செவ்வாய், 21 ஏப்ரல், 2020

பத்திரம் - பற்றி நிற்க வேண்டிய ஓலை.

பத்திரம் என்பது பலபொருளொரு சொல் ஆகும்.

உலகின் பொருள்கள் பல உருவின.  சில சப்பட்டை அல்லது பட்டையாக இருக்கும்.   பட்டை, பட்டயம் என்பவை பட்டை வடிவினவாய் இருத்தலால் வந்த பெயர்.

இலையும் பட்டைவடிவில்தான் உள்ளது.  பத்திரம் என்பது இலை.  பட்டைவடிவம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இலை என்பது கொடியை அல்லது மரக்கிளையைப் பற்றிக்கொண்டு இருக்கிறது.  அதற்கு இந்தப் பற்றைத் தருவது காம்பு என்பது அறிந்ததே.

கொடியானது இலையைத் தருகிறது.  அதனால்  இலை+ தா > இலைதா > இலதா என்றொரு சொல் அமையலாயிற்று.  இது தன் தலையெழுதிழந்து லதா ஆகிவிட்டது.  இலதா :  இலைதருவது கொடி என்பது இதன் அமைப்பு.ப்பொருள்.

இனி மரக்கிளையைப் பற்றி நிற்பதை விளக்குவோம்.

பற்று + இரு + அம் =  பத்து + இரு+ அம் =  பத்திரமாகிறது.

மரக்கிளையைப் பற்றிக்கொண்டு இருப்பதனால் பத்திரம்.

0"ற்று" என்பது த்து என்று திரிந்தது பல சொற்களில். பழைய இடுகைகள் காண்க.

அத்தியாயம் என்ற சொல்லும் இவ்வாறு   அற்று என்ற சொல் அத்து என்று மாறி அமைந்தது தான்.

சிற்றன்னை > சித்தன்னை> சித்தி என்ற திரிபும் காண்க.

அத்தியாயம் என்பது முடிந்து இன்னொரு அத்தியாயம் தொடங்கும்.  அது அற்று இயைகிறது.   அற்று + இயை + அம் = அத்தியையம் > அத்தியாயம். இதில் ஐகாரம் குறுக்குற்றது.  ஐகாரக் குறுக்கம் கவிதையில் வருவது. சொல்லாக்கத்திலும் வந்து உதவியுள்ளது. இயை > இயா. ஐகாரம் குறுகிப் பின் நீண்டுள்ளது. சுருங்கக் கூறின் இயையம் > இயாயம் ஆனது.  தமிழ்சொற்களைக் கொண்டே இதை யாத்துள்ளனர்.

ஒப்பந்தப் பத்திரத்தில் கைச்சாத்து இடுகிறவர்களும் அதைப் பற்றி நிற்கவேண்டியவர்களே. அவ்வகையிலும் இது பொருத்தமாகவே உள்ளது:  பத்திரம்

அறிக மகிழ்க.

தட்டச்சுப் பிறழ்வு பின் திருத்தம்.

திங்கள், 20 ஏப்ரல், 2020

வற்சிறம் என்ற அழிந்த சொல்.


வஜ்ஜிரம் என்ற சொல் தோற்றம் அறிவோம்.   வஜ்ஜிர தந்தி, வஜ்ஜிர வேலென்று வரும்.

பழைய இடுகையிற்போல விரிக்காமல் சுருக்கமாகக் கூறுவோம்.  "பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற சிலசொல்லத் தேற்றா தவர்" என்பார் வள்ளுவனார்.

வல் =  வலிமை.
சிற =   சிறந்த, மிகுந்த.
அம் = அமைந்தது என்பது.  அல்லது விகுதி எனினும் அமையும்.

வல்சிற அம் =  வற்சிறம்.

சிற > சிறப்பு.
சிற > சிறவு

இவை இப்போது வழங்குவன ஆகும்.  சிற என்ற அடிச்சொல்லி லிருந்து வருவன ஆகும்.

சிறம் என்ற சொல் மொழியில் அழிவுண்டது. அல்லது வழக்கிறந்தது.
பல தமிழ் நூல்கள் வைத்திருக்க இயலாமையாலும்,  பூச்சியரிப்பு முதலியவை யாலும்,  காக்கப்படாமல் ஒழிந்தன. தமிழ்நூல்களை நீரில் அமிழ்த்துவதும் நெருப்பில் இடுவதும் வாடிக்கையான நிகழ்வுகள்,  வைத்திருக்க இடமில்லை ஆயிற்று.

சிற + அம் = சிறம் என்பதில் ஏற்புக்கியலாத தொன்றில்லை.

வற்சிறம் என்ற சொல் பின் வஜ்ஜிரமென்று அயலிற் றிரிந்தது.
திரிபு உலவுகளிலிருந்து மூலம் அறிவது எளிதே ஆகும்.

வற்சிறம் > வச்சிரம்.  இது சில நூல்களில் உள்ளது. றகரத்தை ரகரம் மேற்கொண்டது காண்க. பொருள் : வலிமைச்சிறப்பு.


----------------------------------------------------------------------------------
 குறிப்பு:
 இடுகை ஒன்றிருந்தது, வேண்டின் இயற்றிக்கொள் என்று கூறுகிறது இந்த வலைப்பூவின் பதிவுமெல்லி.

