இனி
இனாம் என்ற சொல்லினை ஆய்வு
செய்வோம்.
உலகின்
மிக மூத்த மொழி என்று ஒன்றை
எந்த ஆய்வாளன் கூறினாலும்
அந்த மொழியில் கூட பிற மொழி
வழக்குச் சொற்கள் என்று கருதத்
தக்கவை காணக் கிடைக்கின்றன.
எடுத்துக்காட்டாக,
தமிழர் கார்
என்ற ஆங்கிலச்சொல்லைப்
பேச்சிலும் எழுத்திலும்
பயன்படுத்துகின்றனர்.
தமிழில் கார்
என்ற ஒரு சொல் இருந்தாலும்
அதன் பொருள் வேறு.
இவ்வாறு
கலப்புகள் நேர்ந்துவிட்ட
நிலையில் அகரவரிசைக்காரர்
ஒருவர் அச்சொல்லையும் தம்
நூலில் பதிவுசெய்து பொருள்கூற
முனையலாம். அதன்
காரணமாக அது தமிழ்ச் சொல்
ஆகிவிடுவதில்லை.
அது அயலே.
ஆகவே சொல்லின்
மூலம் யாது என்றுஅறிதல் மிக்க
முன்மையானதாகின்றது.
ஒரு
சொல் எந்த மொழிக்குரியதாய்
இருப்பினும் அது தேவை என்றால்
அதை வழங்கத்தான் வேண்டும்.
ஆனால் அதைச்
சரியாக வழங்குவதற்கும் சொல்
வரலாற்றை அறிந்துகொள்வதற்கும்
சொல் மூலக் கண்டுபிடிப்பு
உறுதுணை செய்கிறது.
எடுத்துக்காட்டாக
முகாம் என்ற சொல்லின் உண்மையான
பொருள் என்ன என்று அறிந்துகொண்டோம்
- சென்ற
இடுகையில். சில
வேளைகளில் சொற்பிறப்புப்
பொருளும் அதன் இற்றை வழக்குப்
பொருளும் வேறுபடுதலையும்
அறிந்து, அச்சொல்லை
வழங்குவதா வேண்டாமா என்று
முடிவுசெய்யவும் இத்தகு
ஆய்வுகள் துணைபுரிகின்றன.
இனி
இனாம் என்ற சொல்லைக்
காண்போம்.
இது
இரு துண்டுச் சொற்களால் ஆனது.
இவற்றுள்
முன்னது : இன்
என்பதாம். ஒட்டி
விகுதியாய் நிற்பது ஆம்
என்பதே.
இன்
என்னும் சொல் உரிமை குறிக்கும்.
இது வேற்றுமை
உருபாகவும் இலங்குகிறது.
எடுத்துக்காட்டுகள்:
கந்தனின்
மனைவி வள்ளி.
தமிழரின்
வீரம் ஒரு மரபு.
இவ்வாக்கியத்தில்
கந்தனின் மனைவி என்பது வள்ளி
அவளுக்கு உரிமையானவள் என்பதைக்
காட்டுகிறது. பிறவும்
அன்ன.
இனம்
என்ற சொல்லும் இன் என்பதனடிப்
பிறந்ததே. நீங்கள்
எந்த மக்கள் கூட்டத்துக்கு
உரிமையானவரோ அந்தக் கூட்டமே
உங்கள் இனம். இன்
+ அம்
= இனம்.
பிச்சை
போட்டவர்கள் பாத்திரம் அறிந்தே
பிச்சை போட்டனர்.
கேட்பவன்
இனாம் வேண்டுமென்றால் அதற்கு
அவன் உரியவனாய் இருத்தல்
வேண்டும். உரியவனுக்கு
விலையின்றிக் கொடுக்கப்பட்டது.
அத்தைக்கு
நெல் கொடுத்தால் எப்படிக்
காசு கேட்பது? அவள்
நம்மைச் சேர்ந்தவள் ஆதலின்
- இனம்
ஆதலின் - இனாமாய்த்
தரப்பட்டது.
இன்
என்ற அடியிலிருந்தே இரு
சொற்களும் தோன்றின.
இன்றும்
சிற்றூரில் "
எனமாய்க்
கொடுத்துவிட்டேன்"
என்றுதன்
பேசுகின்றனர்.
இனாம்
என்பதைப் படித்தவர்கள்
கையாள்கின்றனர்.
அல்லாதருக்கு
இனம் அல்லது எனமே அது.
பெறுதற்கு
இனமல்லார் இனாம் பெறார்.
அறிமுகம்
இல்லாதவராயின் ஏழ்மையினால்
உரிமை பெறுகிறார்.
அதாவது
பெறுதற்கு உரிமை உள்ளவருக்கே
இனாம் வழங்கப்பட்டது.
இனாம் என்பதன்
சொல்லமைப்புப் பொருள்:
இன்=
உரிமை;
ஆம் =
ஆகும்,
என்பதே.
விலையின்றிப்
பெறுவதற்கும் ஒரு தகுதியை
மன்பதையோர் கண்டறிந்திருந்தனர்
என்பதையே இச்சொல் விளக்குகின்றது.
இனிதாய் அமைந்த
சொற்களில் இதுவுமொன்றாகும்.