வியாழன், 7 மே, 2020

அன்னமும் அன்னாசியும்

தமிழ்நாட்டிலுள்ள நம் மக்கள் என்னென்ன குழம்புகள்
வைக்கிறார்கள் என்பதை நாம் நேரில் அறிய
முடியவில்லை. சுற்றுப்  பயணங்களின் போது
கடைகளில் நிலவரம் எப்படி என்று ஒருவாறு தெரிந்து
கொண்டாலும் வீட்டில் வைக்கும் குழம்புகட்கு அவை
ஈடாம் என்று கூறிவிட முடியாது.

அன்னாசி மோர்குழம்பு:

திருமுருக கிருபானந்த வாரியார் சாமிகள் மலேசியாவுக்கு -
சிங்கப்பூருக்கு வருகையளித்தபோது அவருக்கு மாரான்
என்னும் நகரில் ஒருகால் அன்னாசிமோர்குழம்பு வைத்து
உணவளித்தனராம். அன்னாசி என்பது ஊட்டச்சத்து
நிறைந்த பழமென்பது யாவரும் அறிந்ததே.  அது இட்டு
வைத்த குழம்பும் சுவையாகவே இருந்திருக்கும்.

அன்னாசியின் சொல்லமைப்பு பற்றி இங்கு
அறிந்துகொள்ளுங்கள்:
https://sivamaalaa.blogspot.com/2012/10/abbaasu.html


அன்னம் என்னும் சொல்லும் அன்னாசி என்ற சொல்லும்
 " அரு" என்ற அடிச்சொல்லுடன் தொடர்புடையவை.

அரு >  அன் > அன்னம்.  ( அருந்துவதற்கானது என்று
பொருள்.)அரு > அருந்து ( வினைச்சொல்லாக்கம்).
பொருள்:  தின்னு/ உண்ணு என்பது.



இயற்கையில் காணப்படும் பொருள்களை மனிதன் கடித்தோ, வெட்டியோ, இடித்தோ, பிட்டு எடுத்தோ,   ---- ஏதேனும் செய்து மென்று சிறிதாக்கித் தான்
சாப்பிடவேண்டும். மலைப்பாம்புக்கு உள்ள இயற்கைத் திறம் எதுவும் மனிதனுக்கு இல்லை. பாவம் மனிதன்.

அருந்துவதைச் சிறிதாக்கித் தான் மனிதன் உண்கிறான்.

ஒரு நீதியரசர், வழக்குக்கு எது தேவைப்படுகிறதோ அதைமட்டுமே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.  பக்கக் கருத்துகளை ஈடுபாட்டுக்குள் புகுத்தலாகாது என்பதுண்டு.  அதுபோலவே எந்த வாதமும்.

அருந்துதலும் சிறுமையும் தொடர்புதரு கருத்துகள் ஆகும்.

அரு என்பதான அடிச்சொல்லிலிருந்தே அரிசி என்ற சொல்லும் வந்தது.


அரு > அரு+ இ =  அரி > அரிசி.  (  சிறுவிதை என்பது சொல்லமைப்புப் பொருள் ).
 அரு > அருந்து என்ற சொல்லின்வழிச் சென்று,  அரு> அரி என்று பொருளும் கொள்ளவே வேண்டும்.  இரண்டும் பின்னிப் பிணைந்து நிற்கின்றன.

அரு > அரி > அரிதல்.    ( சிறுசிறு துண்டுகளாய் வெட்டுதல்.).

அரி > அரித்தல்.1  கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து எடுத்தல்  2. தோலில் புள்ளியிடங்கள் போலும் குறுகியும் பரவின் விரிந்தும் ஏற்படும் சொறியச் செய்யும் தோலுணர்வு.

அரு என்பது அன் என்று திரியும் என்றோம்.

அரு > அன் > அன்னம்.   (  அம் விகுதி).

அருநாசி > அன்னாசி.

பென்னம் பெரிய என்ற வழக்கும் நோக்குக.  பெரு > பென்.
சின்ன ஞ் சிறிய என்பதும் கவனிக்க.   சிறு > சின்.

இதையும் அறிக.

குறு என்றால் சிறியது.   குறு > குற்றம் ( இதன் சொற்பொருள் சிறு செயல் என்பதுதான்.  அது அடிப்படைக் கருத்து. இன்றைய அளவில் குற்றம் என்றால்
சட்டத்தை மீறிய எதுவும் குற்றம். இது ஒரு பொருள்விரி ஆகும்.

அரி என்பது சிறுமைப் பொருள் உடையது என்றோம் அல்லோமோ?  அவ் வடிச் சொல்லும் அம் விகுதி பெற்று "  அரியம் " என்றாகிக் குற்றம் என்று பொருள்படும்.

இன்னும் சான்றுகள் பல.  நேரம் கிட்டினால் பேசி மகிழ்வோம்.

அன் > அண் என்பதிலும் தொப்புள்கொடி உறவு இல்லாமலா போய்விட்டது?


சரிபார்க்கும் மென்பொருள் பழுது.
பின் சரிபார்க்கப்படும்.















