ஞாயிறு, 10 மார்ச், 2019

சொற்சிந்தனைகள். சித்து விளையாட்டும் சித்தரும்.


இந்தியச் சமய வரலாற்றில் இறைப்பற்று மேலீட்டால் ஒழுக்கமுடைய பெரியோர் இருவகையானோர் தோன்றினர். ஒருவகையினர் மிகப் பெரியோர் என்று எண்ணப்பட்டனர். இவர்கள் மாமுனிவர்கள். அண்டமா முனிவர்கள் என்றும் குறிக்கப்பெற்றனர். சங்கதத்தில் மகரிஷிகள் என்றும் தமிழில் பேரிருடிகள் எனவும் சொல்லப்பட்டனர். பிறவிப் பெரியோர் என்றும் சொல்லலாம். “ மக " என்பதும் " மகா" என்பதும் இவர்களுக்கு அடைமொழிகளாய் வந்தன.

இந்த மாமுனிகளுக்குக் கோட்டுக்கு இணைகோடுபோல வேறு இறைப்பற்றுச் சிந்தனையாளர்களும் தோன்றினர். மன்பதையினுள் இல்லறம் நடத்தித் திடீரென்று தோன்றிய உணர்வு வேறுபாட்டினால் அவ்வில் வாழ்வினைக் களைந்தெறிந்து துறவியானவர்கள் இவர்களிற் பெரும்பாலோர். இத்தகையோர் மாமுனிவர்கள் ஆகாவிட்டாலும் சிறுமுனிவர்கள் ஆயினர். இவர்களை மக்கள் அப்படிக் கருதியதால் சிறு என்ற சொல்லினின்றே தோன்றிய சொல்லினால் இவர்கள் சுட்டப்பட்டனர்.

சிறு + அர் = சிற்றர் > சித்தர்.

இவர்கள் மாமுனிவர்கள் போல் பெருந்தவம் இயற்றாமல் அவ்வப்போது அறிவுரைகளை நடப்பிற்கேற்பவே உதிர்த்தனர். இவை " சிந்தனை" எனப்பட்டன. இதுவும் சிறு என்பதனுடன் தொடர்புடைய அடிச்சொல்லாகிய சிந்து என்பதிலிருந்து பிறந்ததே.

சில் = சிறியது.
இதற்கு எதிர்ச்சொல் பல் என்பது.

சில் > சில; பல் > பல.
சில் என்பது உருவிற் சிறியதும் எண்ணிக்கையிற் சிறியதும் என இருவேறு விதமானவை.

இவர்கள் வியக்கும்படியான சில சொன்னோராவார்.

சில் > சின் > சிந்து. ( லகர 0னகரப் போலி )
சில்+து > சிற்று > சித்து ( திரிபு ) > சிந்து ( மெலித்தல் விகாரம்).

இவை இருபிறப்பிகள்.

சிந்து > சிந்தி > சிந்தித்தல் ( வினையாக்கம் ).
சிந்தி + அன் + = சிந்தனை. அன்: சொல்லாக்க இடைநிலை. : விகுதி.

அவ்வப்போது நிகழ்வுக்கு ஏற்ப எண்ணிச் சொல்லுதல்: சிந்தனை. சிறு சிறு மன உணர்வு வெளிப்பாடுகள்.

இப்போது இது (சிந்தனை ) தன் சிறுமைப் பொருள் இழந்துவிட்டது.

இந்தச் சிற்றர்கள் (சித்தர்கள் ) செய்த வியக்கத் தக்க செயல்கள்: கசக்கும் கரும்பை இனிக்கச் செய்வது; வாழைமட்டையில் நெருப்பு எரியவைப்பது போலும் செயல்கள்: ----- வியன்செயல்கள் ----- சித்துகள் என்றே சொல்லப்பட்டன. சிறிது நேரத்தில் கண்டு வியந்து போற்றத்தக்கவை இவையாம்.

தன்வினை தன்னைச் சுடும்
ஓட்டப்பம் வீட்டைச் சுடும்

என்று கூறிய மாத்திரத்தில் கூரைமேலெறிந்த அப்பம் தீப்பற்றி எரிகிறது. இதுவும் சித்து ஆகும். ஊர்மக்கள் இவை போல்வன சித்துவிளையாட்டு என்றனர்.

நந்த வனத்திலோர் ஆண்டி --- அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந்தானொரு தோண்டி --- அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.

தோண்டி: தோண்டப்பட்டது போன்ற உள் குடைவான மண்பானை.

சொல்லமைப்பு முறையில் சித்தர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்பதே விளக்கம். பின் வழக்கில் அது வேறு பொருள் எல்லைகளைத் தாண்டிச் செல்லவும் கூடும்.

சிந்து: அளவடி யல்லாத சிறிய கவி.

அறிந்து மகிழ்க.

பிழைபுகின் திருத்தம் பின்.

சனி, 9 மார்ச், 2019

மக்கள் கண்டுபிடித்த இலக்கண அமைதிகள்.

இன்று ஓர் அன்பருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். நான் அவரைக் கேட்டது:  சாமி! எப்படி இருக்கீங்க?  என்பதுதான்,

பேச்சுத் தமிழிலும் ஒரு கவர்ச்சி இருக்கிறதன்றோ?

செந்தமிழ்:   எப்படி இருக்கிறீர்கள்?
பேச்சுத்தமிழ்:  எப்படி இருக்கீங்க?

இது ஒரு சுருக்கமாகவே தெரிகிறது.  தொகுத்தல் என்றாலும் இடைக்குறை என்றாலும் சுருக்கம்தான்.

இரு :  பகுதி.
க்:         சொற்பகுதி புணர்வில் வலி மிகுதல்.
கிறீர்கள் >  கீங்க.

