செவ்வாய், 22 ஜனவரி, 2019

இல்லமொழி தமிழ்


வீதம் என்ற சொல்லைச் சிந்திப்போம்.

தமிழ் அதன் தொடக்க காலத்தில் பல குழுக்களால்பேசப்பட்டு வந்த மொழி என்றே ஒரு வரலாற்றாசிரியன் முடிவுக்கு வரவேண்டும். அந்த முடிவுக்கு அவன் வராமல் ஏதேனும் கூறுவானாகில் அவன் தேர்வில் பட்டங்கள் பெற்றிருக்கலாம்வேறுமொழிகளைக் கற்றிருக்கலாம், அவனுக்குத் தமிழ் வரலாறு  சரியாகத் தெரியவில்லை என்றுதான் பொருள்.

தமிழ் மொழியில் திரிபுச் சொற்கள் மிக்கிருந்தன என்பதே உண்மை. இதனாலன்றோ தொல்காப்பியனார் தம் சொல்லதிகாரத்தில் இயற்சொற்களுக்கு அடுத்தபடியாகத் திரிசொற்களைச் சொல்லுகிறார். அதற்கடுத்த நிலையையே வடசொல் என்று தமிழ் நாட்டு மரத்தடிகளில் வழங்கிய சொற்களைக் கூறுகிறார். வடம் என்பதற்கு உள்ள அர்த்தங்களைக் காணின் இது தெற்றெனப் புலப்படும். தொடார்பற்று வடக்குத் திசையில் வாழ்ந்த மக்களை அவர் குறிப்பிட்டார் என்று சொல்வதற்கில்லை.

தமிழ் என்பதற்குப் பற்பல சொல்மூலங்களை அறிஞர்கள் கூறியுள்ளனர். ஒரு நூற்றுக்கு மேற்பட்டவை கிட்டலாம். தமிழ் என்பது தனித்து நிற்கும் மொழி என்று கூறுவதும் உண்டு. இதற்குக் காரணம் : தமி என்பது தனி என்ற பொருளுடையதாக இருப்பதுதான். தன் என்பதிற் பிறந்த தனி என்று சிந்திப்பதைவிட தம் என்ற பன்மை வடிவிற் பிறந்த தமி என்றுதான் சிந்திக்கவேண்டும். தமி என்று எடுத்துக்கொண்டால் பன்மை வடிவானமையால் பல குழுக்களால் பேசப்பட்டு வந்த மொழி என்று கொள்ளுதல் வேண்டும். அதுவும் இக்குழுக்கள் தங்கள் இல்லத்தில் பேசிய மொழியாதல் வேண்டும். இப்படிச் சிந்தித்த கமில் சுவலபெல்லும் தேவநேயப் பாவாணரும் இதைத் தம் இல் மொழி என்று கூறினார்கள். தமில் ( தம் + இல் ) என்பதே தமிழ் என்று திருத்தமுற்றது என்'கின்றனர். இது உண்மையானால் இல்ல மொழியுடன் இல்லத்துக்கு வெளியில் வேறு மொழியும் வழங்கி வந்ததென்று பெறப்படும். அது அல்லது அவை எந்த மொழி(கள் ) என்று தெரியவில்லை, தம் என்று பன்மை வடிவிலிருந்து சொல் தோன்றியிருப்பதால் பல குழுக்களின் மொழி என்பது தானே பெறப்படுவதுடன், அவற்றுள் திரிபுகள் இருந்தன என்பதும் பெறப்படும். ஆகவே தொல்காப்பியர் திரிசொற்களை அடுத்துக் கூறியது ஏனென்பதுவும் பெறப்படும். இல்ல மொழி என்றாலே வேறுமொழிகளும் நடமாடின என்று பொருள்கொள்ள வழிவந்துவிடும்.

இதனாற்றான் விழுக்காடு குறிக்கும் வீதம் என்ற சொல் பலவாறு திரிந்தும் ஓர்முடிபு கொள்கின்றது என்பது நம் சிந்தனைக்குள் வருவதை அகற்ற முடியவில்லை. இன்னும் எண்ணிறந்த சொற்களும் இப்படியே ஆகும்.


