ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

டகர ரகரத் திரிபுகள்

பல இடுகைகளில் டகரம் ரகரமாகவும் இம்முறை மறுதலையாகவும் வருமென்பதைக்  கண்டு உணர்ந்திருக்கலாம்.

எடுத்துக்காட்டுகள்:

மடி > மரி.

இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான்.

அவன்  மடிந்தான்.
 அவன்  மரித்தான்.

மரித்தவர் உயிர்த்தெழுந்தார்.

இறந்தாருடன் பற்றுதல் ஏதுமில்லாத போது மடிந்தார் எனல் ஏற்புடையது.

அவர்பால் பற்றுதல்  இருந்தால்  மரித்தார் என்பதே நன்று.  மற்றும் நடுநிலையான சூழ்நிலைகளில் மரித்தார் என்பதே நன்று.


மேலும் டகர ரகரத் திரிபு:

குடம்பை -   குரம்பை.

" குடம்பை தனித்தொழிய ........"

"மாயக் குரம்பை "  என்பன காண்க.

குடம்பையாவது உள்ளீடுகளை மேற்போர்த்தியிருப்பது. :  அங்கம்.

பலலுறுப்புகள் அடங்கியது அங்கம்.    அடங்கு >  அ(ட)ங்கம் >  அங்கம் . இடைக்குறை.

குடம்பையும் ஏறத்தாழ அப்பொருளினதே.

உட்டுளை (   உள் துளை)  -   உள்வளைவு , உள்வழியுடைமை )

குடு > குடை
குடு>  குடைவு
குடவு என்றும் சொல்வர்.

குடு > குடம்.  குடம்> கடம்


குடு -   குடல்.  ( உணவை உள்வைத்து சத்துகளை உறிஞ்சும் உறுப்பு)
குடல் >  குடர்    ல -  ர  போலி.
குடு -   குடலை.  ( கடலை போலும் பொருளை உள்வைக்க உதவும்  கூடு)
குடு -   குடம்பை. ( உறுப்புகளை உள் வைத்திருப்பது).
குடு -   குடும்பம். (  ஆடவர் பெண்டிர் பிள்ளைகளை உள்வைத்திருப்பதாகிய சேர்க்கை )

இவை இத்தகு திரிபுகளில் சில.

ஏனை மொழிகளில்:

சோப்டா > சோப்ரா.
ஒடிசா > ஒரிஸா.

பிழைகள் காணின் அல்லது புகின் பின் திருத்தம் பெறும்.

சனி, 2 பிப்ரவரி, 2019

சங்கட ஹற சதுர்த்தியும் தமிழ்த் தொடரும்.

எல்லோருடைய வாழ்க்கையிலும்  செயல் தடைகள் தாமதங்கள் ஏற்படுகின்றன.  தடை என்பது  நாம் முன்செல்வதைத் தடுப்பது போன்ற நிகழ்வுத் தடைகள்.  தாமதமென்பது:

தாழ்  + மதி +  அம் =  தாழ்மதம் >  தாமதம்.

பத்து நாட்களில் முற்றுப் பெற்றுவிடும் ஒரு செயல் திட்டத்தை ஐந்து நாட்களில் முடிப்பதாக நீங்கள் வாக்குறுதி கொடுத்தீர்கள்.   ஆனால் ஐந்து நாளில் முடியவில்லை.  ஆறு ஏழு என்று நீண்டு செல்கிறது.  இது நீள்வதற்குக் காரணம் குறைத்து மதிப்பட்டதுதான் என்று நமது முன்னோர் கண்டுபிடித்தனர்.  அது உங்களுக்குக் கால நீட்டிப்பு என்றாலும் அடுத்த குழுவினர்க்குத் தாமதம் தான்.  இந்தத் திட்டத்தில் ஐந்து நாட்களில் பயனை எதிர்பார்த்து  அது முடியாமல் பத்து நாள்வரைகூடக் காத்திருக்கவேண்டியுள்ளதே.   அது தாழ்மதிப்பீட்டினால் வந்த தாழ்மதம் > தாமதம்.

இங்கு மதம் என்பது மதி + அம் = மதம்.. இதேபோல் அமைந்த இன்னொரு சொல்: பதி + அம் =  பதம்.  அம் என்பதுபோலும் விகுதி வர,  சொல்லிறுதியில் நின்ற உயிர்கள் கெடும்.   எ-டு:  அறு + அம் =  அறம் (  அறம் பொருள் இன்பம் ).
இகரம் இறுதி கெடும்; உகரம் இறுதியும் கெடும்  -  அம் அல்லது உயிர்முதலாகிய எந்த விகுதி வரினும்.

தடை தாமதம் முதலியவை கடந்து செல்லற்குரியவை; கடினமானவை.  ஆகவே  இவை கடங்கள்.  வெம்மை மிக்கக் கடின வழிகளையுடைய மலை வேங்கட மலை.   வேகும் > வேம்;    கடு + அம் =  கடம்.   கடமாவது கடினமானது;  கடத்தற்குரியது.   கட + அம் =  கடம்  எனவும் ஆகும்.  முதனிலைச் சொல்லீற்று உகர அகரங்கள் கெடும்,  உயிர் வரின்.

