சனி, 1 டிசம்பர், 2018

ளகர ணகரத் திரிபும் அடிச்சொற்களும்.

ளகர ஒற்றில்  ("ள்") முடிந்த சொற்கள் சில "ண"  (ணகர ஒற்றாக) மாறுவதைக் கண்டுகொள்க.   உதாரணம்: 1

ஆள் >   ஆண்.

(  இந்த  "ஆள் " என்னும் சொல் விகுதியாகப் பெண்களுக்கு முதலில் பயன்பட்டது.  எ-டு:  வந்தாள்( வினைமுற்றில்).    கண்ணாள் ( பெயர்ச்சொல் நீட்சி ).

ஆள் என்பதிலிருந்து திரிந்த  ஆண் என்ற சொல் பின் ஆடவருக்கு  உரிய ஒரு
பெயர்ச்சொல் ஆனது.

ஆள் என்பதை நோக்க ஆண் என்பது பிந்துவடிவம் ஆதலின்,  பெண்கள் மேலாண்மை  முன் நடைபெற்றது.  பின்னரே  அது திரிந்து ஆண்களுக்கு உரிய பொதுப்பெயர் ஆனது.  ஆணாட்சி ஏற்பட்டது.

ளகர ணகரத் திரிபுகள்:

வள் > வண்.

துணிகள் புதியனவாய் இருக்கையில் வளமாய் இருக்கும்.  உறுதியுடையதாயும் நல்ல நிறமுடையதாகவும் இருப்பதுடன் கண்டோர் புதியவை என்னும்படியாக இருக்கும்.  துணிகள் பயன்படுத்தப் பட்டபின் பழையனவாய்த் தெரியுமாதலின், அவற்றினை மீண்டும் வளப்படுத்தவேண்டும்.இதைச் செய்வோன் வண்ணான் என்னும் சலவைத் தொழிலாளி.  சலசல என்று ஓடும் ஓடை ---ஆற்று நீருள்ள இடங்களில் அவன் துணிகளைத் துவைத்து  (தோய்த்து )  வளப்படுத்தினான் -    வண்ணப்படுத்தினான்.

வள் > வளம்.   வள் > வண்.   வண் > வண்ணம்.

வண் + ஆன் =  வண்ணான்.   வண்ணமூட்டுவோன்.

வண்ணான் என்பதில் சாதி எதுவுமில்லை.  வண்ணம் தந்தவன் வண்ணான். சொல்லுக்குள் நுழைந்து பார்த்தால் சாதி இருக்காது.  சாதி என்பது சுற்றுச்சார்புகளால் தோன்றியது ஆகும். அந்தச் சுற்றுச்சார்பின்  மேடையில் அரசனுமிருந்தான்.

சலசல நீரில் இவன் (வண்ணான் )  செயல்பட்டதால்:  " சலவை";  இதைச் செய்தோன் சலவைத் தொழிலன்.


தூய்மை, உறுதி, பளபளப்பு இவை காணக்கிடைக்கவேண்டும். துணிகளை மீண்டும் இவன் வண்ணம் பெறுவிக்கவேண்டும்.

யாம் இங்கு கூறவந்ததை மறத்தலாகாது.   வள் என்ற ளகர ஒற்றிறுதி ணகர ஒற்றிறுதியானது.   ஆள் > ஆண் என்பதுபோல.

ஒன்றை உட்கொள்ளுதலைக் குறிக்க ஏற்பட்ட சொல்  உண் என்பது.  சோற்றை வாய்வழி உட்கொள்வது இயல்பு. இப்போது சில நோயாளிமாருக்குக் குழாய்மூலம் வயிற்றுக்குள் மென்னீருணவு செலுத்தப்படுகிறது, எப்படியாயினும் :

உள் > உண் என்று ளகர ஒற்றுச்சொல் திரிந்தமைந்து  தொடர்புடைய மற்றொரு செயலைக் குறித்தது. வேறுபாடு சிறிது.   உள் என்ற சொல்லாலும் உண் என்பதைக் குறிக்கலாமேனும்  கொள் என்ற துணைவினை தேவைப்படும்.

உள் > உண்.

பள் > பண்.  ( பள்ளு பாடுவோமே).

விள் என்பது வெளிப்படுதல் குறிக்கும் சொல்.  விள்ளுதல்: வாய்ச்சொல் வெளிப்பாடு.   விள் > விண்.  இறைவனிலிருந்து அல்லது  இயற்கை ஆற்றலிலிருந்து   வெளிப்பட்டது விண்.( ஆகாயம் ).

