வியாழன், 8 ஆகஸ்ட், 2019

சிசுவும் சிறியவைகளும்

இப்போது சிசு என்ற சொல்லின் கதையைத் தெரிந்துகொள்வோம்.

கதை என்பது பெரும்பாலும் புனைவுகளையே குறிக்கும்.  என்றாலும் அறிஞர் வரதராசனார்  போன்ற புகழ்ப்பெற்ற ஆசிரியர்கள் எழுத்தின் கதை, சொல்லின் கதை என்றெல்லாம் தலைப்பிட்டு எழுதியுள்ளனர். இவ்வாறு தலைப்பிடும்போது  கதை என்பதற்கு வரலாறு என்றே பொருள்கொள்ள வேண்டும். ஒரு சரித்திரத்தை வரலாற்றாசிரியன் சொல்வதுபோல் கடினமாகச் சொல்லாமல் ஒரு கதைசொல்வோன் போல மென்மை தவழச் சொல்வதனால்  அதனைக் கதை என்றார். நாமும் இவ்வாறு மென்மைபடச் சொல்வோமே.

சிற்றூர்களில் சிறியது  என்பதைச் சிறிசு என்றும் சொல்வார்கள்.  பையன் சிறிசு, பாவம், அதிகமாக வையாதீர்கள் என்று சொல்வதைச் செவி மடுத்திருக்கலாம் .

இந்தச் சிறிசு என்ற திரிபுச் சொல் மேலும் ஒரு திரிபை அடைந்தது.

அதாவது இடையிலுள்ள றிகரம் குன்றிற்று.  சிறிசு என்பது  சிசு ஆயிற்று.

நான் ஒரு திராவிடச் சிசு என்ற புகழ்மிக்க வாக்கியத்தையும் நீங்கள் கேட்டிருப்பீர்களே?   யார் சொன்னது என்று நினைவில் இருக்கிறதா? இங்கு சிசு என்பது தன்னடக்கம் மிக்கு நின்றது.

நாளடைவில் சிசு என்பதற்கு மிகச் சிறிய குழந்தை என்ற பொருளும் ஏற்பட்டது.

சில திரிபுகள் புதுப்பொருள் தரவல்லவையாக பயன்பாட்டில் மாறிவிடுகின்றன.

 சிசு   இடைக்குறை. அறிந்தீர். மகிழ்ந்தீர்.

ஆனால் ஆங்கிலத்தில் வரும் "சைல்டு"  எப்படி என்று பார்ப்போமா?

சில் என்ற சிறுமை குறிக்கும் தமிழ் அடிச்சொல்.  இதிலிருந்து  சிறு என்ற சொல் தோன்றியது.  சிறுமை எனின் எண்ணிக்கைச் சிறுமையும் உருவச் சிறுமையும் என ஒன்றுக்கு மேற்பட்ட வகைப்படும்.

சில் > சிறு.
சில் >  சில.
சில் > சில்+து >  (சில்து )  >  சில்டு  (சைல்டு ).  ஒலிப்பு மாற்றம் ஏற்பட்ட சொல்.
சில் :  ஒரு பெரியதிலிருந்து பெயர்ந்த ஒரு சிறு துண்டு அல்லது கல்.
சில் > சிலை.   சிறிது சிறிதாக செதுக்கி எடுக்கப்பட்டு ஆனது.  கல்லுருவம்.
சில் > சில் பு > சிற்பு > சிற்பு அம் >  சிற்பம்.    சிற்பு + இ = சிற்பி.
சில் > சின் > சிந்து.   சிறிய பாடல் வகை.  அடிக்கு மூன்று சீர்கள் வருவது.
சில் >  சிந்து :  சிறு நூல் வகை  (  பி.டி. சீனிவாச ஐயங்கார் ).
சிந்து நதி,  சிந்து மாநிலம்  :  இந் நூல் விலையான இடம்.
சிந்து மொழி   அவ்விடத்ததான மொழி.

சிந்து > சிந்துதல்:  சிறிது சிறிதாக உதிர்த்தல்./ கொட்டுதல்
சிந்தித்தல் :  சிறிது சிறிதாக மனத்தில் எண்ணம் விளைத்தல்.,  வெளிப்படுத்துதல்.

சில் + நாள் = சின்னாள்.  சின்னாட்களில் யாமுரைத்தன மறப்பீரோ?
சின்னாள் = சில நாட்கள்.

இனிச் சந்திப்போம்.

இந்த ஆங்கிலச் சொல்லும் அதே அடியில் வந்து விழுகிறதே!  எப்படி என்பதை நீங்களே செப்பிடல் வேண்டும்.

மயூரமும் வைசூரியும்.

திருமயிலாடு துறை என்ற ஊருக்கு மயூரம்  என்றும் பெயர். 

மயூரம் பின் திரிந்து மாயவரம் என்றானது.    இதைப் பிரித்தால் மாய  = செத்துப்போக,  வரம் =  வரம் பெற்ற ஊர் என்று இரண்டாவது ஒரு பொருளும் வருகிறது.

பொருளாகச் சில எடுத்துக் கொள்ளும் வசதி உள்ள ஒரு நிலையை  சில + எடு + ஐ =  சிலேடை என்பார்கள்.  நல்ல அமைப்புச் சொல்.  ஆனால் புரியாமல் போனவர்கள் பலர்.  சிலேடை என்னும்போதெல்லாம் சல்லடை நினைவுக்கு வருதனாலோ என்னவோ!  சல்லடையில் ஏகப்பட்ட பொத்தல்கள்.

