வெள்ளி, 29 மே, 2020

ஓச்சர் என்ற சாதிப்பெயர்

இச்சொல்லின் பிறப்பை அறிதல் இயல்பே.

ஓச்சர் என்போர் பூசாரிகள். இச்சொல் உவச்சர் என்றும்
வழங்கும்.


ஓச்சம் என்பது பதிற்றுப்பத்து  (வெவ்வர் ஓச்சம் பெருக...41.20)
 முதலிய நூல்களில் காணப்படுகின்றது. இது ஓங்குதல் என்ற
சொல்லுடன் தொடர்புடைய சொல்லே.

ஓச்சம் - உயர்வு.

செங்கோல் ஓச்சுதல் என்ற வழக்கும் உளது.


உவ என்பது முன்னிருத்தல் என்னும் பொருள் உடையதாதலின்
உவ + சு + அர் = உவச்சர் என்று அமையும்.  சு விகுதி.  அர் என்பது
பலர்பால் விகுதி.

உவ + அச்சர்  என்று பிரித்து,   முன்னிருக்கும் தந்தையர் என்றும்
பொருள்கூறுதல் பொருந்துவதே ஆகும். அப்பன் - அச்சன் - அத்தன்
என்பன சொற்போலிகள்.

புதன், 27 மே, 2020

இன்று ஐந்நூற்று முப்பத்து மூன்று.

சிங்கப்பூர் நிலையை உன்னிப்
பாடிய எண்சீர் விருத்தம்.




இன்றுமட்டும் ஐந்நூற்று முப்பத்து மூன்றாம்
இணையற்ற நல்லோர்க்கு முடியுருவித் தொற்று.

என்றுமுற்றும்  பின்மீண்டிங் கில்லையென வாகும்
இனிதான நன்னிலையாம் தனியின்ப முற்று.

கொன்றுகுவித் துப்புவியின் மக்கள்பெரு வாழ்வைக்
கூழாக்கி மாய்த்திட்ட பாழான கொல்லி

என்றுமிருந்  திட்டதிலை என்பேனே வேண்டாம்
எளியோர்க்கே இதுதந்த எய்த்துழல்வை உள்ளி.




பதப்பொருள்

சொல்லில்தான் பொருளானது பதிந்துள்ளது.
அதனால் அது பதமெனப் பட்டது.

பதி  + அம் = பதம்.
தி  என்பதில் உள்ள இகரம் கெட்டது ( மறைந்தது).
அம் என்பது அமைவு, அமைப்பு என்பன குறிக்கும் விகுதி.
மிகுந்து பொருள்கூட்டுவது விகுதி.  மிகுதி> விகுதி.
மிஞ்சு > விஞ்சு என்பது போலும் திரிபு.

முடியுருவி( னி ) -  முடியின் உருவில் அமைந்த கொரனா
(கோவிட்19) நோய்நுண்மி, (வைரஸ்)

முற்றும் -  தீரும்.

பின்மீண்டிங்கு - இனிமேல் இங்கு

கூழாக்கி - திடத்தன்மை நீக்கிக் குழைவு  ஆக்கி

கொல்லி -  கொன்றிடுதலை நோக்கமாகக் கொண்டது.

என்றுமிருந்  திட்டதிலை - முன் அறியாத ஒன்று.

எய்த்துழல்வு -  துன்பநிலை.


நோயிலிருந்து தப்பும் வழிகளை விடாப்பிடியாகப்
பின்பற்றுங்கள். அரசு ஓரளவுதான் உதவமுடியும்.

இதோ இன்னொரு கவி உங்களுக்கு:

விடுதிகள் தங்குவோர் விட்டிலர் தாம்தமக்குள்
இடைவெளி  அன்னதால் இத்துணை நோய்ச்சீற்றம்
படுதுயர் கேட்டவர் பாகினைப்  போலுருகக்
கடினமே நாட்டிலிக் காலம் செயலறியோம்.


இது அடிதோறும் வெண்டளையாகவும் அல்லாதவிடத்து
வேற்றுத்தளையாலும்  அளவடிகளால்  புனையப்பெற்ற பாடல்.


பதப்பொருள்

விட்டிலர் - விடவில்லை.
அன்னதால் - அதனைப்போல் காரணங்களால்
படுதுயர் - படும்துயர்.
செயலறியோம் - என்ன செய்யலாம் என்று தெரியவில்லை.
கடினமே - கடுமையான நிலையே.