இவ்வாறெல்லாம் சொற்கள் திரிபுற வில்லையெனில் பல திராவிட மொழிகள் ஏற்படக் காரணம் யாதுமிருந்திருக்காது.

சொற்புணர்ச்சியிலும் ளகர ஒற்று ணகர ஒற்றாக மாறுவதுண்டு:

தெள் + நீர் =  தெண்ணீர்  (தெளிந்த நீர் ) .  தண் நீர் > தண்ணீர் வேறு.





அடிக்குறிப்புகள்


1.  உது + ஆர் + அண் + அம் :  உதாரணம்:    உது : சுட்டுச்சொல். பொருள்: முன் நிற்பது.    ஆர்தல்:  நிறைவு.   அண்:  அண்முதல். நெருங்குதல்.  அம் : விகுதி.
ஒரு பொருளின் முன்னிலையில்  இன்னொரு பொருள் நிறைவாகவும் நெருங்கியும் நிற்பது.   இதை அமைத்தவன் ஒரு தமிழ்ப்புலமை பெற்றவனாக இருக்கவேண்டும்.   அடிச்சொற்கள் மூன்றை அடுக்கி அமைத்துள்ளான்.

பிழை திருத்த இப்போது நேரமில்லை.
பின் செய்வோம்.

வெள்ளி, 30 நவம்பர், 2018

பரத்தையும் பரையனும் சடங்குகளும்.


https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_28.html  இதன் தொடர்ச்சி:

பர என்ற சொல்லை ஆய்ந்துகொண்டிருந்தோம். இதை நாம் தொடர்வோம்.

பரத்தை என்ற சொல்லினை நோக்கின் அதுவும் பரத்தல் ( அதாவது பல இடங்களிலும் உளதாதல் )  என்னும் சொல்லினின்றே வந்திருத்தலை உணரலாம்.  அதாவது ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு இல்லாளாக வாழாமல் யார்மாட்டும் தொடர்பு வைத்துக்கொள்பவளாகப் பரந்து ஒழுகுபவள் என்ற பொருளுடையது என்பது தெற்றெனத் தெரியக்கூடியதாகிறது. இது பரமனடி பணிந்தோர் என்ற பொருளில் எங்கும் பயன்படவில்லை ஆதலின் தேவரடியாள் என்ற பதத்தினும் வேறுபட்ட வரலாற்றினை உடையது என்பதும் புலனாகும்.