இதைக் கூர்ந்து நோக்கினால் கிறீர்கள் என்பது கீங்க என்று உருமாறியது பெரிய மாற்றம்தான்.

கிறீர்கள் >  கி  ( றீர் ) க ( ள் )  >  கீக >  கீங்க.

ளகர ஒற்றுக் கெட்டது.  கள்  >  க ஆனது.

(க் +  இ )  + ( ற்  + ஈர் )  என்பவற்றிலே பெரிய மாற்றம்.

இவற்றில்  க் + ஈ இரண்டும்  இணைந்து  கீ  என்று மாறி ,   மற்ற இ, ற், ர் ஆகியவை வீழ்ந்தன.

கீ என்பது க என்ற இறுதியைச் சந்திக்க   கீக என்பது ஒரு ஙகர ஒற்றுப்பெற்றது,
ஆக கீங்க ஆனது.

ரகர ஒற்று பெரும்பாலான திரிபுகளில் ஒழிந்துவிடும்.  இங்கும் தொலைந்தது.

வருவார்கள் என்பது வருவாக என்னும் போது  ரகர ஒற்று ( ர் )  ஒழிந்தது. ளகர ஒற்றும் ஒழிந்தது.

ளகர ஒற்று மறைவது தேள்வை என்பதில் தேவை என்ற மாற்றம் ஏற்படுகையில் கண்டுகொள்க.

செய்தீக வந்தீக என்பனவும் உள்ளன. இவற்றில் ர், ள் தொலைதல்.

இடைக்குறை தொகுத்தல் முதலியவற்றைக் கண்டுபிடித்தவர்கள் மக்களே.
புலவர்கள் அல்லர் என்று அடித்துச் சொல்லலாம்.  ஆனால் தமிழிலக்கணம் இவற்றை ஏற்றுக்கொண்டுள்ளது,

திருத்தம் பின்
ஒரு பிழை திருத்தம் பெற்றது.


 

வக்கரம் வக்கிரம்

வக்கரித்தல்

வக்கரித்தல் என்ற சொல் பேச்சு வழக்கில் உள்ளதா என்று தெரியவில்லை. எங்காவது வழங்கிக்கொண்டிருக்கக் கூடும். அதன் பேச்சுவழக்கு சுருங்கிவிட்டது என்பது சரியாகவிருக்கும்.
ஆனால் அது சோதிடத்தில் (கணியக் கலையில்) வழக்குப் பெற்றுள்ளது.  சனிக்கோள் வக்கிரமாய் உள்ளது என்று சோதிடர்கள் சொல்வர்.  வக்கிரம் யாதென்று அறிவோம்.
ஒவ்வொரு கோளும்  ஒரு குறிப்பிட்ட கால அளவு ஓர் இராசி வீட்டில் தங்கும். பின் அது அடுத்த இராசி வீட்டுக்குப் போய்விடும்.  இப்படிப் போன கோள்  மீண்டும் வந்து விட்டுப்போன வீட்டில் தங்கினால் அதற்கு வக்கரித்தல் என்பர்.
வக்கரித்தலாவது திரும்பி வந்திருத்தல். வக்கரித்தல் முடிந்த பின்பு அக்கோள் மீண்டும் போய்விடும். இஃது இயற்கை நிகழ்வை ஒட்டியே சோதிடத்தில் கூறப்படுகிறது.
இச்சொல் எப்படி அமைந்தது என்பதைக் கூறுவோம்:
வரு+ கு +  அரு + இ + தல்
=வருக்கரித்தல்
=வக்கரித்தல்.
இதில் கவனிக்க வேண்டியவை:
வரு என்பது வ என்று திரியும்.    வருவான் (  எ.கா)  :  வந்தான் ( இ.கா). ரு என்னும் எழுத்து கெடும் அல்லது வீழும்.
கு என்பது சேர்விடம் குறிக்கும் இடைநிலை. இது தமிழில் ஒரு வேற்றுமை உருபுமாகும்.
அரு என்பது அருகு என்பதன் அடிச்சொல்.  அருகில்  என்ற சொல்லை நினைவு கூர்க.   அரு> அரி.   அருகில் வரல்,
 நெருங்குதல். 
ஒன்றன் அருகில் சென்று இழுத்து எடுத்தலும் அரித்தல் எனப்படும்.  செடிகொடிகளை அரித்தெடுத்தல் போல.
இங்கு அது அருகில்வரல் என்ற பொருளில் வருகிறது,
ஆகவே இதன் பொருள்  வந்து நெருங்குதல்.  அதாவது திரும்பிவந்து நெருங்குதல்.
இனி வக்கரி + அம் =  வக்கரம்.  இகரம் வினையாக்க விகுதி, கெட்டது.  அம் விகுதி புணர்த்தப்பட்டது. இது பின் வக்கிரம் என்று திரிந்தது.
சனி முதலியவை திரும்ப வந்து தொல்லை தருமாதலால் அரித்தல் என்ற வழக்குச் சொல்லாகக் கொண்டு பொருள் கூறினும் பொருந்துவதே.
வக்கரம்  என்பது பிற்காலத்து வக்ரம் என்றும் எழுதப்பெற்றது.  இது அயல் சென்றதால் ஏற்பட்ட ஒலித்திரிபு. பின் தமிழுக்குத் திரும்பி வந்த நிலையில் வக்ரம் > வக்கிரம் என்று இகரம் புகுந்து மாறிற்று.
வக்கரம் என்ற ஆதி அமைப்புச் சொல் வழக்கொழிந்தது .
இச்சொல்லுக்கு அடியாய் நின்றது வரு > வ என்பதே ஆகும்,

திருத்தம் பின்பு