சனி, 29 ஜூன், 2019

சங்கிலியும் கைலியும்.இவற்றில் இல்லாதவை

பழங்காலத்தில் கழுத்தணியில் பெரும்பாலும்   சங்குகளையே கோத்துப் போட்டுக்கொண்டனர். பின்னர்  சங்குக்குப் பதிலாக பல வடிவங்களில் வேறு துளைத்திரட்சிகள் பயன்படுத்தப்பட்டன.  அதனால் கழுத்தணிகளில் உண்மையான சங்குகள்   இல்லை.  சங்கினை விரும்பியோருக்கு இது ஓர் ஏமாற்றமே.  அவர்கள் காலத்தின்பின் சங்கில்லாத தொங்கணிகள் விரும்பி  ஏற்றுக்கொள்வன ஆயின.  சாமிக்கு வலம்புரிச் சங்கில் நீர் சாத்துதல் இன்னும் நம் பூசைகளில் நடைபெறுவதால் சங்கின் பெருமையும் மகிமையும் உணரலாகும்.  சங்கின் பிற இறைப்பற்றுத் தொடர்புகளும் உண்டு.  சங்கின்மை ஒரு காலத்தவர்க்குக் கவலும் புதுநிகழ்வு. இக்காலத்தவர்க்கு இஃது இல்லை. இவ்வரலாற்றினால் சங்கில்லாத கழுத்துத் தொங்கணிகள்  சங்கிலிகள்  எனப்பட்டன.

பிற்காலத்தில் ஒருவனைக் கயிற்றால் கட்டிவைப்பதைவிட இரும்புச் சங்கிலிகளால் பிணைத்து வைப்பது நடப்புக்கு வந்தது. இது கட்டிப் பூட்டி வைப்பதற்கு எளிதானது.  இக்காலத்திலெல்லாம் சங்கில்லாதது சங்கிலி என்பதை மக்கள் மறந்து அதை வெறும் இடுகுறியாகப் பயன்படுத்தினர்.

மனிதன் மேலே மாட்டிக் கொள்ளும் சட்டைக்குக் கைகள் இருந்தன. அரைக்குப் போர்த்திய கைலிக்கு கையோ இடைப்பட்டையோ பொருத்தப்படவில்லை.  இடைப்பட்டையைத் தனியாகப் போட்டுக்கொண்டனர்.  அல்லது கைலியை இறுக்கிச் சுருட்டி இடையில் நிறுத்தினர்.  கையில்லாத இந்த அரையாடை "கைலி"  எனப்பட்டது.  இதன்
திரிபு:

கை >  கய்  >  கய்+ இலி >  கயிலி (கைலி).

இது  அய்யர் > ஐயர் போன்ற திரிபு..

அறிந்து மகிழ்வீர்.

எழுத்துப் பிழைகளுக்குத் திருத்தம் பின்.

வெள்ளி, 28 ஜூன், 2019

திராவிடர்: புதிய அல்லது சில சொல்லாய்வுகள்.

துலகு என்ற சொல்லில் இறுதிக் குகரம் வினையாக்க விகுதி.  துல என்பதே அடியாகும்.

துலகு என்பதிலிருந்து துலங்கு என்பது அமைந்தது.   அவள் கைபட்டால் எல்லாம் துலங்கும் என்று வரும் வாக்கியத்தைக் கவனிக்கவேண்டும்.

துலகு  என்பதிலிருந்தே திலகு >  திலகம் என்ற சொற்கள் அமைந்தன.  துலங்குவதற்குத் திலகம் அணிதல் வேண்டுமென்பது தமிழர் பண்பாட்டு நம்பிக்கை.  திலகம் என்பதற்கு மற்றொரு சொல்: பொட்டு என்பது.

இதில் நீங்கள்  குறித்துக்கொள்வது   து > தி திரிபு.  இது உகர இகரப் பரிமாற்றத் திரிபின்பாற் படுவதே.