தட்டச்சுப் பிறழ்ச்சிகள் பின் சரிசெய்யப்படும்
இப்போது எதுவும் காணப்படவில்லை.
இன்று இடுகை புதுமுகத்துடன் வருகிறது
என்று அறிகிறோம். மென்பொருட் பின்னடைவுகள்
இருந்தால் பின்னூட்டம் இடுக, அல்லது
மின்னஞ்சல் அனுப்புக.

நன்றி. வணக்கம்.






செவ்வாய், 26 மே, 2020

நீண்ட கருத்தைக் குறுக்கிச் சொல்லாக்கும் தந்திரம்.

பல சொற்கள் பல நீண்ட கருத்துகளை உள்ளடக்கியவை.
இவை போல்வனவற்றைக்  குறுக்கி ஒரு சொன்னீர்மை அவை 
பெறும்போது சில தொல்லைகள் விளைவதுண்டு என்பர். 
வகுப்புகளில் வாத்தியார்கள் மணாக்கருக்கு எளித்தாக்கி 
விளக்கும்போது "நாற்காலி" என்ற சொல்லை முன்வைப்பது
வழக்கம்.  "நாய்க்கும்தான் நாலு கால்கள்;  அது நாற்காலி 
ஆகுமா?"என்று வினா எழும். இதுபோன்ற சொற்களுக்கு  
அமைப்புக் காரணம் உண்டெனினும் காரணங்கள் ஓர் 
எல்லைக்குட்  பட்டவை. நாற்காலி நாயைப்போல் குரைக்காது.

நாய்க்குப் புதுப்பெயர்.

குரைத்தல்தான் மிக்க முன்மை வாய்ந்த கருத்து என்பதால்
அதைத் தவிர்த்து ஒரு புதுப்பெயரைச் சொல்லாக்கம் செய்ய 
இயலாது என்று ஒரு முடிவை எட்டிவிட்டால் நாயைக் 
குரைக்காலி என்றுதான் சுட்டவேண்டும்.ஆனால் பட்டினப்பாலை
பாடிய சங்கப் பெரும்புலவர் அதன் கூரிய நகமே முன்மைத்
தன்மை உடையது என்று சொல்வார் போலும்.

குரைக்காலி:   ஒரு புலவர் இங்கு "க்" மெய்
வரக்கூடாது என்பார்.  வினைத்தொகை வடிவில் "குரைகாலி"
என்றுதான் சுட்டவேண்டும் என்பார்.  சொல் அமைத்தவர் இது
வினைத்தொகை அன்று; முதனிலைத் தொழிற்பெயர் என்பார்.
தொழிற்பெயர் இன்னொரு சொல்லுடன் புணரும் பொழுது க்
வரலாம்.  இப்போதெல்லாம் இலக்கணம் என்பது ஒரு தனிப்
பாடமாக இல்லையென்பதால் பலருக்கு இது தொல்லையாவ
தில்லை..

நாய்க்குப் பின் உள்ள கருத்து

நாய் என்ற சொல்லில் காரணம் தெளிவாய் இருக்கிறது. 
நாயில் புறவுறுத்து* ஆவது கால் அல்ல.  அது நாவுதான். 
அது நாவைத் தொங்கவிட்டுத் திரியும் விலங்கு. நா > நாய். 
 அதனால் பெயர் சரியானது என்று வாதிடலாம். 
பழைய பெயர் ஞமலி. மலையாள
மொழியில் பட்டி. இதுவும் தமிழில் முன் வழங்கிய 
சொல்லாதலால் நிகண்டு அகரவரிசைகள் முதலியவற்றில்
 உள. இன்னும் தமிழில் குக்கல் (போலி : குக்கர்), 
தெலுங்கு: குக்கா. தமிழன் நாய் 
லொள்லொள் என்று குரைக்கிறதென்பான். சீனன் 
அது காவ்காவ் என்று குரைக்கிறது என்று நினைத்து
நாய்க்குக் காவ் என்று சொல்கிறான். அது 
பௌவௌ என்று குரைப்பதாக நீங்கள் நினைக்கலாம்.
நாம் சொல்லவருவது என்னவென்றால், நாய் என்பது 
ஒரு நீண்ட கருத்தை உள்ளடக்கி அமைந்த ஒரு சுருக்கமான
 சொல். நாவு > நாய்.இது மொழிநூலார் கருத்தாகும்.


