செவ்வாய், 19 மே, 2020

வாய் என்ற சொற்பெருமை வாயால் அளவிடமுடியாதது.

வாய் என்ற தமிழ்ச்சொல் பல மொழிகளில் பரவியுள்ளது. ஆனால் ஒவ்வொரு மொழிக்குள்ளும் அது புகும்போது, சற்று மாறுதலுறும்.  மாறுதல் இல்லாமல் புகுதல் அரிது.  எடுத்துக்காட்டாக இங்கு என்ற சொல்லைச் சீன மொழிக்கு அனுப்பி வைத்தீர்கள் என்றால் அது இங்கு என்ற வடிவத்திலிருந்து சீனமக்கள் ஒலித்தற்கியலும் வழியில் எளிமையாக்கப் படவேண்டும்.  அம்மொழிக்கு ஏற்ப அது  " இங்" ஆகிவிடும்.  சீனமொழியில் முன்னரே இங் என்றொரு சொல் இருப்பதால்,  மேலும் திரிபுறக்கூடும். அல்லது தள்ளுபடியாக்கப் படுதலும் கூடும். திரிபின்றி ஏற்கப்படுதலும் கூடும்.

Subcuntaneous என்ற ஆங்கிலச் சொல் இன்னொரு ஐரோப்பிய மொழியில் sous cutanee  என்று மாறிவிடுகிறது.மொழிக்கு மொழி மாற்றம் என்பது தவிர்க்க இயலாதது ஆகும்.

இவைபோலவே வாய் (பொருள்: வாய் என்னும் உறுப்பு,  மற்றும் வழி)   என்பது வய via என்று இலத்தீனில் மாறுகிறது./ வாய் -  வழியென்பது வாய்ப்பு என்ற பொருளிலும் வழங்கும்  "ஓல்லும்வா யெல்லாம் செயல்"(பொருள்: இடம்) ( (குறள்) என்பது காண்க.

உருவமில்லாத வாய்:

உலகத்தில் யாம் சொல்லப்போகும் வாய் இரண்டு.  ஒன்று முடிந்த வாய். இன்னொன்று முடியாத வாய்.  அதாவது ஒல்லும் வாய், ஒல்லாத வாய். ஒல்லுதல் என்பது வள்ளுவனார் பயன்படுத்திய சொல்.

ஏதேனும் ஒரு திட்டத்தில் முடிந்த வழி முடியாத வழி இருக்கலாம்.  இந்த வாய் உருவமில்லாத வாய் அல்லது இடம். இதனைத்தான் வாய்ப்பு என்று சொல்கிறோம்.

வாய் என்ற உறுப்பினின்று வருவது:

வாய் > வாய் இ >  வாயி+த்தல் >  வாசித்தல்.   பொருள்: வாயிலிருந்து
வெளிப்படுத்துதல்.

வாய்நீர் -  உமிழ்நீர். பேச்சில் இது வானி, வாணி என்று இடைக்குறைந்து
வழங்கும்.

வாய்மலர்தல் -  (பெரியோர்) சொல்லுதல்.

வாய்வது - உண்மை.

வாய்மை - உண்மை.

வாய்வாளாமை - மவுனம். பேசாமை.

வாயுறை -  உறுதிமொழி  மற்றும்....

வாசி+ அகம் (விகுதி) >  வாசகம். (  திருவாசகம்).

வாத்தியார்: வாய்ப்பாடம் சொல்பவர்.  ( உபாத்தியாயி வேறு)  உப அத்தியாயி.
வாய் > வாய்த்தியார் > வாத்தியார். யகர ஒற்று இடைக்குறை.

வாய்+ உ = வாயு..  வாயிலிருந்து ,முன்வருங்காற்று.   பொதுவாகக் காற்று.
ஓர் இடத்திலிருந்து வெளிப்படும் காற்று என்பதுமாம்.   உ - முன். சுட்டுச்சொல்

வாய் - நீட்சிக்கருத்து.

கால்வாய்.

வாய்க்கால்

வீட்டின் பகுதி

வாய் > வாயில் > வாசல்.

இடமிருப்பது

வாய் > வயம்.  ஒருவனிடம் இருப்பது.

இடத்தில் கிடத்துவது:

வாய் > வய் > வை.

இவற்றைக் காண்க:  பை > பய் > பயல்.  பை > பையன்.

பை > boy  எப்படி? ஆய்வு  செய்க.

இவற்றில் சில,  ---  அறிஞர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அறிந்து மகிழ்க.