தனக்கு வந்த கடின நிலையே கடம்;  மற்றவனுக்கு வருவது அவனுக்குக் கடம்.  ஆகவே ஒவ்வொருவரும்  தம் கடத்தை நினைந்தே துயர் கொள்வர் அல்லது  தாண்டிச் செல்ல முயல்வர்.

தம் கடம் > சம் கடம் >  சங்கடம்.   ( தகரம்   சகரமாகும் ).




இதுபோலும் த > ச திரிபுகள் முன்னர் விளக்கப்பட்டன:

தனி >  சனி.  ( சனிக் கோள் )
தங்கு > சங்கு   ( ஓட்டினுள் வாழும் உயிரி )
தங்கு >  சங்கு > சங்கம்.

த + தி >  தத்தி > சத்தி >   சக்தி.    தன் > த:  கடைக்குறை.  தி: விகுதி.

இனிச் சங்கட ஹர சதுர்த்தி என்பதில்  ஹர என்பது:

அற > ஹர.

தங்கடம் அறுபடச் செய்யும் பூசை அதாவது சங்கடம் அறச் செய்யும் பூசை.  


கடு + அம் =  கட்டம்  ( கடின நிலை).
கட்டு + அம் = கட்டம்.  குறுக்கு நெடுக்காக கோடுகளால் அமைந்த வரைவு.
நிலை.  டகரம் இரட்டித்தது.

கட + அம் =  கடம் (  கடத்தற்குரிய இடம் அல்லது நிலை ).

கடம்  > கஷ்டம் ( மெருகூட்டல்)
கட்டம் > கஷ்டம் ( மெருகூட்டல் ).

கஷ்டம் என்பதில்  ஷ் என்பது அயல் ஒலி. அதை விலக்க:

கஷ்டம் >  க(ஷ்)டம் > கடம்.  ( சொல் பழைய நிலைக்கு வந்துவிட்டது).

தமிழிலிருந்து அமைந்த வடசொற்கிளவி  கஷ்டம்.
வடவெழுத்து ஒரீஇ  :  ஒருவி;  அதாவது விலக்கி:
பழைய கடம்  என வந்துவிட்டது.

கடு  கட என்ற அடிச்சொற்கள் இந்தோ ஐரோப்பியச் சொற்கள் அல்ல.

பின் தோற்றப் பிழைகள் திருத்தம் பெறும்.



பிரித்தியங்கரா தேவி

பிரித்தியங்கரா தேவி

பிரித்தியங்கரா தேவி என்ற  பெயர் எவ்வாறு அமைந்தது? இதனை  நாடுவோம்!

 பிரித்தியங்கரா தேவி என்பதை பிரித்து+ இயங்க + அறா+ தேவி என்று பிரிக்கவும்.

இத் தொடர்மொழிப் பெயரில், பிரித்து என்பது உண்மையில் பிரிந்து என்பதன் வலித்தல் ஆகும்.  வலித்தல் எனின் "ந்து" என்பது "த்து"  என்று வல்லெழுத்துப் பெற்றது என்பதாகும். இது புதியதன்று. விகுதி சேரும்போது வலித்தல் போன்றதே இது. வருந்து > வருத்தம், பொருந்து> பொருத்தம் முதலியன உங்களுக்குத் தெரிந்த எடுத்துக்காட்டுக்கள்.

பெருமானிடமிருந்து பிரிந்து என்று பொருள்கூறாமல், பெருமானிடமிருந்து தன்னைப் பிரித்து, அல்லது பிரித்துக்கொண்டு என்னின், இதன்பொருள் இன்னும் எளிதாகிவிடும்.

பிரிந்த பின், அல்லது பிரித்துக்கொண்ட பின், இயங்க = தனித்து அமர்ந்து அருள்பாலிக்க, அறா = அறாத, தேவி = தெய்வம் என்பது பொருள்.

தனித்து அவள் நிற்க, பற்றாளன் அவளைத் தாழ்ந்து பணிந்தாலும், அவனுக்குப்  பெருமானின் அருளும் தானே வந்துறும் என்பது தெளிவாகும்படி "அறா" என்ற பதம் உள்பதியப் பட்டுள்ளது கண்டு இன்புறலாம்.  இது பின் பெயரில் "அரா" என்று மாறியுள்ளது.

இயங்க அறா > இயங்கறா:  இங்கு ஓர் அகரம் கெட்டது.

வீறு என்பது அம் விகுதி பெற்று வீரம் என்று திரிந்துள்ளது நோக்குக.
விறுவிறு என்று போனான். விர்ரென்று போனான் என்ற வழக்குகளை நோக்குக. ரகர றகர எழுத்துமாற்றங்கள் தமிழுக்குப் புதியவை அல்ல.