கருத்தைக் குறுக்கி அமைத்த சொற்கள்

ப்போது இவ்வுலகில் இருந்த பலர் கொரனாவால்
இறந்துவிட்டனர். அத்துடன் கொசுக்கடிக் காய்ச்சலும் 
பன்றிக் காய்ச்சலும் ஆங்காங்கு  கலந்து உலவுகிறது.
கடைக்குப் போன இடத்தில் தொற்று ஏற்பட்டு எமக்கு
ஒருகண்ணில் வலியும் கொஞ்சம் ஏற்பட்டுள்ளது.  
மருத்துவரைப் போய்ப் பார்க்கவேண்டியதாயிற்று.
நோயில் வானுலகு சென்றோரை எண்ணி மனம் வருந்துகிறது.
இங்கிருந்து நீங்கியவர்கள் என்ற பொருளில் ஒரு சொல்லை 
அமைக்கவேண்டும் என்று எண்ணினேம். அதற்குமுன் அதே
காரணத்திற்காக முன் நம் மூதாதையர் அமைத்த ஒரு சொல்
நினைவுக்கு வந்தது.  அப்படியாகவே, அந்தச் சொல்லை இங்கு
வழங்கி மனத்தா  னினிது அமையலாகுமென்ற  ஒரு முடிவை
எட்டி அமைகின்றனம்.

சொல்: இலேகர்.
தமிழ்ச்சொல் தான்.  எப்படி?
இல் =  இடம்.  (கண்ணில், மண்ணில் :   இல் இடம் 
குறிக்கும்). ஏகு = எங்கோ  போதல்,  நீங்குதல்.
அர் =  அவர்கள்.  (படர்க்கைச் சொல்.  அ+ அர் = அவர், வ்
என்பது வகர உடம்படு மெய், அவர் என்பதில் இரண்டு 
அகரச் சுட்டுகள் உள்ளன. அத்தனை தேவை
இல்லை என்றாலும் சொல்லமைப்பில் இன்னொரு
 சொல்லை அமைக்கச் சேர்த்துக்கொண்டு " அவர் " 
என்பதில் தவறில்லை. மொழிவளர்ச்சிக்குச் சில 
விலக்குகள் வேண்டும்.

இலேகர் என்ற சொல் இங்கிருந்து போய் விட்டவர்கள் 
என்ற கருத்தைச் சுருக்கி  ஒரு சொல்லாக அமைகிறது,
என்னே மொழியழகு.

எ ( எங்கு) + கு ( சேர்விடம்)  = ஏகு (வினையாக்கம்) > ஏகுதல்.
எங்காவது போய்ச் சேர்வது அர்த்தம்,   எ என்னும் வினாச்
சுட்டின்'  முன் வடிவம் ஏ தான்.


ஒரு திரைக்கவியாவது ஏகுதல் என்ற சொல்லைப் பயன்
படுத்தியுள்ளார்.  அவர் கம்பதாசன்,  "மோகினியே காதல்
ராகினியே ஏகாதே " என்றும்  " மன(த்)தில் மெய்க் காதல்
......கொண்டேகுவேன்" என்றும் எழுதி இச்சொல்லை
வழக்கில் வளரவிட்டுள்ளார். 


இங்கிருந்து எங்கோ போய்விட்டவர்கள்தாம்  இலேகர்.

வானிற் புகுந்திருக்கலாம்.
தவறு இல்லை. இது நீட்சி குறுக்கி அமைந்த சொல்.

தமிழ் மொழியமைப்பில் உலக மொழியாதலால்,
தமிழில் ஒன்றைச் சீனமொழி போலவும் சொல்லலாம்.
" நாய் வாய் தேய், போய் மாய்!"  என்பது சீனமொழிபோல்
இருக்கிறது. சில சொற்களும் அயல் ஒலி போல் 
ஒலி பெறலாம். இப்படி ஒலியில் இலேகர் என்பது 
போலி அயல் ஒலி உடைய சொல். ஒரு சொல்லில்
சில பொருள்கள் எடுபடுவது சில+ எடு + ஐ = சிலேடை
ஆகும்.  எடு+ ஐ = ஏடை என்பது முதனிலை நீண்ட
தொழிற்பெயர்.  சில என்பது சில் ஆகும், சில்+ நாள் 
= சின்னாள். சில்+ஏடை = சிலேடை. 

சின்னேரத்தில் வந்து சொல்லாடுவோம்.


எழுத்து தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்

* இது திருத்தம் பெற்றது. 07012021