ஞாயிறு, 3 மே, 2020

மகுடமுகி என்ற சொல்லைப் பயன்படுத்தி....

சென்ற இடுகையில்


கொரொனா துயரில் தீவிரவாதிகள் தாக்குதல் பற்றி (சொடுக்குக)
https://sivamaalaa.blogspot.com/2020/05/blog-post_6.html

 கொரனா என்ற அயற்சொல்லைப் பயன்படுத்தி வெண்பா புனைந்திருந்தோம். கொரனா என்பதற்குப் பதிலாக " மகுடமுகி" என்னும் மொழிபெயர்ப்புச் சொல்லை உள்ளுய்த்து அதே வெண்பாவைப் புனைந்து பார்க்கிறோம்.

மகுடமுகித் தொற்று மடைதிறந்த தெங்கும்
பகலிர வென்று பகவில் -----  தகவிலரால்
இத்தகு சண்டைகள் ஏற்படல் வெட்கமே
எத்துணைக் காலமிது போம்?

 பகலிர வென்று பகவில் என்று வரும் வரியில் பகவில் என்பது
கடின நடையாகத் தோன்றலாம். அது கடினமென்பதற்காக நீக்குதல்
உடன்பாடில்லாதது ஆகும்.  எனினும் இவ்வாறு எளிதாக்கலாம்:

"பகலிர வென்றுபா  ராத ----- தகவிலரால்"

இவ்வாறும் வெண்பா சிதைவுறாது வரும். 

அரும்பொருள்:

மகுடமுகி -  கொரனா தொற்றுநுண்மி  (வைரஸ்)
பகவில் ( பகவு இல் ) - பகுத்து உணராத.
தகவிலரால் -  (முன்னையப் பாடலில் நரகரால் என்ற
சொல் பயன்பாடு கண்டது.  தகவிலர் - நற்குணமில்லாரால்).

 

கொரனாத் துயரிலும் தீவிரவாதிகள் சண்டை!

ஊர்மக்களைப் பிணைக்கைதிகள் ஆக்கியது:

ஓய்வதும் இல்லையே தீவிர வாதிகளே
நாய்களே போலும் நடமாடித்----தாய்பிள்ளை
அப்பன் அணுக்கனினி  எப்பா லவரையும்
ஒப்பப் பிடித்திருத்து வார்.


அரும்பதவுரை:
ஓய்வதும் - நிறுத்துவதும்;  அணுக்கன் - உறவினன்;
எப்பாலவர் = ஆடவர் பெண்டிர் இருபாலாரையும்;
ஒப்ப - வேறுபாடின்றி;   பிடித்து இருத்துவார் - வன்மை
காட்டிப் பிணைக்கைதிகள் ஆக்கிக்கொள்வர்.


படையினர் காவலதிகாரி தியாகம்:

படைஞரும் காவலரும் பாவமுயிர் தந்து
நடைபெற்ற போரில்தம் நாட்டாரைக் காத்தே
உடைக்கும் உயரணிக்கும் ஓரேற்றம் உய்த்தார்
கிடைப்பில் தியாகம் இது.


அ-ரை
படைஞரும்  - இராணுவத்தினரும்;  காவலரும் - காவல்
துறையினரும்;  பாவம் - இரங்கத்தக்கவர்கள்;  உயிர்தந்து -
தியாகங்கள் செய்து;  உடைக்கும் - தாம் அணிந்த 
சீருடைக்கும்;  உயர் அணிக்கும் - தம் போற்றலுக்குரிய 
படையணிக்கும்;  ஓர் ஏற்றம் உய்த்தார் -  சிறப்பைத் தேடித் 
தந்தனர்;   கிடைப்பு இல் -  அரிய;  தியாகம் - ஈகம்.



தொற்றுநோய்க் காலத்திலும் சண்டையா ?

கொரனாநோய்த்  தொற்றிது குன்றாப்  பரவல்
இரவென்றும் நாளென்றும் பாரா  -----  நரகரால்
இத்தகு சண்டைகள் ஏற்படலும் வெட்கமே
எத்துணைக் காலமிது  போம்.


அ-ரை:
குன்றாப் பரவல் -  குறையாமல் பரவும் நிலை(யில்);
நாள் - பகல்;   பாரா - பாராத;   நரகரால் - தீயோரால்;
வெட்கமே -  நாணத்துக்குரியது;  போம் - நடைபெறும்?


கொரனாவுக்குத் தமிழ்ப்பெயர் " மகுடமுகி".


மடையர்கள் தொகைக்கென்ன பஞ்சம் ----- அட
மாறாத இந்நிலைமை காணாத கண்ணும்,
படைதரும் வீர்ர்தமைத் தாக்கும்----- ஒரு
பாழான தீவிர வாதத்தைக் காணின்,
விடைகண்டு வெதும்புமே நெஞ்சம் -----  தம்பி
வேறென்ன ஊறாவ தூருக்குள் என்றும்.




படையினர் ஐவர் மரணம்:  செய்தி (சொடுக்குக.)

https://www.livemint.com/news/india/army-colonel-major-among-5-others-killed-in-j-k-s-handwara-terrorist-attack-11588477923676.html