இனிப் பறையன் எனப்பட்ட  பரையன் என்ற சொல்லும் பரத்தல் என்ற சொல்லினின்றே பிறந்தது என்பதும் பொருத்தமுடையதே. இதற்கான காரணங்களை ஆராய்வோம்.  மனிதனுக்குக் கடவுள் நம்பிக்கை பிறந்ததற்கே காரணம் மரணம்தான்.   ஆதிமனிதனால் மரணத்தையும் அதன் தன்மையையும் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலவில்லை.  அதை வெல்லவும் இயலவில்லை. ஆகையினால் சாவைப் பற்றி விளக்குவன எழுத்தில் உள்ளனவும் கருத்தில் மட்டும் உள்ளனவும் என அனைத்திலும் கண்ட உண்மைகளை அவன் "சாத்திரம்" என்றான்.  இது உண்மையில் "சாவின் திறத்தை உரைப்பவை" என்று பொருள்படுந்  தொடரிலிருந்து எழுந்த சொல்லாட்சி.  சாத்திறம் என்பது "சாத்திரம்" ஆனது.   முற்காலத்தில் ரகர றகர வேறுபாடின்று மொழியில் பல சொற்கள் வலம்வந்தன.இன்றும் சில உள்ளன. மொழி நன்'கு வளர்ச்சி அடைந்த பின்னரே இவற்றுள் வேறுபாடு காணப்பட்டது.  மேலும் றகரம் என்பது இரண்டு ரகரங்கள் இணைந்த ஓர் எழுத்தே ஆகும்.  ஒரு ரகரம் ஏற்பட்டுக் காலம் கடந்தபின்னும், குழப்பம் தவிர்க்க வேறுபாடு வேண்டுமென்னும் கோரிக்கை எழுந்த பின்னும் தாம் இரட்டை ரகரமாகிய றகரம் தோன்றியிருக்க முடியும் என்ற கருத்தை உன்னிப் பார்க்கவும். சாத்திரம் என்பது பின் சாஸ்திரம் என்று மெருகு பெற்றதும் சாவு மட்டுமின்றிப் பிற நிகழ்வுகளையும் அலசி ஆய்வு செய்யும் பிற விடயங்களும் அச்சொல்லால் தழுவிக்கொள்ளப்பட்டன.   (ொுள் ிிு ) தெளிவு தோன்றத் தோன்றவே கலைகளும் அறிவியலும் வளர்ந்தன.  இவை இறைவனால் அருளப்பட்டவை என்பது இவற்றைச் சிந்திக்கும் மூளையைக் கொடுத்ததற்காக அவனுக்குச் செலுத்தப்பட்ட நன்றியுணர்ச்சியைக் காட்டுவதே ஆகும்.  கலைகளும் அறிவியலுமோ படிப்படியாகவே வளர்ச்சி பெற்றிருத்தல் கூடும்.  சாவு உட்பட்ட முன்மையான  நிகழ்வுகளைக் கையாண்டவன் பறையன் என்னும் பரையன்.  சடங்குகளென்பவை அவனாலே தொடங்கப்பட்டன.  ஊதியத்திற்காக அவன் இவற்றைச் சாவுகள்தோறும் நடத்தி வந்தான்.  சடங்கு என்ற சொல்லும் அடங்கு என்ற சொல்லின் திரிபே. ஒருவன் இறந்துவிட்ட நிலையில் எல்லாவித நடவடிக்கை டி க் கை யும் உள்ளடங்குமாறு செய்யப்பட்ட தொகுப்புதான் சடங்கு.   அடங்கு > சடங்கு.  இவ்வகைத் திரிபுகள் முன் விளக்கப்பட்டன.  அடு என்பதே  அடிச்சொல். அடுத்து நடப்பதும் அதில் எல்லாம் அடங்கிவிடுதலும் குறிப்பதே சடங்கு. ஒரு சடங்கு பல உள்ளுறுப்புகள் உடைய  தாகலாம். எல்லாம் அடங்கிய தே சடங்கு  ஆகும்.
அகரத திரிபே சகரம்.

https://sivamaalaa.blogspot.com/2017/02/blog-post_92.html

சடங்குகள் பல நிகழ்த்தி வந்தமையாலும்  அவன் நான்கு  வகை நிலங்களிலும் பரவி அதை நிகழ்வித்ததாலும்  பர+ஐயன் =  பரையன் எனப்பட்டான். நாலு வகை நிலங்களுக்கும் -  மருதம்,  நெய்தல், முல்லை, குறிஞ்சி என்ப -  அவன் பொதுவானவன்.  பிற்காலத்து இச்சொல் பறையன் என்று மாற்றி எழுதப்பட்டு அவன் இயக்கிய கிணையும் பறை என்று பெயர் பெறலாயிற்று.  இராமகாதை இயற்றிய வால்மீகி முதலியொரும் சங்கதத்துக்கு இலக்கணம் பாடிய பாணனாகிய பாணினியும் அவன் வழியினரே. சடங்குகட்கு இவன் சிறப்புமொழியைப் பயன்படுத்தியது வியப்பன்று.

இராமகாதை சங்கத இலக்கணம் முதலியவை இந்தியாவிலே இயற்றப்பட்டவை.

சடங்கு என்பதற்கு மறுபெயர் வழங்கவேண்டுமானால் அதற்கு முடிநிகழ்வு என்றுதான் சொல்லவேண்டும். ஒரு பெண் பூப்பு எய்துகிறாள்.  அடுத்து நிகழ்வது ஒரு சடங்கு.  அடுத்த அதனில் யாவும் அடங்கிவிடுகிறது: அதனால் அது ---அடு> அடுத்தல்;  அடு > அடங்குதல் என்பவை ---- சடங்கு என்பதன் நடுவண் கருத்தமைவுகள் ஆகின்றன.

முடிநிகழ்வு :  முடித்துவைக்கும் நிகழ்வு. அதுவே சடங்கு.

குறிப்பு:

கேரளாலில் பரைய அரசன் ஆண்ட ஊர் பரவூர் எனப்பட்டது.  பரவு+ ஊர் = பரவூர். இவனை வீழ்த்தி அவ்வூரை நம்பூதிரிகள் மேற்கொண்டதாக இவ்வூர் மக்களிடை வழங்கும் வரலாறு கூறுகிறது.  நம்+ புது + இரி = நம்பூதிரி:  புதிதாக வந்து தங்கிய கூட்டத்தினர் என்று இச்சொல் பொருள்படுகிறது.