இன்னும் பல. பின் காண்போம்.

தட்டச்சுப் பிழைகள் பின் திருத்தம்.

இதில் ஓரிடத்தில் "  இதனைத்தான்" என்பது
" இதனைததான" என்று மாறிவிட்டிருந்தது. கண்டுபிடித்து
த என்பதற்கு த் என்று ஒரு புள்ளிவைக்க உடனே
"ன " என்பது  "ன்" என்று தானே மாறிவிட்டது..
இவற்றின் தொடர்பு புரியவில்லை.  மென்பொருள்
வல்லுநராயின் அன்புகூர்ந்து ஏன் என்பதைத்  தெரி-
விக்கவும். 5.51 21.5.2020 சில திருத்தங்கள் செய்யப்பட்டன.






திங்கள், 18 மே, 2020

பண் - பலபொருளுள் நிந்தை

பண் என்ற சொல் தமிழறிந்தோரிடையில் அறியப்பட்ட இனிய சொல்லே ஆகும். இதற்குப் பல பொருள். என்றாலும் பெரும்பாலும் பண் என்றால் பாட்டு என்ற பொருளில் அது மக்களிடை  வழக்குப் பெற்றுள்ளது. இஃதன்றி பண்பாடு, பண்பட்ட, பண்படுத்துதல் என்பன போலும் சொல்லாட்சிகளிலும் அது உணரப்படுகிறது.


பண் என்பதற்குப் பல பொருள் இருத்தலால்,  பயன்படுத்துதற்குக் கடினமான சொல்லானாலும்,  அதன் பல்வேறு பொருள்களில் ஒன்றிரண்டு மட்டுமே நினைவில் அல்லது பொருண்மையறிவில் வைத்துக்கொண்டுள்ளபடியினால் , நடைமுறையில் இச்சொல்லால் நமக்குத் தொல்லையொன்றுமில்லை என்பதே உண்மை. மறதியும் சிலவேளைகளில் நம் கடினத்தை நீக்கிவிடுதல் கூடும்.

பண் என்பது நிந்தனை என்ற பொருளுடையதாகவும் உள்ளது. இப்பொருளின் இதைப் பயன்படுத்திய  இந்நாளைய  ஆசிரியர் யாரும் நம் நினைவில் இல்லை.

இப்பொருள் எவ்வாறு ஏற்பட்டது எனக் காண்போம்:

பள் >  பள்ளம், தாழ்வு.
பள் > படுகை, தாழ்வு.
பள் > பண்> பணிதல் ( தாழ்நிலை மேற்கொள்ளுதல் அல்லது அடைதல்)


நிந்தனை செய்யப்படும் ஒருவன்,, பிறர் காட்சியில் தாழ்நிலையில் எண்ணப்படுகிறான். பணிதலுறும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
பள் > பண் ஆவதனால், பண் எனற்பாலது நிந்தனை என்றும் பொருல் படும்.

பள் ( அடிச்சொல் ) > பண் > பணிதல், பணிவு.

ள் என்ற ளகர ஒற்று உடைய சொற்கள் ணகர ஒற்றாக மாறுவது சொல்லியல் விதிப்படியாகும்.

சந்தி என்னும் சொல்புணார்ச்சியிலும் மற்றும் ஏனை இடைச்சொற்களின் சேர்க்கையாலும்  ள் என்பது ண் ஆகிவிடும்.  எ-டு:

மாள் > மாண்டார்.


ஆள் எனற்பால பெண்பால் விகுதியும் ஆண் என்ற வடிவத்தையடைந்து  பின் ஆண்பால் விகுதியுமாகும்.

 ஆள் > ஆண்
ஆண் >  ஆன்.  ( எ-டு: வந்தான் ).

புணர்ச்சியில்:  ஆள் - ஆண்ட, ஆண்டு. ( எச்ச வினைகள்)
இங்கு வினைப்பகுதுயுடன் சேர்ந்தவை இடைச்சொற்கள்.

ஆள் என்ற சொல்லே  ஆட்சியுடைமை அல்லது ஆளுகையைக் காட்டும். அதனின்று திரிபுற்ற ஆண் என்ற சொல்லில் இப்பொருள் சிறக்கவில்லை.


ஆண்மை என்ற சொல்:

இது இருவகையிலும் பெறப்படும்.  எ-டு:

ஆள் + மை =  ஆண்மை.
ஆண் + மை = ஆண்மை.

