செவ்வாய், 23 ஜூலை, 2019

மா மை மயிர் மயில்

இன்று மை,   மா,   மயிர் என்ற  சொற்களைத் தெரிந்தின்புறுவோம்.

மை என்பது பல்பொரு ளொருசொல் ஆகும்.  இதன் பொருண்மையில் கருப்பு   என்பதும் ஒன்றாம்.

" மையிட்ட கண்மலர்ந்தாள்"  என்று கூறின்,  கருப்பு மையிட்ட என்பது பொருளாகக் கொள்ளின் சரியாகும்.  இப்போது வேறு நிற மைகளும் உண்டெனினும் இந்தச் சொற்றொடர் போந்த காலத்து இவை கவனத்துக்கு வராமை உணர்க.

மா என்பதற்கும் வேறு பொருள் உண்டெனினும்,   மா நிறம் என்பதுபோலும் தொடரில் கருமையையே குறிக்கும்.   ஆனாலும் பேச்சு வழக்கில் இஃது முழுக் கருமையைக் குறித்திலது என்பர்,  சற்று வெண்மையொடு  பெரிதும் கருமை கலந்த நிறத்தையே குறிக்குமென்பர்:  இதையும் மனத்தில் இருத்திக் கொள்வீர்.

மயிர் என்ற சொல்லில் இர் என்பதே விகுதி என்று கோடல் பொருத்தமாம். பகுதியாவது ம என்பதே.

இந்த ம என்பது மா என்ற சொல்லின் குறுக்கமாகும்.

மா என்பது சொல்;  ம என்பது தனித்து வாராமையின் சொல்லன்று என்றும் திரிபிற் போந்த வடிவம் என்றும் கூறுப.

இப்போது யாம் கூறவந்தது:

மா >  மா+ இர் >  மயிர்.   ஈண்டு மா என்பது ம என்று குறிலாய் நின்றமையின் முதனிலை குறுகி அமைந்த சொல்லென்று காண்க.

இதுபோலும்  எடுத்துக்காட்டு வேண்டின்:

சா +  அம் =  சவம் என்பதைக் கூறலாம்.  சாவு+ அம் =  சவமெனினுமாம்.
கூ + இல் =  குயில் என்ற ஒப்பொலிப் பெயரையும் காட்டலாம்.
மா + இல்=  மயில் எனினுமது.

வினைகளும் இவ்வாறு குறுகுதல்:  வா -  வந்தாள். வந்து.  வந்த.

இதுவே விதியாம். இது வாதத்தின் அப்பால்பட்டதாகும்.  பழைய இடுகைகளில் பரந்துபட்டு விளக்கமுற்றுள்ளது இது.

இனி,  மை + இர் =  மயிர் எனினுமாம்.

மயில் என்பது கரும்புள்ளிகள் உள்ள பறவை என்பதாம் சொல்லமைப்புப் பொருள்.

வினையினின்று விகுதியேற்று அமைதலும் பிறவகையினின்று விகுதிபெற்றமைதலும் கண்டுகொள்க.

 பிழை புகின் பின் திருத்தம்,

ஞாயிறு, 21 ஜூலை, 2019

சூது வாது

சூது,  வாது முதலிய சொற்களை முன்னர் விளக்கியதுண்டு எனினும்  அவை ஈண்டில்லை ஆதலின் மீள்பதிவு செய்வோம்.

சூது என்பது  ஓர் இடைக்குறைச் சொல்.  

சூழ்தல் என்பது ஆலோசித்தல்.  சூது விளையாடும்போது ஆலோசித்தே விளையாடவேண்டும்; இன்றேல் தோல்வியைத் தழுவ நேரிடும்.  ஆதலின் சூழ்தல் என்ற வினையடியாய்ப் பிறந்தது இச்சொல்.

சூழ் + து =  சூழ்து >  ( ழகர ஒற்று வீழ்ந்து )  சூது.

சூழ்ச்சி என்ற சொல்லமைப்பும் காண்க.  சூழ் -  திட்டமிடு.

இவ்வாறு ழகர ஒற்று இடைக்குறைந்த இன்னொரு சொல், எடுத்துக்காட்டு:

வாழ்த்தும் இயம் >  வாழ்த்து இயம் >  வாழ்த்தியம்.

வாழ்த்தியம் >  வாத்தியம்.

