ஞாயிறு, 29 மார்ச், 2020

முன்னுக்கும் பின்னுக்கும்.

கட்டுரை முதலியன எழுதுங்கால்  முன்னுக்கு, பின்னுக்கு என்று எழுதுவதில்லை.   வகுப்பு வாத்தியார் பார்ப்பதற்காக எழுதிய கட்டுரையிலும் " முயற்சி செய்து ஒவ்வொருவரும் முன்னுக்கு வரவேண்டும்" எழுதினால், அவர் முன்னுக்கு என்ற பதத்தின் மேல் ஒரு வட்டம் போட்டு, இது பேச்சுமொழிச் சொல் என்று கூறி அவ்வாறு எழுதுதல் கூடாது என்று அறிவுறுத்துவார்.

மாணவனும் தான் செய்தது தவறு என்று " அறிந்து" கொள்வான்.

மூச்சை நிறுத்தும்போது எழுப்பும் ஒலியை முக்குதல் என்பர். எப்படி அமைந்தது இச்சொல்?    மு என்பது முன் இடம் குறிக்கும் ஓர் அடிச்சொல்.
கு என்பது சேர்தல் குறிக்கும் சொல். இன்று பெரிதும் உருபாக வழங்குவது.

முக்கு என்பது முன்னிடம் கொண்டுவா என்று சொல்வதாகும்.

தொடர்பினைக் காட்ட,  முன் +கு என்று எழுதி,   முன் கு >  முற்கு என்ற காட்டுவதே சரியாகும்.  முற்கு என்பது பின்னர் முக்கு ஆனதென உரைப்பதே விளக்கும் எளிய வழியாகும்.

முன்னுக்கு என்ற உருபேற்ற சொல்லுக்கும்  முற்கு என்ற சொல்லுக்கும் அடிப்படையில் சொற்புனைவு  வேறுபாடாவது ஒன்றுமில்லை.   வாத்தியார் முன்னுக்கு என்ற சொல்லுக்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும்,  முற்கு என்று அமைந்து பின்னொரு அம் விகுதிபெற்று  "முற்கம்" என்றாகி  மொழியில் இடம்பிடித்துவிட்ட சொல்லுக்கு அவரென்ன எதிர்ப்புத் தெரிவிக்கப்போகிறார்?
முற்கம் > முக்கம் என்பது ஒலி  குறிக்கும் சொல்.

இன்னொரு பதத்திலும் மு என்ற அடிச்சொல்லும் சேர்விடம் குறிக்கும்  கு என்ற துணுக்குச்சொல்லும் இணைந்து இறுதியில் ஓர் அம் விகுதியையும் இட்டுக்கொண்டு சொல்லமைப்பைச் செய்துள்ளது காண்க. அது மு+ கு+ அம் = முகம் என்ற சொல்லே.  முக்கம் என்ற சொல்லிலும் இம்மூன்றுமே  இணைந்துள்ளன என்றாலும் ஒன்றில் ககர ஒற்றுச் சந்தி எழுத்து வந்துள்ளது; இன்னொன்றில் சந்தி இல்லை. இவ்வாறு ஒன்றில் சந்தி வைத்தும் இன்னொன்றில் அஃது இல்லாமலும் ஆக,  இருசொற்களைத் தோற்றுவித்துள்ளமை ஒரு சீரிய அமைப்புத்திறனே ஆகும்.  இத்திறன் மொழியில் வளர்நாட்களிலேயே நன்கு  வெளிப்பட்டுள்ளது பல சொல்லமைவுகளில் காணலாம்.  எடுத்துக்காட்டுக்கு ஒன்று:   அறு + அம் = அறம்.   அறு+ அம் = அற்றம். இவை இருவேறு பொருண்மைகளை உணர்த்த முன் நிறுத்தப்பட்ட சொற்கள் ஆகுதல் காண்பீர்.

இவ்வாறாக, முன் உள்ளதாகிய முகம் என்னும் சினைப்பெயர் ,  மு+ கு +  அம் = முகமென்றே வந்ததல்லால் முக்கம் என்று வந்திலது அறிக.