கெடார் நாத் நகரும் கோவிலும்

கெடார்நாத் என்பது இந்தியாவில் உத்தரகாண்ட மாநிலத்தில் உள்ள ஒரு மலை நகரம் ஆகும்.  இங்குத்தான் கெடார்நாதன் கோவில் உள்ளதென்பது நீங்கள் அறிந்ததே.  இந்தக் கோவிலுக்கு யாம் சென்றதில்லை என்றாலும் சென்றுவந்த ஒரு பற்றரான நண்பரிடம் அக்கோவிலைப்பற்றிக் கேட்டறிந்திருக்கிறேன்.   தமிழ் நூல்கள்: "கற்றிலனாயினும்  கேட்க"  என்று சொல்கின்றபடியினால் போய் அறியாவிட்டாலும் இந்த சிவத்தலத்தை அறிந்துகொண்டதில்  மிக்க மகிழ்ச்சியே  ஆகும்.

கெடார் என்பது  பயிர்விளையும் நிலம் என்று பொருள்படும் என்று  கூறுகிறார்கள்.  ஆன்மிகப் பயிரை வளர்க்குமிடம் என்று இதற்குப் பொருள் கூறுவர்.  கெடார என்ற சங்கதச் சொல்லைச்  சுட்டிக்காட்டுவர்.  இச்சொல் சமத்கிருதத்துக்கு முந்திய பாகத ( பிராகிருத ) மொழிகளிலும் இருந்திருக்கவேண்டும்.  ஏனென்றால்  பாகதங்களிலிருந்தே சங்கதம்  திருத்தி அமைக்கப்பட்ட  மொழி ஆகும்.

2013ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த நகர் அழிந்து பல்லாயிரவர் மாண்டுவிட்டாலும்,  கோவில் மட்டும் அழிவின்றித் தப்பியது ஒரு வியப்பே ஆகும்.  இங்கு மந்தாகினி என்ற ஓர்   ஆறு ஓடுகிறது.  குளிர்காலத்தில் இங்கு வாழ்வோர் வேறிடங்களுக்கு  இடம்பெயர்ந்துவிடுவர்  என்று அறிகிறோம்.

கேட்டறிந்த செய்திகளைக் கொண்டு யாம் ஒரு கவிதை எழுதி வெளியிட்டோம்.  12 வரிகள் உள்ள அந்தக் கவிதையில் நான்'கு வரிகளே இப்போது நினைவில் உள்ளன.  பிற அழிந்தன.

இந்த சிவத்தலத்தைப் பற்றிய அந்த நான்'கு வரிகள் வருமாறு:

ஆதிசங்கரர் அமைகல் உடையது  கெடார்    நாத--நகர்;
ஓதி எங்கணும் பரந்தஒளிச்சிவம்   விடார்     மூத--றிஞர்
யாது வந்து  மந்தாகினி கரைப்புனல் அடாக்   கீழு---தலால்
மோதிச் சாயவும் முனைவர் அரன்'தனை    தொழார்  அமைந்திலரே

திங்கள், 21 ஜனவரி, 2019

இன்னொரு கணினியால் வரைந்த பாடல்.....

வழுக்கினுள்ளே  வைத்துவிட்டோம் வழக்கம் போலே
வண்டமிழில் இடுகைகளை எழுதும் கோலாய்
இழுக்கமிலாச் சேவைபுரி  கணினி  தானும்
எம்முன்னே  காட்டியதே வெண் தி   ரையே.
முழுக்கவதன் உள்சென்று  ஆய்ந்த போதும்
முயற்சியது பலிக்கவிலை மூளி யாமே.
இழுக்கவர மாட்டாத மாட்டைப் போலே
இன்னல்தந்த தாலிதுவே  இன்னொன் றம்மா.

சிலமணி நேரம் இணையத் தொடர்பும் கிட்டவில்லை. இனி
நல்ல நேரம்.....