செவ்வாய், 3 மார்ச், 2020

கபிலர் என்னும் புலவர்பெயர்.

எப்பொருளாயினும் அதை ஒளிவு மறைவின்றி எடுத்துரைப்பதற்கு ஒரு திடமான மனம் வேண்டும்.   ஒளிவு மறைவு என்பதற்கு மற்றொரு சொல் "கட்பு"  என்பதாகும்.

கட்பு என்ற சொல் எப்படி அமைந்தது என்பதை முதலில் பார்க்கலாம்,

கள்ளம் என்ற சொல் எதையும் ஒளிப்பதையும் பொய்மையையும் குறிக்கும்.  கள்ளர் என்பது திருடர் என்றும் பொருள்படுவது.  இச்சொல் கருப்புநிறத்தவர் என்றும் பொருள்தரும்.  கள்ளி என்பது திருடி அல்லது மறைத்தவள் என்றும் குறிப்பதுடன் கள்ளிச்செடி, கள்ளிப்பலகை முதலியவையையும் குறிக்கும். இவற்றின் அடிச்சொல் கள் என்பதுதான்.  கள் ஒரு குடிதேறலையும் குறிக்கும்.

கள் என்பது அடிச்சொல் என்றோம்.  இச்சொல்லுடன் ஒரு "பு" விகுதியைச் சேர்த்தால்  கள்+பு =  கட்பு என்ற சொல் உருவாகின்றது.

ஒளிவு மறைவோ அல்லது தீய  பண்புகளோ இல்லாதவர்,  அல்லது எதையும் வெளிப்படையாக அணுகி ஆய்பவர்  என்று பொருள்தரும் ஒரு பெயரை அமைப்பதற்கு:

கட்பு + இலர்  =  கட்பிலர் என்ற சொல் அமையும்.

இச்சொல் மெய் நீக்கப்பட்டால்  அல்லது நாளடைவில் இடைக்குறைந்தால்

கபிலர் என்றாகிவிடும்.

கபிலர் என்ற சொல்லுக்குத் தமிழிலும் சங்கதத்திலும் வேறு பொருள்பல கூறலாம் எனினும் அவற்றை இன்னோர் இடுகையில் காணலாம்.

இடைக்குறைச்சொற்கள் பல ஆய்ந்து முன் கூறியுள்ளோம். பழைய இடுகைகள் காண்க.   நகுலன் என்ற பெயரும் நற்குலன் என்ற சொல்லின் இடைக்குறையாகி நற்பொருளே தரும். வல்லவர் என்ற சொல்லும் வலவர் என்று வருமே. பல்லோர் என்பதும் அர் விகுதி ஏற்குங்கால் பலர் என வருதல் கண்கூடன்றோ? இவையனைத்தும் நீங்கள் ஒப்பிட்டு அறிதற்கானவை.

இதைக் கபி -  குரங்கு  என்று பொருள்படும் சொல்லினடித் தோன்றியதாகக் கொண்டு பொருளுரைப்பாருமுண்டு.   அதையும் பின் காண்போம்,

கபிலர் என்ற பெயருள்ள புலவர்கள் தமிழ்நாட்டில் இருந்துள்ளனர்.    சங்கப்புலவர் கபிலர் என்பவர் பத்துப்பாட்டில் ஒன்றாகிய "குறிஞ்சிப்பாட்டு" பாடியுள்ளமையால் இப்பெயர் முதன்மை பெறுவதாகிறது.

தட்டச்சுப் பிழைகள் திருத்தம் பின்


வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

ஆசிரமம் சொல்லில் இரட்டை விகுதி

ஆசு என்னும் சொல் பயின்று அமைந்த பல சொற்களை அவ்வப்போது சுட்டிக்காட்டியுள்ளோம்.  இந்தச் சொல் ஆதல் (ஆகுதல் ) என்ற வினையின் அடிப்படையில் அமைந்ததாகும்.

சு விகுதி வந்த சில சொற்களை இப்போது நினைவுகூர்தல் நலமாகும்.  பரிதல் என்பது அன்பு காட்டுதல் என்றும் பொருள்தரும். பரிவு, பரிந்துரை முதலிய சொற்களில் வரும் பரி என்னும் சொல்லை நீங்கள் மறந்திருத்தல் எவ்வாறு?
பரிசு என்ற சு விகுதி பெற்ற சொல்லும் பரிதல் வினையடிப்படையில் உண்டானதே.

சிசு என்ற சொல் தமிழ்ப் பேச்சு வழக்கில் உள்ள சிறுசு என்பதன் றுகரம் வீழ்ந்த இடைக்குறைச்சொல். சிலர் சிறிசு என்றும் சொல்வதுண்டு.


விகுதி என்பதற்கு இறுதிநிலை என்றும் சொல்வர்.  சொல்லை மிகுத்துப் பொருளைப் பெருக்கிக் காட்டுவதே  விகுதி.   மிகுதி - விகுதி : இதில் மி - வி போலி இருத்தலை உணரலாம்.  மிஞ்சு - விஞ்சு : போலியே இதுவும். மிகுதி என்ற சொல் பொதுப்பொருளில் வர, விகுதி என்பது சொல்லின் நீட்டத்துக்கு மட்டும் வழங்குவதாயிற்று.