முன் என்ற சொல்லிற் போலவே,  பின் என்ற சொல்லிலும் அமைப்புத் திறத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.   பின்+ பு =  பின்பு என்றும் இதனின் பேதமாக பின்+ பு + அம் =  பிம்பம் என்றும் வந்துள்ளமை அறிக. இதற்குக்  காரணமும் கூறுதல் கூடுவதே.  பின்பு என்பதிற் பின்மைக் கருத்து வெளிப்பட்டு நிற்றல் வேண்டும்.  பிம்பம் என்பதில் அக்கருத்து உள்ளுறைவாக மட்டுமிருந்தால் போதுமானதாகும். நிலவுக்குப் பின்னால் என்று யாரும் சொல்வதில்லை,  நிலா கோட்டை கட்டியுள்ளது என்று சிற்றூரார் கூறுவதிலிருந்து இதன் சொல்லமைப்புப் பின்மைக் கருத்து அடியிற் படுத்துவிட்டது.

இவ்வாறு சொல்லாக்க நுட்பங்களை அறிந்திடில் தமிழினிமை தக்கவாறு பளிச்சிடுமென்றறிக.

சொல்லமைப்புக் கருத்து பின்புலத்தில் ஒடுங்கிவிடில் அது நிகழ்ந்த சொல்லைத் திரிசொல்லெனலே தகும்.

இப்போது முன்னுக்கு என்ற உருபேற்ற வழக்குச்சொல்லை மட்டும் வைத்துச் சொல்லமைப்போம்.

முன்னுக்கு
மு என்பதும் முன் என்பதும் ஒரே சொல்லின் இரு வடிவங்கள்.
முன்னு என்பதில்  னு என்பது:    0ன்  என்பது சந்தி. உ என்பது சாரியை.
க்கு என்பதில் க் என்பது சந்தி;  கு என்பது  இடம் அல்லது சேர்விடம்.
ஆகவே அடிப்படை உள்ளிருப்புகள்  மு என்பதும்  கு என்பதும். மற்றவை தள்ளுபடி,
மு + கு,
இப்போது அம் விகுதி சேர்த்துச் சொல்லாக்கம் நிகழ்த்துக.
மு + கு + அம் =  முகம்  ஆயிற்று.
முகம் என்றால் முன்னில் அல்லது முன்னுக்கு உள்ள உறுப்பு என்பதே.
இன்னொரு வகையாகச் சொல்லவேண்டின்
முகம் என்றால் முன்னுக்கு.
முன்னுக்கு என்றால் அது முகம், ஆனால் முன்னுக்கு உள்ள பிறவும் குறிக்கும்

முகம் என்பதை முன்னுக்கு என்பதினின்று அமைத்ததில் முன்னுக்கு உள்ள ஓர் உறுப்புக்குச் சிறப்பான பெயர் வைத்தோம்.
மூஞ்சி என்பது முன் + சி=  மூஞ்சி.  முதனிலை நீண்டு சொல் அமைந்தது.  சி என்பது விகுதி.  இடப்பெயரினின்றும் தோன்றிய ஒரு சினைப்பெயர்.

தட்டச்சு சரிபார்ப்பு பின்,



வியாழன், 26 மார்ச், 2020

தொழுகை - பிரார்த்தனை

பிரார்த்தித்தல் என்பதை அறிவோம்.

பண்டை நாட்களில் இறைதொழும் நடவடிக்கைகள் வீட்டுக்கு வெளியில்தான் பெரிதும் நடைபெற்றன.  இதற்குக் காரணம் வெளியிடத்துள்ள lஇடவிரிவு ஆகும்.  ஆலமர் கடவுளும்  (சிவன்)   அங்குதான் வைத்துப் பூசனை பெற்றார்.  ஆலமரம் என்பது அகல மரம்.   அகல் அகலம்.   அகல் ஆல். இது பகல் பால் என்றசொல் போலுமொரு திரிபு.  பகல் எனிற் பிரிவு.  பகு அல் > பகல்.     அறத்துப்பால் என்றால் அறத்தைப் பற்றிக் கூறும் பிரிவு. மற்றும் சூரியன் ஒளிரும்   பகுதி நேரமும் பகல் எனவேபடும்.
சூடியன் >  சூரியன்.    இது மடி > மரி போலும் திரிபு.

வீட்டுக்குள் தொழும் முறை இடவசதிக் குறைவின் காரணமாய் அப்போது பெரிதும் ஏற்படவில்லை.

மக்கள் ஆலமரத்தடி சென்று பிரார்த்தித்தனர்.   பிரார்த்தித்தலாவது புறத்தே ( வீட்டுக்கு வெளியில் ) சென்று தொழுகை மேற்கொள்ளுதல். வேண்டிக்கொள்ளுதல். அரண்மனைகளில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை வேறாகும்.