(வஜ்ஜிரம் என்ற சொல் தோற்றத்தைக் கூறும்  இடுகையொன்று இருந்தது. அது இப்போது இல்லை.  அந்தப் பழைய இடுகை இங்கிருந்துதான் எழுதப்பெற்றது. கள்ள மென்பொருளால் அழிவுண்டது.)

மூலம் பழைய வளைவட்டில் (floppy disc)  உள்ளது.  பார்த்து எழுதத் தேவையில்லை. கடைக்குக் கொண்டுபோய் மீட்கக் காசு செலவாகும்.   ஆதலால் சுருங்கக் கூறியுள்ளேம்.

வியாழன், 16 ஏப்ரல், 2020

நூதனம்

நூதனம் என்ற சொல்லைப் பார்ப்போம்.

உகரச் சொற்களிற் சில நுகரத் தொடக்கமாகத் திரியும்.   இதற்கு எளிதான உதாரணம் உங்கள்  > நுங்கள் என்பதாகும். இதனைப் போலி என்னும் திரிபு வகை என்னலாம்.

உகரச் சுட்டடிச் சொல்: உங்கள் என்பது,  முன்னிலைக் கருத்தை உடையது. இதில் திரிந்த நுங்கள் என்பதும் அக்கருத்தைத் தழுவியதே ஆகும்.  இதன் முன் வடிவுகளாகிய உம் >  நும் என்பவும் அன்னவே.

ஒரு காலத்தில் நூல் என்பது புதுமைப் பொருள். பஞ்சிலிருந்து நூற்க அறிந்தகாலை அது பெரும்புதுமை.  நூதனம்.   நூல் > நூ( ல் )  > நூ +து + அன் + அம். இனி வேறொரு வழியில்:

ஊ, ஊன் என்பன முன்னிருத்தல் காட்டும் சொற்கள்.  சுட்டு.

ஊ >  உ ( உகரச்சுட்டு)  முதனிலை  குறுக்கம். பொருள் மாற்றமில்லை.

ஊ > ( ஊ + து + அன் + அம் ) > (  நூ + து + அன் + அம் )

பொருள்களை முன் வந்தவை, பின் வந்தவை,  பின் வந்து புதுமையானவை என்று பகுத்துக்கொண்டால் நூதனமானவை அல்லது புதுமையானவை முன்னிருந்து வியப்பினையும் விளைத்துக்கொண்டிருக்கும்.

இதிலிருந்து வியப்புக்குரிய புதுவரவே நூதனம் என்பதை அறிய ஆறறிவு போதும்.

கொம்பில் நுனியே முன்னிற்பது  அதுவே இறுதியில் வந்தது.மாற்றுச்சொலவு வேண்டின்  அடியிலிருந்து புதிதாக வெளிவந்ததே நுனி

அதிலிருந்து:

நுன் > நுனி.
நுன் >   நூ + து + அன் + அம்.
முகிழ்த்துப் புதுமையாய் முன்னிருப்பது.

நுன் > நு (கடைக்குறை)
நு > நூ  ( முதனிலைத் திரிபு, நீட்சி )

நுவலுதல் என்ற வினைச்சொல் புதுமையாய் அல்லது புதிதாய் ஒன்றை முன் வைப்பது,  வாய்வழியாக. இதுவும் தொடர்புடைய உருவாக்கமே.

ஊது என்பது உள்ளிருந்து ( தொண்டையிலிருந்து ) வாய்வழி வெளிக்கொண்ர்தல். இக்கருத்து பின் விரியும்.   ஊது > நூ(து) எனக்காண்க.

மனிதன் எள்ளை அறிந்து அதைப் பயிராக்கியது முதுபழங்காலத்தில்.  அப்போது அது ஒரு புதுமையாய் இருந்தது.  ஆபரணம் செய்ய அறிந்து அதை அணிந்தகாலம் அவன் புதுமையே கண்டான்.  யானையைக் கண்டபோதும் புதுமைதான். இந்தப் புதுமைப் பொருள்கட்கு ப் பொதுச்சொல்லாய் " நூ " என்று சொன்னான். இசைபாட அறிந்தபோதும் அதற்கு ஒருவினைச் சொல்லைப் படைத்து நூக்குதல் என்றான் என்பதும் அறிக. புதிதாக சமைக்க அறிந்தபோது ( தீயைக் கண்டுபிடித்துச் சில காலம் சென்றிருக்கவேண்டும் )  அவிப்பதை நூத்தல் என்று சொன்னான்.  நூர்த்தல் என்பதும் ஒன்றைப் புதிதாகச் செய்தல்.

முதலில் நூலெழுதியவனும் நூற்க அறிந்தவனும் இவனே.   இவை எல்லாம் மனித இனத்தால் கொண்டாடப்பட்ட கண்டுபிடிப்புகள்.  அவனிடம் பல கண்டுபிடிப்புகள். அவை எல்லாம் இன்று பழங்கதைகள் ஆய்விட்டன.

யாதென அயிர்க்காமல் வாதிடல் விட்டு நூதனம்  அறிக.


அச்சுப்பிறழ்வுகள் திருத்தம் பின்னில்.