வாழ்த்துவது என்பதை முன்னர் படிப்பறியார் வாத்துவது என்பர்.

பிற்காலத்தில் இச்சொல் வாழ்த்தாத இயங்களையும் உட்படுத்தி விரிந்தது.

ஆனால் வாத்து என்ற பறவையின் பெயர்  வாய் என்பதனடிப் பிறந்தது.

வாய் >  வாய்த்து >  வாத்து.   இதில் யகர ஒற்று வீழ்ந்தது.

இதுபோலும் இன்னொன்று:   வாய் > வாய்த்தி > வாத்தி > வாத்தியார்.

வாய்ப்பாடம் சொல்லிக் கொடுப்பவர்.

உப அத்தியாயி > உபாத்தியாயி என்பது வேறு.  குழப்பலாகாது.

வாயினால் பரப்பப்படும் கெடுதல் :  வாய் >  வாய்து >  வாது.

வாயினால் செய்யப்படுவது  வாதம்   :  வாய் >  வா > வாதம்.

வாய்ப்பட்டியை வாப்பட்டி என்பர் சிற்றூரார்.  படிப்பறிவு மிக்க ஊர்களில் இப்போது திருத்திக்கொண்டிருப்பர்.

சூது வாது என்பன இடைக்குறைகள். அறிக.

தட்டச்சுப் பிழைகள் திருத்தம் பின்.

வெள்ளி, 19 ஜூலை, 2019

ரகமா இரகமா ( இரு அகமா)?

ஈண்டு ரகமென்னும் பதத்தை உன்னி உணருவோம்.

ரகமென்பது  ஆங்கிலத்தில் உள்ள "kind"  ( type )  என்ற பொருளில் பயன்பாடு காண்கிறது.

ஒரு பொருளின் தன்மை என்பது அதன் உள்ளுறைவைப் பொறுத்தது ஆகும். தேனில் உள்ளுறைந்திருப்பது அதன் இனிமை. ஒரு குறித்த கருமஞ்சள் நிறத்தில் குழம்புபோல் சற்று இறுக்கமாக இருக்கும் இளகுநிலை. அதிகம் உண்டால் தெவிட்டவும் செய்வது.

உந்து வண்டிக்கு இடும் உயர்தர உருளையெண்ணெய்   ( சிலிண்டர் எண்ணெய்) தேன்போன்ற நிறத்திலும் குழம்பு வடிவிலும் இருந்தாலும் சுவையாலும் நிறத்தாலும் பயன்பாட்டினாலும் வேறுபட்டதே.  அதன் ரகமே வேறு.

இத்தகைய பொருள் உள்ளுறைவினாலே இரகம் ஏற்படுகின்றது.

தன்மையானது பொருளுடன் இயைந்து நிற்பதால் இதனை ரகம் என்றனர்.  அகத்து இருப்பதாகிய தன்மை.

இங்கு அகமென்றது கண்ணால் அறியத்தக்க உள்ளியைபுகளும் கண்காண முடியாத, பிற பொறிகளால் அறியத் தக்கவுமான உள்ளியைபுகளும் ஆம்.

இதைக் குறிக்க எழுந்த இரகம் என்பது எளிமையுடனமைந்த சொல்லே.

இரு அகம் >  இரகம் என்று அமைத்தனர்.

நம்ம பையன் முருகன் ஒரு ரகம்;  அடுத்த ஆத்துக் கிருட்ணன் இன்னொரு ரகம்.

ஆக ரகம் என்பது வகை எனலும் ஆம்.

திராவிட மொழிகள் ஒரு ரகத்தவை;   சீனத் திபேத்திய மொழிகள் வேறு ரகத்தவை.

ரகத்தை உள்ளுறைவால் உள்ளியைபுகளால் அறிக.

அகத்தில் இருக்கும் தன்மை என்பதை மறுதலையாகப் போட்டு இரகம் என்ற சொல் அமைந்தது.

இப்படித் தலைமாற்றாக அமைந்த சொற்கள் பல பழைய இடுகைகளில் விளக்க[ப் பட்டுள்ளன.   அவற்றைப் படித்துத் தமிழுணர்வு மேம்படுத்திக் கொள்வீர். 

7.3.2020 சில தட்டச்சுப்பிறழ்வுகள் சரிசெய்யப்பட்டன.