சொல்லாண்மை, நகராண்மை என்று வரும் சொற்களை  ஆள்+மை = ஆண்மை என்றும்   ,  ஆண்தன்மை என்று குறிக்கும்போது  ஆண்+மை என்றும்  பிரித்தலே சரி.

சொல்லமைப்பில்:  ஆள் - ஆண்டவன்.

பிளவுக் கருத்து:  பாள் > பாண்டம்.

                                    பாள் > பாளம் என்பதும் பிளவுக் கருத்தே.

இதுகாறுங் கூறிய சிலவற்றால்,  பண் என்பது ஏன் நிந்தை என்ற பொருளிலும் நிகண்டு மற்றும் அகரவரிசைகளிலும் காணப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.


தட்டச்சுப் பிழைகள் பின் கவனிப்பு.

5.30 மாலை 19.5.2020 -  சில தட்டச்சுப் பிறழ்வுகள் சரிசெய்யப்பட்டன.

வெள்ளி, 15 மே, 2020

நுண்ணுயிர் கொரனாவிடம் மனிதன் தோற்பானோ?

முன்னூ  றாயிரத் தின்மேல் அழிந்தனர்
இந்நாள் இதுவே உலகப் பெரும்போர்
எந்நாள் இருள்முகில் நீங்குமோ அறியோம்
நன்னாள் புவிமேல் நண்ணுதல் அரிதே.

அறிந்ததும் இலையே முன்னிது வகிலம்
தெரிந்து விலகிடப் பட்டறி விலதே
பரிந்து பேசிடும் தாயொடு தந்தையர்
இழந்து தவிப்பவர் எல்லை மிகுந்தனர்

தமிழறிந்  திலங்கிய தகைசால் பெரியோர்
இமிழ்கடற் கப்பால் இருந்தனர் பலபேர்
குமிழ்பல முளைத்த மகுட  முகிப்புழு
உமிழ்நஞ்   சூடுரு வியதோ அறியோம்.

வழக்கம் போல வந்திலர்  அன்னவர்
இளக்கம் அடைந்தது என்மனம் இவணே
துலக்கம் பெற்றிவ் வுலகினைப் பேண
கலக்கம் விலக்கும் கரைகண் காணுமோ?

கண்ணுறக் காணா நுண்ணுயிர் தன்னொடு
மண்ணர  சன்மனி தன் தொடுத் திடுபோர்
விண்ணவர் நகைக்க வியன்புவி திகைக்க
மன்னவன் மனிதன் தன்னிலை தாழ்வனோ?


பதப்பொருள்:

முந்நூறாயிரம் -  3 இலட்சம்
இருள்முகில் - கார்முகில், கருமேகம்.
(முன்னர் காரிருள் என்பதில் மாற்றம்)
நண்ணுதல் - வருதல். நெருங்குதல்
அறிந்ததும் இலையே முன்னிது வகிலம் -அகிலம்
முன் இது அறிந்தது இல்லை.
பட்டறிவு - அனுபவம்
எல்லை மிகுந்தனர் - தாங்கும் எல்லையைக்
கடந்துவிட்டனர்
இலங்கிய - விளங்கிய
தகைசால் - நற்பண்பு நிறைந்த.
இமிழ்கடல் - அலையோசைக் கடல்
மகிடமுகி - கொரனாவைரஸ் (நோய்நுண்மி)
இளக்கம் - வலிமை இழந்த நிலை, நெகிழ்வு
புழு - இங்கு நோய்நுண்மி.
துலக்கம் - தெளிவு. ஒளி
மண்ணரசன் -  பூமியை ஆளும் மனித வருக்கம்.
(ஓருமை பன்மைக்கு நின்று பொருள் உணர்த்தல்)
விண்ணவர் - உயர்ந்தோர்.  விண் - உயர்வு.
வியன் - விரிந்த
மன்னவன் மனிதன் -  நிலைபேறு உடையவனான
இம் மனிதன்.
தன் நிலைபேற்றினை இழந்து வீழ்வானோ?
(போர் தொடுப்பவன் மனிதன், அவனே வீழ்வானோ?
நோய்நுண்மி வீழாதோ? என்பது ).

மண்ணரசன் தொடுத்த போரில் தன் ஆட்சி இழந்து
வீழ்வானோ என்று முடிக்க.

மன் என்பது நிலைபேறு குறிக்கும்.  அரசன் என்ற
சொல்லின் இக்கருத்து இல்லை. அதனால் மன்னன்
என்ற சொல் பெய்து முடிக்கப்பட்டது.