சனி, 4 மே, 2019

சீக்காது, சீத்தலை, வாத்தியம், சூத்திரம் மற்றும் சீக்காட்டுதல்.

காதில் சீழ் வைக்கும் ஒரு வீக்க நோய் உள்ளது.   தற்கால நடையில் இதற்குக் காது அழற்சி என்று கூறுவர். இதன் பழைய பெயர் : " சீக்காது " என்பது ஆகும்.

இப்பெயரை மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் சீக்கு + ஆது  என்று பிரிவதற்குரிய சொல்போல் தோன்றும்.  அது சரியன்று.  இதனை ஆய்வோம்.

இந்நோயில் காதில் சீழ் வைத்து வீங்கும்.  ஆகவே  சீழ் அல்லது சலம் என்று பொருள் படும் சொல்லும் காது என்ற உறுப்பின் பெயரும் இணைப்புற்று உள்ளது. இணையவே,  சீழ்க்காது என்று ஆகி,    ழகர ஒற்று மறைந்து சீக்காது ஆயிற்று.

இப்படி ழகர ஒற்று மறைந்த இன்னொரு சொல் வேண்டுமெனின்:

வாழ்த்தியம்  >  வாத்தியம் என்பது காண்க.  ழகர ஒற்று மறைந்ததால் இஃது ஒரு திரிசொல் ஆகும்,

இயம்  என்பது பல ஒலிக்கருவிகளுடன் இயங்கும் ஒரு கூட்டம்.  வாழ்த்து என்பது தான் வாத்து ஆகிவிட்டது.   வாத்து என்ற பறவை வேறு.

சூழ்+ திறம் >  சூழ்த்திறம் >  சூத்திறம் >  சூத்திரம் என்பதும் காண்க.

எதையும் ஆலோசித்துத் திறனுடன் செய்தவனே சூத்திரன்.  பண்டைக் குமுகம் கைத்திறன் உடையவனை மதிக்கத் தவறினமையால்  சூழ்ந்து திறம்பட ஒன்றைச் செய்வோன் மதிப்புப் பெறாதொழிந்தான்.  திறமுடன் அமைக்கப்பட்ட நூற்பாவே  சூத்திரம்.  இது உண்மையில் சூழ் திறம் கொண்ட நூலின் பாடல் ஆகும்.

சீக்காட்டுதல் என்ற இன்னொரு சொல்லும் உளது, இதுவும் உண்மையில் சீழ்க் காட்டுதல் தான்,  ழகர ஒற்று மறைந்தது.  சீக்காட்டுதல் என்றால் சீழ் அல்லது சலம் வைத்தல்.

சீத்தலைச் சாத்தனார் என்ற சங்கப் புலவரின் பெயரின் சீத்தலை என்பது  சீழ் பிடித்த தலை என்று பொருள்பாடாமல்  குளித்தலை என்ற ஊர்ப்பெயர் போலும் அமைந்ததே என்று உணரற்பாலது.  சீர்த்தலை >  சீத்தலை.  தலையென்பது இடம்.  சீரமைந்த இடம் என்பது பொருளாகும்.

தலை > தலம்,    இது அம் விகுதி பெற்ற சொல்.

அறிந்து மகிழ்வோம்,

வெள்ளி, 3 மே, 2019

அருள்மிகு துர்க்கையம்மன்




 



அருள்மிகு துர்க்கையம்மன்


பொருளல்ல வற்றைப் பொருளென் றயராதீர்  பூவுலகில்
அருளென்று  தந்தவர்  ஆரு மிலைகாணீர்  அன்னையல்லால்;
இருளென்று வந்திடில் மாற்றி இயற்றுவள் வாழ்க்கைதன்னில்;
உருளென்று துன்பில் உருண்டோர் தமக்கும் விடுதல்தந்தாள்.


இலக்கணம்:

இந்தவகைப் பாடலில் மெய் எழுத்துக்களை நீக்கி எண்ணினால்  அிக்ு 17
எழுத்துக்கள் இருக்கவேண்டும். இதில் தவறினால் வேறுபாடல் ஆகிவிடும்.


வியாழன், 2 மே, 2019

பிடரி

இன்று பிடரி என்ற சொல்லைக் கவனிப்போம்.

இது இரு சொற்களால்   அமைந்த ஒரு கூட்டுச்சொல். அந்த இருசொற்களாவன:  பிடு என்பதும் அரி என்பதுமாம்.

பிடு என்பது ஒரு வினைச்சொல்.  இதன் பொருள் வேறாக்கி எடுப்பது என்பதே.

"கோயிலில் கிட்டிய வடையைப் பிட்டு  அவளுடன் பகிர்ந்துகொண்டேன்" என்ற வாக்கியத்தில் பிட்டு என்ற வினை எச்சம் பிடு என்ற வினையினின்று வந்தது ஆகும்.

பிடு > பிட்டு ;  இது கெடு > கெட்டு,   விடு > விட்டு என்பவை போல.

சில விலங்குகட்குப் பிடரி என்பது உடலினின்று பிட்டுத் தூக்கியது போல எழுந்து நிற்பது ஆகும் . இது கழுத்தின் பின்புறம்.  இவ்வாறு மேலெழுச்சி இல்லாத  விலங்குகட்கும் மனிதனுக்கும் இந்தச் சொல் பயன்பட்டது.  இதற்குக் காரணம் சிறப்புப் பொருளில் அமைவு கண்ட இச்சொல் பிற்காலத்து தன் சிறப்பை இழந்து பொதுப் பொருளில் வழங்கியதே  ஆகும்.

கழுத்து என்பது உடல்போலும் அகலமின்றி அருகிய பகுதியே ஆகும்.  இது நன்றாகத் தோன்றுமாறு  அருகுதல்:   அரு >  அரி ( அரு + இ )   என்ற சொல்லும் இணைக்கப்பட்டது.

பிடு +  அரி =  பிடரி.

பீடம் என்ற சொல்லும் இவ்வாறு ஒரு மேலெழுந்த பகுதியைக் குறிப்பதுவே  ஆகும்,   பிடு+ அம் = பீடம்,  இது முதனிலை திரிந்த தொழிற்பெயர்.  பீடு என்பதும் இவ்வாறு பிட்டெழுந்த நிலையையே குறிக்கும்,