ஒரு வள்ளுவ அரசனிடம் பிராமணன் பாடிப் பரிசில் பெற்ற நிகழ்ச்சி புறநானூற்றில் காணப்படுகிறது.

பெரும் சமஸ்கிருதப் புலவர் வால்மீகி யாரும் பரையரே. இவரே காலத்தால் மூத்த புலவர். பாரதம் பாடியோன் மீனவன் வேதவியாசன்.  சமஸ்கிருத இலக்கணம் அமைத்தவன் பாணனாகிய பாணினியும் பரையன். இதனால் இவையெல்லாம் பிராம்மணர் சூழ்ச்சி என்பது வெறும் ஆதாரமற்ற கூற்றாகிறது. இர் + ஆம் + அன் ( இருள்நிறம் உடையோன்) என்பதும் காரணப் பெயர். இராமன் நீல நிறத்தோன். 

இதற்கு வேறொரு பொருளும் உண்டு.  பரை என்பது பார்வதியையும் குறிக்கும்.எனவே பார்வதியை முற்காலத்தில் வணங்கியவர்கள் என்ற பொருளும் உள்ளது.  அன் விகுதி சேர்த்து,  பரையன் -  அம்மையின் வணக்கம் உடையவன் என்ற பொருளுக்கு,  பிராமணன் - பிரம்மனை வணங்கியவன் என்ற பொருள் மாற்றநிலை காட்டுவதாகிறது.  பரைச்சி - இதுவும் பார்வதியையே குறித்தது.  மேலும் பரை என்பது சிவனருள் பெற்ற நிலையினையும் உணர்த்தும்.  சைவசித்தாந்தத்தில் ஆன்மா சிவனருள் வேண்டி நிற்றல் குறிக்கும்.  பரிபூரண நிலை.  பரையர் ( இன்று பறையர்) இந்நாளிலும் பெரும்பாலும் சிவமதத்தாரே.

இனிப் பரம்பரை என்ற சொல்லின் இறுதிப்பாதி, பரவிநிற்றலைக் குறிப்பதும் காணவேண்டும். இன்று இது வழித்தோன்றல்களைக் குறித்தாலும்,  பரனைப் பரவி நிற்றல் என்ற பொருளும் தொக்கது. பின்னும் பரை நாபியிலிருந்து எழும் ஒலியையும் குறிக்கும்.

பரத்தல் - தொழுதல் என்பது, பரவுதல் கருத்தடிப்படையில் பற > பறையாகி, பரை - பறை என்பனவற்றிடை எழுத்து மாற்றம் ஏற்படுதல் முற்றிலும் ஏற்புடைத்தே ஆகும். குருவி பறத்தலும் ஓரிடத்திருந்து இன்னோரிடத்துப் பரவுதலே.  பறை அடித்தலும் ஒலி பரவுதலே.  பறைதல் என்பதும் சொல் பரவுதலே.  ஆதலின் இச்சொல் முற்காலத்துப் பரை என்றே இருந்தது என்பது தெளிவாகும்.

அறிக மகிழ்க.

சில பாகிகள் சேர்க்கப்பட்டன. மெய்ப்பு பின். 10042021








புதன், 28 நவம்பர், 2018

பரத்தல் சொல்

பரவுதல்:  இச்சொல் எளிய -  தமிழர் யாருக்கும் புரியக்கூடிய சொல் என்று கூறலாம்.  எடுத்துக்காட்டாக: நோய் பரவுதல்;  செய்திகள் பரவுதல்;  நுகர்பொருட்கள் மக்களிடைப் பரவுதல்;  கொள்கைகள் பரவுதல்; விதைகள் கொட்டைகள் இயற்கையில் பரவுதல் என்று பரவுதற்குரிய விடயங்கள் பலவாகும்.

