டடிச் சொல்

என்பது தெளிவு


அஸ்திரம் என்ற சொல்லும் அம்பு என்ற பொருளை

உடைய சொல்லே .  அப்பால் செல்லுமாறு இங்கிருந்து

ஏவப்படுவது அஸ்திரம்.  இதில் ஓர் ஐயமும் இல்லை

அ ( அங்கு செல்லுமாறு )  இங்கிருந்து ( இ)  திறமாக

ஏவப்படும் ஓர் ஆயுதம் அம்பு.   அ + இ + திறம் >

அயித்திறம் என்று வரும்.  இதில்,  யிகரத்துக்கு ஸ்

என்னும் மெய்யையும், திறம் என்பதற்கு திரம் என்ற

மாற்றுருவையும் இட்டால், அது அஸ்திரமாகிவிடு-

கின்றது.  திறம் பொதிந்த ஒரு செயலுக்கு வரும்

விகுதி திரம் என்று வருவது மிகுதியாம் என்பதுணர்க.


எடுத்துக்காட்டுகள்:

ஆ என்ற சினக்குறிப்புடன் எழுந்து எதிர்நிற்றலை

ஆ + திறம் >  ஆத்திரம் என்றதுபோலும் அமைப்பே

இதுவாகும். பாத்திரம் என்ற சொல்லையும் ஆய்வு

செய்யலாம்.   பர > பார் > பா  ( சற்று பரவலாக, 

அல்லது பரப்பளவு உள்ளதாகத் திரித்து அமைக்கப்

படும் ஓர் ஏனம்  அல்லது சிறுகொள்கலம் - பாத்திரம்

ஆகும். பரந்த வாயுடன் உட்குழிந்த கொள்கலம் என்க.

திரித்தல் என்பது செய்தல் என்றும் பொருளாம். 

திரி + அம் = திரம்  ஆகவே,  செய்யப்படும் எப்பொருட்கும்

இவ்விகுதி பொருந்தும்,  எச்செயலுக்கும் பொருந்தும்

என்று உணரவேண்டும்.  திரி, திரம் மற்றும் திறம் என்பன

ஒரு மூலத்தவை.


அ + இ + திரம் > அயித்திரம் பின் அஸ்திரம் ஆயிற்று. 

அப்பால் செல்லுமாறு இங்கிருந்து என்று கருத்து

மாறி அமைந்தது ஏன் என்று நினைக்கலாம். இது

தொடங்குநிலை பின் வைத்து அமைந்த சொல். இதற்கு

இன்னோர் எ-டு:  வாயில் என்பது. இல்லின் வாய்  என்பது

முறைமாற்றாய் அமைந்தது போலுமே இதுவாகும்.


எடுத்துக்காட்டு:  அனுப்புதல்.

அனுப்பினான் என்று பொருள்படும் "அயிச்சு" என்ற

மலையாளச் சொல்லும் அங்கிருந்து  முன்னிலையில் 

(இங்கு)  வந்தது  என்னும் கருத்து 

 அமைந்ததே.   ஆனால் இச்சுட்டடிச் சொல்லில்

தொடக்கம் சேர்வு ஆகியவை   நிரலாக

அமைந்துள்ளது.  அனுப்பு என்பது  அங்கிருந்து , (அ),

உ ( முன் என்னும் பொருள்)   முன்வருமாறு செய்வது

குறிக்கும்.   அ> அன்,    உ (முன்),  பு  - விகுதி.  ஆக,

அனுப்பு ஆயிற்று.  இங்கு பு என்பது வினையாக்கம்

குறிக்கும் விகுதியாயிற்று. அவண் உய்ப்பது என்று

சுருங்கக் கூறுக. இதுபின் இங்கிருந்து அங்கு 

செல்வதையும் குறித்தது ஒரு பொருள்விரி ஆகும்.

முன்னிடத்ததான ஒன்று அங்கு செல்வதென்னும்

பொருள்விரி.  இச்சொல் இருபாற் செலவையும்

பொதுவாய்க் குறிக்குமென்றும் வாதிடல் இயலும்.

 ஆதிகாலத்தில் அன் - அண், இன் > இண் என்ப

வெல்லாம் ஒன்றுக்கொன்று ஈடாக

வழங்கிய   தன்மையையே மொழிவளர்நிலை 

காட்டுகின்றது.


 அம்பு  அஸ்திரம் என்ற சொற்கள், கருத்தில் ஓர்

அமைப்பினவாய சொற்கள் என்பது முடிபு.

அங்கு சென்றது என்பது பொருள்.  இங்கிருந்து

என்ற கருத்து அம்பு என்னும் சொல்லில்

தொக்கு.   அஸ்திரம் என்ற சொல்லில்

அக்கருத்து உள்ளுறைந்து  அயலொலியால்

மறைக்கப்பட்டுள்ளது.


அஸ்திரம் என்ற சொல்லில் வரும் ஸ் என்ற

அயல் ஒலியை விலக்க, அங்கு தோன்றும் சொல்

தமிழ் எழுத்தொடு புணர்ந்த சொல்லாகிவிடும்.

இதுவே "வடவெழுத் தொரீஇ  எழுத்தொடு புணர்ந்த"

என்ற தொல்காப்பிய நூற்பாவின் கருத்து.

அவ்வாறே ஆயினமை ஈண்டு காட்டப்பெற்றது.


தட்டச்சுப் பிறழ்வுகள் சரிசெய்யப்படும்.


ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலா

 இவர் இன்னும் மருத்துவமனையில் இருப்பதாகவே

நம்பத்தகுந்த செய்திகள் வாயிலாக அறிகிறோம்.

அவருடைய உடல்நிலை தேறிவருகிறது என்பதே

நாமறிந்த உண்மை.


இதற்கு முரணான செய்திகளும் பரப்பப் படுகின்றன.

இவற்றில் உண்மை இல்லை என்று நாம் நம்புவோம்.


பொய்ச் செய்திகளைப் பரப்பி அவற்றால் என்ன

கிடைக்கிறது என்று தெரியவில்லை.


பாலா மிகவும் நல்லவர் என்பதே நம் கருத்து

ஆகும். எமக்குத் தெரிந்த  ஓர் ஐயப்ப சாமி

நன்றாகப் பாடுவார். பாலா சிங்கப்பூர் வந்த

போது அவரிடம் சென்று பாடிக் காட்டினார்.

பாலாவும் மிகவும் மகிழ்ந்து நம் சாமிக்குப்

பாராட்டுக்களைத் தெரிவித்து ஊக்கப்படுத்தினார். 

"உங்கள் முயற்சிகளைத் தொடரவேண்டும்"

என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார் பாலா

அவர்கள். நம் சாமி அதனை அன்புடன்

நினைவு கூர்ந்து எம்மிடமும் பகிர்ந்துகொண்

டுள்ளார்.

பாலா அவர்கள் உடல்நிலை தேறி அவர்தம்

இசைத்தொண்டினைத் தொடர்தல் வேண்டும்

என்பதே இறைவனை நோக்கிய நம் இறைஞ்சுதல்

ஆகும்.


மேற்குறித்த நம் பூசை அன்பர்  ( ஐயப்ப சாமி )\

இசைஞானி  திரு  இளையராஜாவுடன் எடுத்துக்

கொண்ட படம் இதோ:: ( சொடுக்கவும் )


https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_88.html


பாலா அவர்கள் நலம்பெற்றுத் திரும்ப 

இளையராஜா அவர்களும் வேண்டிக்கொண்டுள்ளார்.