புதன், 28 ஆகஸ்ட், 2019

முச்சறிக்கை.

உடல் நலக் குறைவின் காரணமாக சில நாட்கள் எழுதவில்லை. நிலைமை இன்னும் சரியாக வில்லை.

என்றாலும் இன்று ஒரு சொல்லைத் தெரிந்துகொள்வோம்.

நாம் கவனிக்கப் போகும் சொல்  "முச்சறிக்கை"  என்பது.

பேசி முடித்தபின் ஏற்பட்ட உடன்பாட்டை வெளிப்படுத்துவதே "முச்சறிக்கை" ஆகும்.

கருத்து  -   முடித்து  அறிவித்தல்.
முடித்தறிக்கை
முச்சறிக்கை.
இங்கு டிகரம் மறைந்தது.
தகரங்கள் சகரங்கள் வருக்கமாயின.

எளிமையான திரிபுதான்.

முச்சரிக்கை என்பது வழு.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

தாமம் ( குடியிருப்புகள்.) மற்றும் தாமான் ( மலாய் )

நீங்கள் மலேசியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்தீர்கள் ஆயின்
மக்கள் வதியும் குடியிருப்புகளுக்கு  " தாமான்" என்ற சொல் வழங்கப்படுவதைக் கண்டு மகிழலாம்.

தாமம் என்ற தமிழ்ச் சொல் " நகரம் " என்று பொருள்படுவதாகும். இது பழைய தமிழ்நூல்களில் உள்ளது.  இது பல பொருளுடைய சொல்.  தாமம் என்பதற்குக் கயிறு என்றும் பொருள் உண்டு.  தாமம் என்பது நகரம் என்றும் பொருள்தருவது.  பி ங்கலந்தை நிகண்டு காண்க.

இது நகரை  அல்லது குடியிருப்புத் தொகுதிகளைக் குறிக்குமாயின்  சொல்லமைப்பினை இவ்வாறு காணலாம்:

தா என்பது  தாழ் என்பதன் கடைக்குறை.    இங்கு தாழ்தலாவது முயற்சிகள் வேலைகள் எல்லாவற்றையும் தாழ  இட்டுவிட்டு,  (  கீழே போட்டுவிட்டு) ஓய்தல்.



மன்னுதலாவது  தங்குதல்.  மன்னுதல் என்ற சொல்லின்
பொருள்களில்  இதுவொன்று.

மன் என்பது சொல்லாக்கத்தில் மம் என்று திரியும்.  அதாவது
 0ன் என்பது 0ம் என்றாகும்,   எடுத்துக்காட்டு:    அறன்   அறம்.

இதன்படியே  தாழ் மன் >   தாமன்  >  தாமம்   ஆகும்.

வீடு என்ற சொல்லும்  வேலைகளை விட்டு இருக்கும் இடம் என்னும் பொருளதே என்பது  காண்க.

இந்தத் தாமன் என்ற சொல்லே  மலாயிலும் சென்று  ஏறித் தாமான் ஆயிற்று.

அம் தாமம் எனின் அழகிய தங்கிடம்.   ஆகவே அந்தாமம் என்பது சொர்க்கம் என்ற பொருளை அடைந்தது.  அம் =  அழகு.

இனித் தாழ்தல் என்பது   அரச குடும்பத்தினரின் மனைகட்கு அப்பால் தாழ்ந்த குடியிருப்புகள் எனினும் ஒக்கும்.

இன்று தாமம், தாமான் (  மலாய்மொழி )  முதலியன அறிந்தோம்.

குறிப்பு:  அகத்து  மன்னுதல்:   அகத்துமன் >  ஆத்துமன் >ஆத்மன் >  ஆத்மம் >  ஆத்மா,  உடம்பின் உள்ளிருப்பதாகிய ஆத்துமா. மன்னுதல்:  தங்குதல் என்பது கூறப்பட்டது.  இங்கும்  னகர ஒற்று இறுதி மகர ஒற்றிறுதி  ஆனது கண்டுகொள்க


தட்டச்சுப் பிழைகள் :  பார்வை பின்.

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

நண்பருக்கு அனுப்பிய பதில்.

ஓர்  இனிய நண்பர் நன்`கு படித்துப் பட்டையம் (diploma)   வாங்கியவர்.  சரியான வேலை அமையவில்லை.  அதனால் இப்போது வாடகை வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

எனக்கு அம்மன் படம் ஒன்றை  அலைப்பேசிக்கு (mobile phone)  அனுப்பினார்,  அவருக்கு நான் எழுதிய ஒரு பதில் இது:

இஞ்சி டீ1 குடிக்கின்ற இனிய நேரம்;
வண்டியை நிறுத்துங்கள்  இடத்தில் ஓரம்;
ஒரு கோப்பை வாங்குங்கள் தாகம் தீரும்;
இழந்த பலம் எல்லாமும் வந்து சேரும்.

அனுப்பிய படத்துக்கு நன்றியைத் தெரிவித்தேன்.   மணி மாலை 4.

Footnote:

1   கொழுந்துநீர்  ( மொழிபெயர்ப்பு)
இஞ்சி இட்ட கொழுந்துநீர்.