ஒரு பொருள் ஒரே இடத்திலிருக்குமாயின் அது பரவுதல் உடைய பொருளாகாது.  அந்த ஒரு பொருளின் மாதிரியில் பல உண்டாகி இடவிரிவு கண்டு ஆங்காங்கு காணப்படுமாயின்:  முதலாவதாக, ஒன்று பலவானது; இரண்டாவதாக ஒன்றுபோன்ற பிறவும் பரவுதலைச் செய்தன என்று கூறலாம்.    ஆகவே பல், பல என்பது எண்ணிக்கையில் ஒன்றுக்கு மேற்பட்டவையாய் இருத்தல் ஒருவிடயம்; அது இடவிரிவு கொண்டது இன்னொரு விடயமாகும்.   ஆகவே பல், பல, பர, பரவு என்பன பொருள் தொடர்பு உடையன என்பதைக்  கூரறிவால் உணர்தல் வேண்டும்.

இறைவனைப் பாடிப் பர  என்பது ஒரு வாக்கியம். இதில் பர என்பது ஓர் ஏவல் வினையாகும். அவன் நாமத்தைக்  கூடுமானவரை இடமகன்று விரியும்படியாக இசைத்துப் பரப்பு என்பதையே  :  " பர " என்ற சொல் தெளிவுபடுத்துகிறது.  நீ பாடுகையில் ஒரே இடத்தில் நின்று அங்கு மட்டும் கேட்டால் போதாது; அடுத்தவீட்டுக்கும் அப்பாடல் கேட்கவேண்டும்; அதற்கு அடுத்த வீட்டிலும் ஒலி எட்டவேண்டும்; நீ நின்றாலும் நடந்தாலும் கவலையில்லை; ஒலி பரவுக என்பதே பர என்பதன் பொருள்.  இன்னும் சிந்தித்தால் பர என்பது திசைகளெங்கும் அகன்று விரிந்து செல்வதாகிய தரைமட்டப் பெருக்கம் ஆகும்.  A horizontal spread or diffusion  but not entirely excluding any vertical spread.

இதன் தொடர்பில் 'பலகை' என்ற சொல்லையும் கவனிக்கவேண்டும்.  பலகை என்பதைக் கிடத்தினால் அது படுக்கைவாட்டத்தில்  இடம்கொள்வது ஆகும். இச்சொல்லில் வரும் பகரம் இதையே நமக்குத் தெரிவிக்கிறது.  பல் > பல > பலகை என்பது  இப்படிக் கிடப்பு இடக்கொள்வினை நமக்குப் புலப்படுத்துவதாகும்.  தூக்கி நிமிர்த்தினால் நிற்பு  இடக்கொள்வினையும் உணர்த்தும்.

பல் என்ற சொல் ஓர் அடிச்சொல்;  இதுவே பர் > பர என்று ஆனதென்பதை அறிதல் வேண்டும்.  பல் என்பது பன்மை குறித்து இன்று எண்ணிக்கை குறிப்பதாயினும் பர் பர என்றாகி எண்ணிக்கைக்கியலாத இடக்கொள்வினையும் காட்டும் சொல்லாகிவிடுகிறது.   எனவே இந்தக் கூரிய வேறுபாட்டினைத் தமிழ்மொழி சிறுசிறு எழுத்துத் திரிபுகளின் மூலமாகக் காட்டும் திறத்தால் சாதித்துக்கொண்டுள்ளது என்பதை அறிக

பர என்பது திரிந்து பார் ஆகியது.  இது முதனிலை நீட்சித் திரிபு ஆகும். பர என்பது மொழிக்கிறுதியாக அகரத்தைக் கொண்டிருந்தாலும் அது திரிந்து அமையுங்கால் பார் என்று ஒற்றிலேதால் முடிகின்றது. இப்படி முடிவதே தமிழின் இயல்புக்கு ஒத்த வடிவம்கொள்வதாகும். இது உலகம் என்ற பொருளைக் கொண்ட சொல்லாக உருவெடுத்துள்ளது மிக்கப் பொருத்தமே.

இனிப் பாரிவள்ளலுக்கு வருவோம்.  பரந்த புகழுடையோன் பாரி.  இவ்வுலகில் மக்கள்பாலும் மரஞ்செடிகொடிகள் மலை காடு என்பவற்றின் பாலும் நீங்காத பற்றும் அருளும் உடையோன் பாரி. நன்மை எதையும் எதிர்பார்க்காமல் ஒருவனுக்கோ அல்லது உயிருள்ள எப்பொருட்குமோ ஒன்றை உதவுதலே அவன்றன் பண்புநலன் ஆகும்.  இஃது ஓர் பரந்த நோக்கு.  பர > பார்.  இவ்வகையிலும் பரவற் கருத்து மிளிர்வதாகிறது. பாரி என்பது இயற்பெயராயினும் புகழிற்பெற்ற பெயராயினும் பொருத்தமுடைத்தே ஆகும்.  பாரியினால் பாரெல்லாம் ஓர்  கவினுற்றது. முல்லைக்கும் இரங்கி ஒரு தேர் ஈந்தான் பாரி.   இவ்வுலகினுக்குத் தேவையான ஒரு மாந்தனானான்.  ஆகவே பார் > பாரி என்பது இவ்வுலகினன் என்ற பொருளில் நன்றாக அமைந்த பெயராகும். இப்பாருக்கே உரியவன் பாரி ஆனான்.