இதில் உள்ள சொற்கள்:

புறம்  .>  புற. (   வெளியில்.     )
ஆர்த்தல் :    ஒலித்தல்.  இச்சொல் ஏனைத் தமிழின் இனமொழிகளிலும் உளது.

ஆர்த்தல் என்பது பின் சொல்லமைவின் பொருட்டு  ஆர்த்தித்தல் என்று திரிந்தது.  ஆர்த்தித்தல் என்பது ஒலிக்கச் செய்தல்.

புற ஆர்த்தித்தல் >   பிர ஆர்த்தித்தல் > பிரார்த்தித்தல்.

வெளியில் நின்று தொழுகை மேற்கொள்ளுதல். தொழுமனைகள் அல்லது கோயில்கள் அமைந்தபின்  அங்கு தொழுதல்,  வீட்டில் வசதி கிட்டியபின் அங்கு தொழுதல் என்று பின் பிரார்த்தனை பொருத்தமான எவ்விடத்தும் செய்யப்படுவதாயிற்று..  சிற்பிகள் தோன்றிச் சிலைகள் வடித்த பிற்காலத்தில் அவற்றின்முன் நின்று ஒலி எழுப்பி வேண்டிக்கொள்ளுதல் பிரார்த்தனையே ஆயிற்று.

ஆர்த்து ஆர்த்து ஓங்கி:  திருவாசகம்  3.51

அர், ஆர் என்பன ஒலித்தல் குறிக்கும் தமிழ் அடிச்சொற்கள். வல்லமையுடன் ஒலிஎழுப்பிப் பிறரை அடக்கிக் கீழ்ப்படியச் செய்து இயக்கியவனே அரசன்.   அர் . >  அர >  அரசு. ( பரி > பரிசு:   சு தொழிற்பெயர் விகுதி ).  அர் >  அரற்று > அரற்றுதல்:  ஒலித்தல்.  அர் >  அரட்டு.
கடல் ஆர்த்து எழுந்து சுனாமி வருகின்றது.  "  ஆர்த்தெழுவோம் நாம் தமிழரென்று " என்ற வாக்கியத்தில்  ஒலித்தெழுவோம் என்று பொருள்.  அர அர அர சிவா என்பது பின் ஹர ஹர சிவ என்று அயலில் மெருகுண்டு திரிந்தது.  அரட்டு > அதட்டு என்றும் திரியும்.  "த த  வாடா" என்பதில் த என்பது அதட்டுதல் குறிப்பு.   அர அர என்பது ரா ரா என்றும் திரியும்.   ரெக்ஸ் என்ற இலத்தீன் சொல் அரசு என்பதன் திரிபு.  இப்போது உலக சேவைச் சொல் அதுவாகும்.,.


அர ஹர   சிவ சிவ குருநாதா
அருகினில் வந்தெமைக் காவாவா  ( பாட்டு. )

அர்ச்சனை அருச்சனை என்ற இவற்றை ஆய்வு செய்யுங்கள்.

மறுபார்வை பின்

துக்க வீட்டில் மிக்க கவனம் வேண்டும்.

நண்பன் இறந்தாலும் நாட்டுறவோர் சென்றாலும்
முன்பின் அறியார் மறைந்தாலும் ---  பண்பனே
நால்வர்தாம் போதுமே நன்காடு கொண்டுசெல
நீள்வதோ கூட்டமே கேடு.


தொற்றும் மகுடமுகி நோய்நுண்மி  ஆதலால்
குற்றம் செயல்புன்மை வேண்டாமே ---- உற்றார்
உறவென்ப தொன்றைத்தான்  உள்மனத்தால் போற்று
குறைவொன்றும் நாடா துனை.


நோய்வட்டத்தைச் சுருக்கும் பல நடவடிக்கைகளை அரசுகள்
எடுத்துவருகின்றன.  அவற்றுக்கு ஆதரவாக இருந்து விதிகளைத்
தவறாமல் கடைப்பிடிப்பதே நாம் இந்தத் துன்பகாலத்திலிருந்து தொலைவில்
சென்று தப்பிக்கும்  மார்க்கமாகும்.  உடல்நல வழிகளைத் தவறாமல்
பின்பற்றுங்கள்.