இனித் "திராவிடர்கள்"  ' 'திராவிடம்" என்ற சொற்களைக் கவனிப்போம்.  இவை பலராலும் பலவாறு மூலம் காண முனையப்பட்டவை   . திராவிடம்   சங்க நூல்களில் இல்லாத சொல்.  ஆனால் வழக்கில் இருந்திருக்கக் கூடும்.  வழக்கின் அனைத்தையும் சங்க நூல்கள் கொண்டிருக்கவில்லை.   இப்போது இது சங்கத நூல்களிலிருந்து கிட்டுகின்றது.

ஒரு காலத்தில் தமிழர்கள் அல்லது திராவிடர்கள் துணைக்கண்ட முழுமையும் பரவி இருந்தனர்.   கதை என்னவென்றால் பின்னர் அவர்கள் தென்னாட்டுக்குப்  புலம் பெயர்ந்து  அங்கேயே தங்கிவிட்டனர்.  தென்னாட்டிற்குத் துரத்தப்பட்டனர் என்பது பல கதைகளில் ஒன்று.

துர >  திர > திரவிடன்  (  துரத்தப்பட்ட இடத்தில் இருப்போன்)

ஈங்கு  து என்பது தி என்றானது ஏற்கத்தக்கதே.  ஆனால் திராவிடன் என்ற சொல்லுக்கு இதுதான் சொல்லமைப்பா என்று உறுதிப்படுத்த முடியவில்லை.

சில அறிஞர் பெருமக்கள் வேறு வரலாறு கூறுவர்.   முப்புறமும் கடல்சூழ்ந்த நிலத்திக்குச் சொந்தக்காரர்கள் எனவே

திரி :   மூன்று.
விடு:  விடர். (  இடர்:  இடத்தினர்;   விடர்:  வகர உடம்படுமெய்த் திரிபு.  அல்லது விடப்பட்டோர்.)

திரி என்பதி திர >  திரா என்று திரிந்தது என்ப.

சரிதான்.

விடம்/ இடம் என்பது கடலைக் குறிக்கவேண்டும்; குறிக்கவில்லை.


இதைவிட,   திரை> திர > திரவிடர்:   பொருள்:   கடல் இடம்பெற்ற நாட்டினர்.  இது பரவாயில்லை;  ஆனால் முடிவாகக் கூறுதற்கில்லை.

நமக்குத் தெரியவரும் இவ்வாய்வுகள் தழுவத்தக்கன என்பதற்கு இன்னும் ஆய்வு தேவை.

அறிந்த ஆய்வு முடிவுகள் இங்கு மீண்டும் கூறப்படவில்லை.

திருத்தம் வேண்டின் பின்.

செவ்வாய், 25 ஜூன், 2019

மந்தையும் மன்றமும் - ஆய்வு

மன்றம் என்பது உயர்ந்த அறிவாளிகள் கூட்டத்தைக் குறிக்கும் ஒரு சொல். எடுத்துக்காட்டு:  ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றம் அல்லது அவை.

அவை என்ற சொல் மிக்க எளிதாய் அமைந்த சொல்லென்பதை முன்பு விளக்கியுள்ளோம்.  இச்சொல்லில் வையென்பது வைக்கப்பட்டது, நடைபெறுமாறு நிறுவப்பட்டது என்னும் பொருட்டு.  அங்கு புலவர் கூடுமாறு வைக்கப்பட்டுள்ளது.  அது   " அ ( அங்கு ) +  வை ( நடைபெறுமிடம் )"    எனவே அவை ஆகிறது.  இது மிக்க எளிமையாய் அமைந்ததும் எளிமையாய் விளக்கத்தக்கதுமான ஒரு சொல்.  இதை அமைத்தவர்கள்  அக்கூட்டத்தைச்  சுட்டிக் காட்டுதற்குரிய இடத்திலும் வேலையிலும் இருந்தவர்களே.  எனவே இது புலவர் அமைத்த சொல்லன்று.  அரண்மனைக் காவலர்களோ வழிகாட்டுநரோ அமைத்த சொல்லென்பது கடின சிந்தனை ஏதுமின்றி எளிதில் புரிந்துகொள்ளக்கூடியது ஆகும்.  எல்லாச் சொற்களையும் ஒரு மொழியில் புலவர்களே அமைத்தனர் என்பது மடமைக் கருத்தே என்பதுணர்க.  எங்கும் பொறுக்கி எடுத்த சொற்களே ஆங்காங்கு எல்லா மொழிகளிலும் கிடைகின்றன.  அவை பலவேறு வகை மக்களால் அமைத்துப் புழங்கப் பட்டவை.