'இனிப் பரம்பரை என்பது அறிவோம். குடும்பத்தில் புதல்வர்களும் புதல்விகளும் தோன்றுவர்.  (புது +அல் +வு +அர்.  புது+ அல் + வி).இச்சொற்களில் அடிச்சொல் புது என்பதே. இது தமிழ்.  இம்மக்கள்  -  புதுவரவுகள் என்று பொருள். இப்புது வரவுகள் உண்டாக உண்டாக,  உங்கள் குலம் - குடும்பம் பரவும்.   பர+அம் , பர + ஐ:  பரம்பரை.  இது ஒரு பெரிய பொருளுடைய சொல் போல உங்களுக்குத் தோன்றிடினும் இதை வாக்கியமாக்கினால்:  "  பரவுதல் - பரவுதல்" என்று இருமுறை சொல்வதேபோல்தான்  சொற்பொருள் அமைந்துள்ளது..  இதுபோலும் இருமுறை சொல்லிப் பன்மையையும் பெருக்கத்தையும் உணர்த்தும்  இயல்பு சில மொழிகளுக்கு இருக்கிறது. இந்தப் பரம்பரை என்ற சொல்லை அந்த வகையறாவில் தான் சேர்க்கவேண்டும்.( வகையறா என்பதும் அந்த வகையினதான சொல்லே ). வகுத்தலும் அறுத்தலும் துண்டுகளாக்குவதுதான்.

மக்கள் பிறந்து குலம் விரிவு அடைவது :  வேறோன்றுமில்லை,  அது சொல்லமைத்தவர்களில் மொழிப்பாணியிலே சொன்னால்:  பரவுதல் பரவுதல்
குலவிரித்தி > குலவிருத்தி.  விரி= விரு.

விர் > விரு.
விர் > விரி.

அடுத்து,  பரமன் என்ற சொல்லைக் காண்போம்..

இறையுண்மை எப்படி விளக்கப்படுகிறது என்றால் இறை எங்கும் உள்ளதாகும், அஃது இன்மையான இடமொன்றும் எங்கும் இல்லை; இவ்வுலகிலும் இல்லை; இதற்கப்பாலுள்ளதாய்க் கருதப்படும் எந்தவிடத்தும் இல்லை; அது எங்கும் பரந்து நிற்பதொன்றாம்.  ஆகவே பர + அம் + அன் என்ற சொல் பொருத்தமுடைத்தாம். இதனினும் பொருத்தமுடையது பரம்பொருள் என்பதாம். இறைக்குப் பான்மை அல்லது பாலியன்மை  இலது ஆதலின்  பரம் என்று நிறுத்துதலே சரி. பொருள் என்பதும் ஒருவகையில் சரியாயினும் இன்னொரு வகையில் சரியாகத் தோன்றவில்லை.

பொருள் என்பது முன் விளக்கப்பட்ட சொல்லே.  தன்னுள் தான் பொருந்தித் தனித்தியங்குதல் அல்லது இருத்தலை உடையதே பொருள். இதன் அடிச்சொல் பொரு என்பது.  உள் என்பது விகுதி. கடவுள். இயவுள் என்பனபோல. யாமுரைப்பது சொல்லமைப்புப்பொருளே.  அறிவியல் இங்கு கூறப்படாது என்பது உணர்க. உயிரற்றதும் பொருள் எனப்படுதலின் பரம் பொருள் என்பது ஒருவகையில் சரியில்லை. பரம் என்பதுடன் ஒட்டியே பொருளுரைக்க இன்னொருவகையில் அது சரியாகுமென்`க   அதாவது சரியாக உரைதந்து பொருளில் தோன்றுவதாகக் கருதற்குரிய மாறுபாட்டைக் களைதல் வேண்டும். (  தொடரும் )

திருத்தம் பின்.
எழுத்துப்பிழைகள் சில சரிசெய்யப்பட்டுள.