செவ்வாய், 16 ஜூன், 2020

நலமே வாழ்வீர் ஆய்வன்பர்களே

ஆய்வு மனத்தால் அகிலம் அணிசெயும் அன்பர்கள்நாம்
காய்தல் உவத்தல் எதுவுமே இன்றிக் கணித்தறிந்தோம்
தேய்வென யாதும் பிணியாத் திறனுடன் தேன்சொரிந்தோம்
நோய்த்தொற் றிலாது நலமாய் உலவி நனிவாழ்வமே 




பொருள்
ஆய்வு மனம் - ஆராய்ச்சி மனப்பான்மை.
உண்மை காணும் நெஞ்சம். தம்கருத்துக்களைத் திணியாமை.
கணித்தறிதல் - அடிப்படைகளுடன் கூடிய துருவியறிதல்
தேய்வு பிணியா -  குறைகள் பீடிக்காத
தேன்சொரிந்தோம் - இனிமையாகப் பண்ணும் ஆராய்ச்சியும் விளைத்தோம்.
பண் - பாடல். இங்குப் பண்ணான அல்லது நல்ல ஆய்வு.
நனி -  இன்னல்கள் இல்லாத

காய்தல் - வெறுப்பு
உவத்தல் - விருப்பு
(அதாவது எப்போதும் நடுநிலையுடன்)

உடல்நலம் காத்துக்கொள்ளுங்கள்.
இது கடினமான காலம்.

திங்கள், 15 ஜூன், 2020

இக்கட்டு

இக்கட்டு என்ற பேச்சு வழக்குச் சொல்லைப் பார்ப்போம்.

இது ஓர் இடைக்குறைச் சொல்.

இடுக்கண் என்பதில் இடு+ கண் என்று இரு உறுப்புச்சொற்கள் உள்ளன.
கண் =  ஏதேனும் ஒரு நிலையில் அல்லது இடத்தில்;   இடு = இடப்பட்டது, அல்லது எவ்வாறோ வந்து நிற்பது என்று பொருள் கூறலாம்.  அதுபோலவே, இடுக்கட்டு என்ற சொல்லே டுகரம் குன்றி, இக்கட்டு என்று வந்துள்ளது.

கட்டப்பட்டதுபோல் வந்துற்ற ஒரு நிலையே இடுக்கட்டு. இடையில் உள்ள டுகர வீழ்ச்சி. இதுபோல் டுகரம் வீழ்ந்தவை:

கேடு+ து >  கேது  ( ஒரு நிழற்கோள்).

பீடு + மன் > பீமன் > வீமன்.  ( பெயர் ).

இங்கனம் வல்லினம் வீழ்ந்த இடைக்குறைகளை எம் பழைய இடுகைகளிற் காணலாம்.

கண்+ து = கட்டு என்று வல்லெழுத்து வருதல் உண்டு.  என்றாலும் இடுக்கண்+து > இடுக்கட்டு > இக்கட்டு என்று இடைக்குறை வரவே செய்யும்.

அறிக. மகிழ்க.

முகக் கவசம் அணிக. இடைவெளி போற்றுக.

மெய்ப்பு பின்

ஞாயிறு, 14 ஜூன், 2020

பங்கயம் (பங்கஜம்)




இன்று பங்கயம் என்ற சொல்லினை அறிவோம்.

தாமரைப் பூவில் இதழ்கள் அடுக்கிவைத்தது போல், விரிந்து அழகாக இருக்கும். இதழ்கள் அடுத்தடுத்து இருத்தலால் அகரச் சுட்டிலிருந்து பிறந்த அயம் ( அயல் ) என்ற இறுதி வந்துள்ளது. - அடுத்தடுத்து, அம் - அமைந்தது என்பது காட்டும் விகுதி. அமைதல் என்ற வினையின் அடிச்சொல்லே அம் என்பது, இங்கு விகுதியாய் வந்துள்ளது.

அயல் ( அயம்) -  அடுத்தடுத்து அமைந்தது.  அயலென்பது அடுத்திருப்பதே. (அ அல் : அயல்; அ அம் : அயம், யகர உடம்படுமெய்.)

இவ்வாறு அடுத்தடுத்துப் பகுந்து நிற்றலால் பங்கு என்ற சொல் முன் நிற்கிறது. பகு > பங்கு. பங்கு என்பது தொழிற்பெயர். இதன் பொருள் பகுக்கப்பட்டதென்பது.

பங்கு + அயம் > பங்கயம் ( பங்கஜம் ).

பங்கயவல்லி > (பங்கஜவல்லி ) - தாமரையில் வீற்றிருப்பவள்.

இதனைப் பங்-~   + கயம் என்று பிரிப்பர் சில ஆசிரியர். குளத்தில் இருப்பது என்று பொருளுரைத்தல் ஆம்.  பங்கம் - சேறு என்பதுமொன்று. சேற்றில் மலர்வதென்பது.

இது எவ்வாறு காணினும் காரண இடுகுறிப்பெயராகும்.

அறிவீர் - மகிழ்வீர்.

தட்டச்சு மெய்ப்பு - பின்.