திங்கள், 10 பிப்ரவரி, 2020

நானே பேரரசி.....ஊர்பார்க்க...

 








உந்துவண்டி ஏறியே ஒய்யார மாயமர்ந்து

தந்தையுடன் சுற்றுவேன் பந்துபோல் ---- வந்த

சிறுநகைச் சீரால் மயக்கிவிரல் சுட்ட

ஒருநகர் முற்றும் வசம்'


தொங்கிருக்கை ஊஞ்சலில் தோய்ந்துநான் பேரரசி

இங்கிருக்க ஏற்றிலார் யாவருண்டு ---- நன்குநோக்காச்

செல்வார் திரும்ப வருவார்தம் கையசைக்கக்

கொள்வார்மெல் வாஞ்சையென் பால்.

உந்துவண்டி  -   ( கார்).

சிறுநகை -  புன்னகை

சுட்ட - காட்ட  (சுட்டிக்காட்ட)

நன்கு நோக்கா  -  நல்லபடி பார்க்காத

செல்வார் -  கடந்து போகிறவர்

வருவார் -  (குழந்தை இருக்குமிடம் தாண்டிச் செல்ல)

வருபவர்

கையசைக்க - (குழந்தையைக் கண்டு)  தம் 

கரங்களை  ஆட்ட 

மெல் - மென்மையான

என் பால்  -  என் மேல்

வாஞ்சை -  அன்பு


எங்கள் பதிவில் தலைப்பில்  ஊர்பார்க்க என்பது  மேலேற்றுத்

திரையில் உர் பார்க்க என்று தெரிகிறது. இதைச் 

சரிசெய்ய முடியவில்லை.





வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

தொற்றுநோய்ப் பேரிடர்

தொற்றுநோய் பல நாடுகளில் தாண்டவமாடுகிறது.  அது பற்றி இம்மாதத் தொடக்கத்தில் யாமெழுதிய ஒரு கவிதை.

வீட்டி லடங்கிக் கிடமகனே மீ'றிடிலோ
மாட்டிக் கொளநேரும் நோய்த்தொற்றில் ---- மூட்டெளிதே
ஊகான் குறுங்குறுமி ஓங்கிற் றுலகெல்லாம்
வாகாரும் வாழ்வை உக.

மூட்டு எளிதே --  நோயணுக்கள் காய்ச்சல் முதலியவற்றை
மூட்டுதல் எளிதாகும்.
குறுங்குறுமி    --சிறிதான கிருமி.

ஊகான் - சீனாவில் நோய் தொடங்கிய இடம்.
வாகாரும் -  அழகான.
உக - விரும்பு.

புதன், 5 பிப்ரவரி, 2020

எமனாவது எருமைக் கடாவாவது?

எமன் என்ற கருத்தை  ஏளனத்துடன் எடு த்தெறிவோர்  உள்ளனர்.  மக்கள் அனைவரும்  எதையும் ஒருவரேபோல் கருதுவாரில்லை.  ஆகையால் வேறுபடச் சிந்திப்பார்  வாழ்க -, இனி தாக.

ஆனால் எமன் என்ற சொல்  தமிழ்ச் சொல்லே ஆகும். எகர த் தொடக்கத்துச் சொற்கள் யகர வருக்கத்துச் சொற்களாகத் திரிபு அடைதல் ஐயமின்றி நிறுவ ப்படும். எடுததுக் காட்டாக எவர் என்பது யார் என்பதனுடன்
தொடர்புற்ற சொல்லே ஆகும்.  ஆர் > யார் நேரடித் திரிபாகும்.  எமன் >. யமன்  > இயமன் என்று அவை வந்தன.

எமன் எனற சொல் எம்+ அன் என்று பிரியும். நோய் என்பது  உடலிற் பிறப்பது ஆகும். "உடன் பிறந்தே கொல்லும் வியாதி " என்றார் ஒளவைப் பாட்டி.  எப்போது மனிதன் பிறந்தானோ அப்போதே நோயும் கூடப்பிறந்துவிட்டது.  அது முற்றி வெளிப்படக் காலம் எடுத்துக் கொள்ளும்.  அவ்வளவு தான். அது உம்முடைய உரிமைகளில் ஒன்றாவது நிலையினதாகும். கிருமி யென்னும் குறுமியினால் வெளிப்பிணிப்பு ஆயினும் அது உம்முடையதே.  இதை உணர்ந்த பண்டை த் தமிழன் அதை "எமன்"எ‌ன்று ஒத்துக்கொண்டான்.  உருவகம் செய்து " எம்மவன்"  என்றான்.

எருமை,   தூய்மை அற்ற  -  பிற அணியிலுள்ள புற அணியினதான   -  'பிராணி". பல நோய்கள்  தூய்மை இன்மையால் வருதலின் எருமை வாகனம் என்றது மிக்கப் பொருத்தம்.

எத்தகைய வலிமையோனும் சுருண்டு விழுந்து இறந்தால் எமனுக்குக் கடவுள் தன்மை உண்டாகிவிடும். இது மாந்த வரலாற்றுக்குப் பொருந்துவதே.

ஆதலின் எமன் என்றது இந்தக் கொலைவழிகட்கு ஆன மொத்தக் குறிப்பையே ஆமென்று கொள்க.

எமன் என்று எம் என்னும் சொல்லுடன் ஒன்றித்தபடியால் மரணம் விளைவித்த எதையும் அவர்கள் தம்மின் வேறாகக் கருதவில்லை என்று உணர்வீர், மகிழ்வீர். எமன் என்பது உடனுறைவு குறித்து வாழ்வியலை விளக்கவல்ல சொல். இறைவன் தன்னுள் என்னும் கருத்தினுக்கும் இது புறம்பானதன்று என்க.

தட்டச்சு எழுத்துப் பிறழ்வுகள் சரிசெய்யப்படும்.