மயூரம் என்பது மயில் என்ற சொல்லுடன் தொடர்பு மிக்குள்ள சொல்லே.

மை+ இல் =  மயில்.

இல் எனப்பட்டது இடப்பொருள் தரும் பழந்தமிழ்ச் சொல்.  அது வீடு என்றும் பொருள்தரும்.   கண்ணில் மூக்கில் என்னும்போது இடப்பொருள் உருபாகவும் வரும் இனிய இடைச்சொல்லும் ஆகும்.  அல்லாதவிடத்து இல் - வீடு என்று முழுச்சொல்லாகவும் மிளிரும்.

இல் > இன் என்பதை மேலை மொழிகட்கும் தந்து மகிழ்ந்தவன் தமிழன்.

இவை நிற்க:


மை +  ஊர் + அம் =  மையூரம் ,  இதில் ஐகாரம் குறுகி,  மயூரம்.

இறக்கைகளில் பல இடங்களில் மை ஊர்ந்து நிற்கும் பறவை மையூரம்.> மயூரம்.  அம் என்பதை அமைப்பு குறித்த தொழிற்பெயர் விகுதி.  அமைப்பு இலாவிடத்தும் வரும்;  அமைப்பு உள்ளவிடத்தும் வரும்.  விரவி வரும்.
அமைப்பு அற்ற பொருள் நினைவுக்கு வரவில்லை.  வானம் என்றாலும் அதுவும் அமைப்புற்றதே என்னலாம்.  ஒருவேளை  வான் என்பதை வானம் என்று நீட்டி அதனால் குறிக்கப்பெற்ற அமைப்பு யாதுமில்லை என்று வாதிடாலாம்..  அமைப்பு பொருளில் வந்துவிட்டபடியால் விகுதியில் தேவையில்லை என்று வாதிட்டால் -   சரிசரி,   வாதம்  வைகுக.

மை இல்லென்று இருப்பின் என்ன,  மை ஊர்தல் என்று ஊர்ந்தால் என்ன, வேறுபாடு ஒன்றுமில்லை.

கொப்புளங்கள் ஏற்பட்டு, சுர சுர என்று  சுரசுரப்பாகி,   நுண் நோயுயிர்கள் கொப்புளங்களின் உள் சுரந்து,  உடலெங்குமே   ஊர்ந்தனபோல் தோன்றுவது    வை + சுர +   ஊரி.  =  வைசூரி.  சுரந்து ஊரும் கொப்புளங்கள் உடலெங்கும் வைக்கப்பட்ட நிலை!!

சுரந்து வரும் நீர்க் கொப்புளங்கள் சுரசுரப்பைத் தோலில் ஏற்படுத்துவன.  இங்கு சுர என்ற சொற்புகவு இரட்டைப் பொருத்தம்.

மயிலில் மை   ஊர்ந்தன;   இந்த   அம்மை நோயில் கொப்புளங்கள் ஊர்ந்தன.

ஊர்தல் வினைதான் எத்துணை அழகாகப் புகுத்தப்பட்டுள்ளது  எம் தமிழே!

தனிமைச் சுவையுள்ள சொல்லை எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாம் கண்ட திலை.  உண்மை உண்மை.

எல்லா மொழிகளும் இனிமையே ஆகும்.

எழுத்துப் பிழைத் திருத்தம் பின்.

கோப்பை என்னும் பெயர்ச்சொல்.

இப்போது கோப்பை என்னும் சொல்லை ஆய்வு செய்வோம்.

இன்று உள்ளவை போல் கோப்பைகள் பளிங்கினாலும் மண்ணினாலும் கனிமங்களாலும் செய்யப்படவில்லை,  முன் காலங்களில்.

நாம் குறிக்கும் முன் காலம் அவை இலைகளால் செய்யப்பட்டு,  அதில் ஊற்றப்படும் நீர்ப்பொருள் ஒழுகாமல் நல்லபடி திறமையுடன் அமைக்கப்பட்டுப் பயன்படுத்திய காலம்.  இத்தகைய திறமை இப்போது இல்லையென்றே கருதவேண்டி உள்ளது. இத்தகைய கைவினப் பொருள்கள் செய்பவர்கள் அறிவில்லாதவர்கள் ஏழைகள் என்று இகழப்பட்ட படியால் அத்திறமை அழிந்தது.

இலைகளைக் கோத்து முடைந்து செய்யப்பட்டதே கோப்பை.  இதற்குரிய வினைச் சொல் கோத்தல் என்பது.  இவ்வினை இன்னும்  நம்மிடையே இருப்பதும் நம் நற்பேறே  ஆகும்.   அதிலிருந்து " ஃபைல் "  என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேராகக்  " கோப்பு " என்ற சொல் வந்ததும் நமக்கு நல்லதே ஆகும்.  நடப்பவை அனைத்தும் நன்மையே.

கோத்தல்  வினைச்சொல்.
கோப்பு >  கோப்பு + ஐ =  கோப்பை.
கோப்பை என்ற சொல்லில் இரண்டு விகுதிகள் பொருத்தப்பட்டுள்ளன.
பு என்பதும் ஐ என்பது.   பை என்று  வைத்துக்கொள்ளினும் நட்டமில்லை.

அறிந்து மகிழ்வதுடன் கூஜா என்ற முன் இடுகையையும் வாயித்து ( வாசித்து) மகிழவும்.