அவை என்ற சொல் பின் பல மொழிகட்குச் சென்றிருக்கலாம்.  அது இயல்பு.
சவை சபை சபா என்றும் திரிந்திருக்கலாம்.  உயர்தரச் சொல்லாய் இன்று கருதப்படலாம்.  தொடக்க நிலை வேறு.  அடைவு நிலை வேறு.

மன்றம் என்ற சொல்லோவெனின்,  மன்றுதல் என்னும் வினைச் சொல் அடியாகப் பிறந்தது. புலவர் அமைத்த சொல்லாக இருக்கலாம்.  மன்றுதல் எனின் கூடியிருப்பது;   சேர்ந்திருப்பது என்பது ஆகும்.   ஆணும் பெண்ணும் கூடும் வாழ்க்கைத் தொடக்க விழவுக்கும் மன்றல் என்ற சொல் வருகிறது. இதுவும் மன்று என்பதனடிப் பிறந்ததே.

மன்று என்ற வினையை மன்+ து என்று பிரிக்கவேண்டும்.   மன் து என்பது மன்று என்று புணர்ந்து சொல்லாவது தமிழின் இயற்கைக்கு ஒத்ததே ஆகும்.

மன் து என்ற அடியும் விகுதியும் இணைந்து இரண்டு சொற்களைப் பிறப்பித்தன.

மன் து என்பது புணர்ச்சித் திரிபு எய்தி  மன்று என்று ஆகி மன்றம் ஆனது.

இனி :

மன் து என்பதே  மந்து என்று மேற்கண்டவாறு திரிபு எய்தாமல் விகுதி இன்னொன்று  ஐ என்பதைப் பெற்று மந்தை என்று  ஆனது.

மன் என்பது கூட்டம் குறிக்கும் என்றோம்.  இரண்டும் கூட்டமே.  ஒன்று மனிதர்கள் கூட்டம் ( மன்றம்).  இன்னொன்று:  விலங்குகள் கூட்டம். மன் து ஐ ( மந்தை ).

ஒரே அடிச்சொல்லைக் கொண்டும்  அதே விகுதியைக் கொண்டும் இருவேறு சொற்களை உருவாக்கி உள்ளனர் பண்டைத் தமிழர்.  இறுதிநிலையாக ஒன்றில் அம் இட்டனர்.  இன்னொன்றில் ஐ இட்டனர்.

மொழிக்குச் சொல்லைப் படைப்பதென்றால் இப்படியன்றோ திறம்படப் படைக்கவேண்டும்.

சந்தி விதிகள் என்பவை உரைநடை  செய்யுள் முதலியவற்றுக்குரியவாம். சொல்லாக்கத்திற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.. அந்த விதிகள் வேண்டியாங்கு பயன்படும். பயன்பாடின்றியும் ஒழியும்.  இங்கு விதிகளினும்  சொல்லமை வசதிகளே மேல்வருவன காண்க.

கூட்டம் என்பதே உள்ளுறை பொருளாயினும்  ஒன்று மனிதர்க்கும் இன்னொன்று விலங்குக்கும் ஒதுக்கம் பெறுவது இடுகுறி ஆகும்.