இன்னொரு சு விகுதிச் சொல்:  காசு என்பது.   மனிதன் காத்துப் போற்றிப் பயன்பெறுவதனால்  கா(த்தல்) >  காசு ஆயிற்று.  சற்றுக் கரிய நிறம் குறிக்கும் மா என்ற சொல்லினின்று மா+சு  ( மாசு) என்ற சொல்லும் அமைந்தது காணலாம்.  " ு " வினையாக்க விகுதியாகவும் வரும்,  எடுத்துக்காட்டு:  கூசு (கூசுதல்),  பேசு  ( பேசுதல் ).

ஆசு  என்ற சொல் உள்ளமைந்த சொற்கள் பல. இதற்குப் பற்றுக்கோடு என்றும் பொருள். ஆசு எனின் பற்றிக்கொள்ளுதல் ஆகும்.

ஆசு + இரு + அம் + அம்.  =  ஆசிரமம்.

ஆசு -  இரு என்பவற்றின் ஈற்று உகரங்கள் கெட்டன.

இச்சொல் இரண்டு அம்  ஈற்றில் வந்து முற்றிற்று..  இடையில் உள்ள அம்  என்பதைச சொல்லாக்க இடைநிலை என்றும் சொல்லலாம். அன்றி, இரட்டை விகுதி எனினும் பேதமில்லை.

யாரும் பற்றி(க்கொண்டு)  இருக்கும் இடமே ஆசிரமம்.   அனாதை ஆசிரமம் என்பது காண்க.

இவ்வழக்குச் சொல் பிறமொழிகளிலும் வழங்கித் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது.

சொல்லவும் எழுதவும் பல உண்டு எனினும் சுருங்கச் சொல்லி முடித்தல் கருதி நிறுத்துவோம். அறிக மகிழ்க.

தட்டச்சு பிறழ்வுகள் பின் கவனம்பெறும்.

திங்கள், 24 பிப்ரவரி, 2020

மகுடமுகித் தொற்று (கொரனாவைரஸ்)

2003 வாக்கில் saars என்னும் பெயரிய சளி மூச்சுத்திணறல்
நோய்நுண்மம் பரவியது.  ஏறத்தாழ் 8000
மக்கள் பாதிப்பு உற்றனர்.  பாவம் 774 பேர் இறந்தனர். அதனினும்
மிக்க பாதிப்பே மீண்டும் மகுடமுகி 1 நோய்நுண்மிகளால் இன்றும்
வந்துள்ளது. பாதிப்பு இப்போது கடுமையானது: 78000+  பேர்
நோய்வாய்ப் பட்டுள்ளனர்.

வரலாற்றில் வந்ததுவே மீண்டும் வந்தது. அந்த உண்மையை
இந்தச் சில வரிகள் தெரிவிக்கின்றன.



வரலாற்றில் வந்ததுவே வருமே மீண்டும்;
வாழ்க்கையிலே தோன்றியதே தோன்றும் யாண்டும்;


உரலுற்ற நெல்லதுவே பொருளாம் பின்னும்
உலகியலில் உண்மையிதே உணர்வீர் உள்ளீர்
 

விரலுற்ற புண்ணிடமே புண்ணாம் இன்னும்:
வேறுபடல் அrரிதென்பார்   விரிவ றிந்தோர். 


குறிப்புகள் History repeats itself

( a saying in English )


1  மற்ற பெயர்கள்:  முடியுருவினி,  மகுடத்தோற்றினி

2 சிங்கப்பூரிலும் தொற்றியுள்ளது.  ஆனால் பெரும்பாலும்
வெளியார் ஆவர்.

அரும்பொருள்

யாண்டும் -  எப்போதும்.
உரலுற்ற - உரலில் குத்துவதற்கு இட்ட
பொருளாம் மீண்டும் -  குத்துதலுக்குப் பொருளாகும் இன்னொரு
முறையும்.
உலகியலில் - உலக நடப்பில்
உள்ளீர் - மக்களே
விரலுற்ற - விரலில் பட்ட
புண்ணிடமே - புண் பட்ட இடமே
புண்ணாம் இன்னும் - மீண்டும் காயப்பட்டுப் புண்ணாகும்
வேறுபடல் -  மாறிவருதல்
அரிது - மிகக் குறைவு
விரிவு - விளக்கம்.

மாற்றி வாசிப்பு:

வரலாற்றில் வந்ததுவே வருமே மீண்டும்;  என்பதை
வருமே மீண்டும்  வரலாற்றில் வந்ததுவே  என்று மாற்றியும்
இப்படியே ஆறு வரிகளையும் மாற்றி வாசித்தாலும்
பொருள்மாறாமல் வேறு சந்தம் தரும் வரிகள் இவை.