சனி, 18 ஜூலை, 2020

பிழைக்க வழி இல்லை.......

அழுக்கறியா மேலாடை கழுத்துக் கட்டாம்
ஆடையழ கோடுயர்ந்து வழக்கில் முட்டும்

வழக்கறிவு மேன்மக்கள் வாயிற் பாங்கில்
வாங்கிடுவீர் எனக்கூவி மாங்காய் தேங்காய்

கிழங்கினொடு கீரைஎனப் பலவும் விற்றார்
கேட்டுநிலை வந்ததிந்தக் கிருமித் தொற்றால்

முழங்கியவாய் முடங்கிற்றே இன்னும் என்ன
மூதுலகில் மூண்டிடுமோ    பன்னும் அன்னாய்!


செய்தி:-

வாசித்தால் துன்பமே.


கழுத்துக்கட்டு:  "டை" என்ற கழுத்தணி.
வழக்கறிவு மேன்மக்கள் -  வழக்கறிஞர்
முட்டும் - வாதங்களில் முட்டிக்கொள்கின்ற
பாங்கில் -  பக்கத்தில்
வாயில் - கட்டிட வாசல்
கேட்டு நிலை -  துன்ப நிலை
கிருமித் தொற்று - மகுடமுகி (கோவிட்19) 
கொரனா நோய்.
பன்னும் - தெளிவாகப் பேசும்
அன்னாய் -  அன்னையே.

வெள்ளி, 17 ஜூலை, 2020

அழகிரி என்னும் பெயர்.

இன்று அழகிரி என்ற பெயரின் சொல்லமைப்பைக் காண்போம்.

இப்பெயரை இயற்பெயராய்க் கொண்டோர் பலர் உள்ளனர். 
இது  சொல்லாய்வே அன்றி வேறில்லை. இப்பெயரைப் பற்றி
எழுதி அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தவேண்டுமென்பது
நோக்கமன்று.  ஆகவே,  ஆய்வினை ஏற்றுக்கொள்வீர்கள் ; 
அவ்வாறே வேண்டிக்கொள்கிறோம்.

அழகு+ இரு + இ  என்று பிரித்து அழகிரி என்று முடித்து, 
அழகிருப்பவர் எனினும்  ஆகும்; ஆனால் அதனினும் 
சிறந்த முடிபினை எட்ட மேலும் ஆய்வோம்.

அழகு என்ற சொல்லில் அழ என்பதே முதனிலை ஆகும். 
கு என்பது விகுதியே ஆகும். ஆனால் இவ்விகுதி பெயர்ச்
சொல் அமைப்பிலும் வினைச்சொல் அமைப்பிலும் வருவது.  வினைச்சொல்லில் வருதற்கு எடுத்துக்காட்டு:  பழகு (பழகுதல்), 
மூழ்கு (மூழ்குதல் ) எனக் காண்க.

எனவே  அழ என்ற முதனிலையும் மலை என்று பொருள்படும்
"கிரி" என்ற கிளவியும் இணைந்ததே அழகிரி என்ற பெயர். 
இஃது விகுதிகெடுத்துப் புணர்த்திய சொல் ஆகும்.  இப்பெயரை 
வேறு விதமாகச் சொல்வதென்றால் " அழகுமலை" என்னலாம். 
கிரி என்பது மலை.

கிரி என்பது திரிசொல்.  குன்று என்பது (சிறிய) மலை. இது 
இடைக்குறைந்து  குறு என்றாகி,  குறு > கிரி என்று திரிபுற்றது.
குறு என்ற அடியினின்று பல சொற்கள் தோன்றியுள்ளன. குறி, 
குறை என்பவை தொடர்புற்றவை.

அறிக. மகிழ்க.

திங்கள், 13 ஜூலை, 2020

ஒரேநாளில் 4328 நோய்த்தொற்று [ த-நா]



ஆயிரத்து முன்னூற்றின் இருபத் தெட்டாம்
ஆயிரத்தில் நாலுறழும் கிருமித் தொற்றே
மாயறவு கொண்டவர்கள் திரும்ப வேண்டும்
மாநிலத்தில் இன்றொருநாள்  பெருக்கம்  ஈதே!
தூயவர்கள் பலர்புகழில் துவன்ற நாட்டில்
தொடர்கின்ற துன்பங்கள் அகன்றி டாவோ?
தாயொடுமே பிள்ளைகளும் தழைத்து நின்று
தமிழன்னை தயைபெற்றே எழுதல்  வேண்டும்.


ஆயிரத்தில் நாலுறழ -  நாலாயிரம்
மாயறவு -  மரணம் நீங்குதல்
கொண்டவர்கள் -  கொண்டு +  அவர்கள்
துவன்ற -  கூடிய, நிறைந்த
அகன்றிடாவோ = நீங்கிட மாட்டாவோ?