வயப்படு வயதும்
அகப்படு அகவையும்
உலகம் வயதாகிக் கொண்டு வருகின்றது. வயது என்ற துகரவிகுதிச் சொல்லை ஆய்ந்து சில முறை வெளியிட்டுள்ளோம். இதற்குமுன் வெளியிட்டது இன்னுமுள்ளது. நாமெல்லாம் காலத்தின் வயப்பட்டுக் கிடந்து மூப்பு அடைவதனால் " வயம் > வய > வயது" என்பது எவ்வளவு பொருத்தமான அமைப்பு.
வயது என்ற கால ஓட்டத்தைப் பற்றி நாமெதுவும் செய்ய முடிவதில்லை. ஊட்டச் சத்து, உயிர்ச் சத்து என்று இருக்கும் எதைத் தின்றாலும் காலம் ஓடிக்கொண்டு நம்மையும் அதில் இழுத்துக்கொண்டு தான் சென்றுவிடுகிறது.
கால ஓட்டத்தில் நாம் அகப்பட்டுக் கிடக்கிறோம். அதனால் " அகவை " என்ற இன்னொரு சொல்லும் நம்மிடம் உலவுகின்றது..
வயப்பட்டதனால் அது வயது.
அகப்பட்டுக் கிடப்பதனால் அது அகவை. இதை மேலும் அறிய:
தேகமும் திரேகமும்
குழந்தையாய் இருந்து இளமை பெற்ற ஒருத்தி முழுவளர்ச்சி அடைந்தபின், அவள் உடல் தேய்ந்து இல்லாமை அடைகிறது. அதற்குத் தேய் > தேய் + கு+ அம் = தேய்கம், > தேகம், திரை(தல் ) > திரை + ஏகு + அம் > திரேகம், என்று சொற்கள் வருதல், பொருத்தமே. ஆன்மா இவ்வுடலை உடுத்துக்கொண்டு உள்ளது. அதனால் உடல். இது பிடிக்கவில்லையென்றால், உள்ளுறுப்புகள் இவ்வுடலை உடுத்துக்கொண்டுள்ளன எனினும் அமையும். இறையிருப்புக் கொள்கையருக்கும் இறைமறுப்புக் கொள்கையருக்கும் பொருந்துமாறு உடல் என்ற சொல் அமைந்திருக்கிறது. எக்கொள்கையரையும் இணைத்துச்செல்லும் இனிமைத் தமிழின் ஏற்றம்தான் என்னே என்போம்
சரீரம்:
உடல் என்பது திடப்பொருள் ஆனாலும் அதன் பாதி நீர்கலந்து உள்ளதே. ஆகவே உடலின் சரிபாதி ஈரம் என்னலாம் நீர் குன்றிவிட்டால் மருத்துவமனைகளில் உடலுக்குக் குழாய்கள் மூலமாக நீரூட்டுகிறார்கள் மருத்துவர்கள். Dehydratiion தொல்லைதருமே. சரி + ஈரம் உடையதுதான் இவ்வுடல். ஈரம் சரியாகவும் இருக்கவேண்டும். இவ்வுடலைச் சரி+ ஈரம் = சரீரம் என்றதும் எத்துணைப் பொருத்தமடி தோழி!.
சற்று விரிவாக ஈண்டு காண்பீர்.
தேகமும் பழுதும்:
பழுது என்ற சொல்லும் உடல் நாளடைவில் பழுதடைவதை உடையதென்பதை விளக்குகிறது. இச்சொல்லுக்கு நிகண்டுகளிலும் அகரவரிசைகளிலும் காணப்படும் பொருள்விளக்கம் காண்க. தேகம் (தேய் + கு+ அம்) என்னும் யகர ஒற்று இடைக்குறைச்சொல்லும் பழுது என்ற சொல்லும் தமிழர் யாக்கை நிலையாமையை ஒர் வாணாட்கோட்பாடாக வைத்திருந்தனர் என்பதை உறுதிசெய்கின்றது. இலக்கியத்தும் கண்டுமகிழ்க.
தட்டச்சுத் திருத்தம் பின்
[இன்று மகுடமுகி என்னும் கொரனா நோய்நுண்மி யாண்டும் பரவிவிட்டது. இன்று ஒரு துக்க நிகழ்வுக்கும் வீட்டிலுள்ளோர் சென்றுவந்தனர். எமக்கு மீண்டும் அதுபற்றிய சொல்லமைப்புகள் நினைவுக்கு வந்துவிட்டன. அதனால் இவ்வரைவு. இதில் பழுதே புதிது.]